நம் உடல் முழு ஆரோக்கியத்துடன் இயங்க உதவிபுரியும் பல வகையான ஊட்டச்சத்துக்களில் ஏதாவது ஒன்றில் குறைபாடு ஏற்படும்போது அதன் அறிகுறியாக உடல் நலனில் சில கோளாறுகள் உண்டாகும். மாதவிடாய் கால இரத்த இழப்பு, அதிக வேலைப் பளு போன்ற காரணங்களால் பெண்களின் உடலில் சத்துக் குறைபாடு உண்டாவதற்கு வாய்ப்பு அதிகம். எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய கால்சியம் சத்து குறையும்போது என்னென்ன அசௌகரியங்கள், மாற்றங்கள் ஏற்படும் என்பதைக் காண்போம்.
கால்களின் பின்பக்க தசைகளில் பிடிப்பு (Cramp) ஏற்படுவது கால்சியம் சத்துக் குறைபாட்டின் (Hypocalcemia) பொதுவான அறிகுறியாகும். நரம்புகள் இழுத்துக் கொண்டு தசைகளில் கடினத் தன்மையும் வலியும் உண்டாவது சகஜம்.
விரல்கள், பாதம் மற்றும் வாயைச் சுற்றியுள்ள பகுதியில் கூச்சமான உணர்வு ஏற்படுவதும், சில நேரங்களில் இப்பகுதி உணர்ச்சியற்றுப் போவதும் கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகளேயாகும்.
அவ்வப்போது சோர்வடைவதும் சக்தியின்றிப் போவதும் கால்சியம் அளவு குறைவதால் ஏற்படுவதேயாகும். இந்நிலையில் உடலின் மொத்த சக்தியின் அளவில் குறையேற்பட்டு தினசரி வேலைகளை செய்வதிலும் சிரமம் உண்டாகும்.
கால்சியம் சத்து குறையும்போது சரும வறட்சியுற்று அதன் சீரான நிலையில் மாறுபாடு உண்டாகும். நகங்களின் வளர்ச்சி குறையும்; அவற்றின் கடினத்தன்மை குறைந்து சுலபமாக உடைந்துவிடும் தன்மையடையும்.
நாளடைவில் கால்சியம் குறைபாடு காரணமாக ஆஸ்டியோபொரோஸிஸ் நோய் எலும்புகளைத் தாக்கக் கூடும். இதனால் எலும்புகள் வலுவிழக்கும்; எலும்புகளில் வலி உண்டாகும். மேலும் எலும்பு முறிவு ஏற்படும் அபாயமும் உண்டாகும்.
ஆரோக்கியமான பற்களின் அமைப்பிற்கு கால்சியம் மிகவும் அவசியம். இதன் அளவு குறையும்போது பற்சிதைவு, பற்கள் பலமின்றி உடையும் நிலையை அடைவது, ஈறுகளில் நோய்த் தாக்கம் போன்ற கோளாறுகள் உண்டாக வாய்ப்பாகும்.
இதயத்தின் செயல்பாடுகளிலும் கால்சியம் முக்கியப் பங்காற்றுகிறது. அதன் அளவில் குறையேற்படும்போது இதயத் துடிப்பு முறையற்றதாகி படபடப்பு உண்டாகிறது. ஹைப்போகால்சிமியா, நரம்பு மண்டலத்திலும் தாக்கத்தை உண்டுபண்ணி மன அழுத்தம், எரிச்சல், ஞாபக சக்தி குறைதல், மனக்குழப்பம் போன்ற கோளாறுகள் வரும் அறிகுறிகள் உண்டாகச் செய்கிறது.
நோயற்ற வாழ்விற்கு உண்ணும் உணவில் கவனம் செலுத்தி ஊட்டச்சத்து குறைபாடின்றி ஆரோக்கியம் காப்போம்.