ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29ம் தேதி உலக பக்கவாத தினமாக அனுசரிக்கப்படுகிறது. வயதாகும்போது பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆண்களை விட, பெண்களுக்கே பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். சைலண்ட் கில்லர் நோயாகக் கருதப்படும், இந்த நோய் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பக்கவாதம் ஏற்படக் காரணங்கள்:
1. உயர் இரத்த அழுத்தம் மற்றும் கட்டுப்பாடற்ற நீரிழிவு.
2. குடும்பத்தில் யாருக்கேனும் பக்கவாதம் தாக்கியிருத்தல்.
3. உடல் பருமன், குறிப்பாக இடுப்பைச் சுற்றி.
4. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள்; பதப்படுத்தப்பட்ட உணவு, அதிக உப்பு நிறைந்த உணவுப் பொருட்கள் மற்றும் அதிகக் கொழுப்பு, டிரான்ஸ் கொழுப்பு அல்லது நிறைவுற்ற கொழுப்புகள் அடங்கிய உணவுப் பொருட்கள் ஆகியவற்றை உண்பது.
5. புகையிலை போடுவது, சிகரெட் பிடித்தல், மது அருந்துதல்.
6. அதிக அளவு கவலை, மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு.
7. இரத்தப்போக்குக் கோளாறு இருப்பது.
8. நீரிழிவு, இருதய நோய்கள் மற்றும் இதய வால்வு குறைபாடுகள் போன்ற நாள்பட்ட நோய்கள்.
9. வேலை செய்யாமல் உட்கார்ந்த வாழ்க்கை முறை.
தடுப்பு முறைகள்:
1. குறைந்த இரத்த அழுத்தத்தை மெயின்டெயின் செய்வது: உயர் இரத்த அழுத்தம் பக்கவாதம் வருவதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இரத்த அழுத்தம் உயர்ந்தால் உடனடியாக கவனிக்க வேண்டும்.
120/80 இந்த அளவு எப்போதும் இருக்க வேண்டும். சிலருக்கு 140/90 இருக்கலாம்.
2. குறைந்த அளவு உப்பு: உணவில் உப்பை குறைக்க வேண்டும். ஒரு முழு நாளுக்குமே ஒருவருக்கு 1500 மில்லி கிராம் (அரை டீஸ்பூன்) உப்பு போதும்.
3. கொழுப்பு உணவுகளை தவிர்த்தல்: அதிக கொழுப்புள்ள உணவு வகைகளான ஆட்டு இறைச்சி, பொறித்த வறுத்த உணவுகள், இனிப்பு வகைகள், பர்கர், பாலாடைக் கட்டி, ஐஸ்கிரீம், பேக்கரி ஐட்டங்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
4. ஆரோகியமான உணவு உட்கொள்ளல்: தினமும் நான்கு முதல் ஐந்து கப்புகள் பழங்கள், காய்கறிகள் உண்ண வேண்டும். இறைச்சி எடுத்துக் கொள்பவராக இருந்தால் வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை மீன் சாப்பிடலாம். முழு தானியங்கள், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.
5. புகை, மது, போதைப் பொருட்களுக்கு தடா: புகையிலை போடுவது, புகைப்பிடிப்பவராக இருந்தால் அதை விட்டு விட வேண்டும். மதுவையும்,போதைப் பழக்கத்தையும் கட்டாயம் தவிர்க்கவும்.
6. எடை குறைப்பு: உடல் பருமனும் பக்கவாதம் வருவதற்கு முக்கியமான காரணி. உயரத்திற்கேற்ற சரியான எடை இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு 1500 லிருந்து 2000 கலோரிகள் மட்டும் உணவு எடுத்துக் கொண்டால் போதும்.
7. நடை மற்றும் உடற்பயிற்சி: தினமும் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பாக நடக்க வேண்டும். அத்துடன் சுறுசுறுப்பான உடற்பயிற்சியும் தேவை.
8. தியானம், மூச்சுப்பயிற்சி: மனச்சோர்வு மற்றும் மன அழுத்தமின்றி பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு தியானம், மூச்சுப்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டு மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும்.