
நம் வயது முப்பதை தாண்டிச் செல்லும் போது உடலின் சருமத்தில் ஆங்காங்கே சில மாறுதல்கள் காணப்படுவது சகஜம். திடீரென சருமத்தில் சிவப்பு நிறத்தில் சிறு வீக்கம் போன்றதொரு தோற்றம் உண்டாகியிருந்தால், அதைப் பார்த்து யாராயிருந்தாலும் சிறிது அதிர்ச்சியடைவது இயற்கை. அந்த வீக்கம் ஆபத்தானதா? அபாயகரமான நோயின் அறிகுறியா? என பல கேள்விகள் மனதில் தோன்றும். அதனை 'செர்ரி ஆஞ்சியோமா' எனக் கூறுவதுண்டு.
இது நூலிழை போன்ற நுண்ணிய இரத்தக் குழாய்களின்(capillaries) கூட்டு அமைப்பாகும். சருமத்தின் மேற்பரப்பிற்கு அடியில் இவை குழுமியிருக்கும். செனைல் (Senile) ஆஞ்சியோமா என்றும் இதைக் கூறுவதுண்டு.
செர்ரி ஆஞ்சியோமா வட்ட அல்லது ஓவல் வடிவம் கொண்டது. ஒரு குண்டூசியின் தலை அளவிலேயே இது இருக்கும். சிவப்பு அல்லது பர்ப்பில் நிறத்தில் வழு வழுப்பான தன்மையுடனிருக்கும். மார்புக்கும், வயிற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் தோன்றும். கை, கால் மற்றும் தலையின் ஸ்கேல்ப்பிலும் காணப்படும்.
செர்ரி ஆஞ்சியோமா புற்றுநோயின் அறிகுறி அல்ல. அவை உடலுக்கு எந்தவிதமான பாதிப்பையும் உண்டு பண்ணக் கூடியதல்ல. அதற்கு எந்த வித மருத்துவ உதவியும் தேவையில்லை. விரலின் நகத்தால் சொரிந்து விட்டாலோ அல்லது கிள்ளி விட்டாலோ இரத்தம் வரக் கூடும். அதைப் பார்த்து அச்சப்படத் தேவையில்லை. சிலருக்கு அதன் தோற்றம் அருவறுப்பாகவும், எரிச்சலூட்டுவதாகவும் இருக்கும்.
அதன் உருவத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ அல்லது அதிலிருந்து அதிகளவு இரத்தம் கொட்டினாலோ அல்லது நீங்கள் அதை நீக்க விரும்பினாலோ மருத்துவரை அணுகலாம். திடீரென இவை அதிகளவில் காணப்பட்டால், சில மருந்துகளின் பக்க விளைவாகவோ அல்லது வேறு நோய் ஏதாவது உடலை தாக்குவதற்கான அறிகுறியாகவோ இது தோன்றுகிறதா? என்பதை அறிய மருத்துவர் ஆலோசனையைப் பெறலாம்.
விஞ்ஞான ரீதியாக இது தோன்றுவதற்கான சரியான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. முப்பதுக்கு மேல் வயதானவர்களுக்கு இது தோன்றுவதற்கு வாய்ப்புள்ளது. மரபு ரீதியான காரணங்களினாலும் இது தோன்றலாம்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு ஹார்மோன் சுரப்பில் உண்டாகும் மாற்றம் மற்றும் அதிகப்படியான இரத்த நாளங்களின் வளர்ச்சி போன்ற காரணங்களால் செர்ரி ஆஞ்சியோமா தோன்றலாம். இதன் வரவை தடுக்க முடியாது. பிறரிடமிருந்து இதைப் பெறவும் முடியாது. உங்கள் உடம்பில் செர்ரி ஆஞ்சியோமா தென்பட்டால் பீதியடையாதீங்க.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)