மென்று சாப்பிடுங்கள்; மெதுவாய் சாப்பிடுங்கள்!

உணவு சாப்பிடும் பெண்
உணவு சாப்பிடும் பெண்
Published on

ம்மில் பலர் உணவை வேக வேகமாக சாப்பிடும் வழக்கம் உடையவர்களாக உள்ளார்கள். சிலர் உணவை ரசித்து, ருசித்து வெகுநேரம் சாப்பிடுபவர்களாக உள்ளார்கள்.  சிலர் பசித்தாலும் பசிக்காவிட்டாலும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.  சிலர் உணவின் மீது ஆர்வம் இல்லாமல் கடனே என்று சாப்பிடுவார்கள். சிலர் புத்தகத்தைப் படித்துக் கொண்டே சாப்பிடுவார்கள். மற்றும் சிலர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்த்தவண்ணம் என்ன உணவை சாப்பிடுகிறோம் என்பதைப் பற்றிய சிந்தனையின்றி சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள். உணவை எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதை விளக்குவதுதான் இந்த பதிவு.

‘மென்று தின்பவன் நூறாண்டு வாழ்வான்’ என்பது முதுமொழி. உணவை எப்படிச் சாப்பிட வேண்டும் என்றொரு முறை இருக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் சாப்பிடும்போது வேறு எந்த சிந்தனையும் இருக்கவே கூடாது.  சாப்பாட்டில் மட்டுமே நம் கவனம் முழுக்க இருக்க வேண்டும். உணவினை ரசித்து, ருசித்து முடிந்த அளவிற்கு மென்று சாப்பிட வேண்டும். நாம் சாப்பிடும் உணவு நன்கு அரைபட வேண்டும். மேலும், அதோடு உமிழ்நீரும் போதிய அளவு கலந்து உள்ளே செல்ல வேண்டும். அப்போதுதான் உணவும் எளிதில் ஜீரணமாகும். நாம் சாப்பிடும் உணவு நன்கு ஜீரணமானால் வியாதிகள் அவ்வளவு சுலபத்தில் நம்மை அணுகாது.

ஒருவர் ஜென் குருவைப் பற்றிக் கேள்விப்பட்டார். அவர் மிகச்சிறந்த குரு என்று அனைவருமே அவரிடம் சொன்னார்கள்.  அந்த மனிதருக்கு அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.

ஒரு நாள் அந்த மனிதருக்கு ஜென் குருவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் ஜென் குருவிடம், “உங்களுடைய கொள்கைதான் என்ன ?” என்று கேட்டார்.

இக்கேள்விக்கு மிக எளிமையாக பதிலளித்தார் ஜென் குரு. “பசி எடுத்தால் சாப்பிடுவதும், தூக்கம் வந்தால் தூங்குவதும்தான் என் கொள்கை” என்றார்.

கேள்வி கேட்டவர் இதை எதிர்பார்க்கவில்லை. ‘வேறு எதையோ விரிவாகச் சொல்வார் என்று நினைத்தால் ஜென் குரு மிகச் சாதாரணமாய் இப்படிச் சொல்லிவிட்டாரே’ என்று அவருக்குத் தோன்றியது.

“நீங்கள் சொல்வதை நான் உட்பட அனைவருமே தினமும் செய்து கொண்டிருக்கிறோம்.  நீங்கள் ஜென் குரு. நாங்கள் செய்யும் சாதாரணமான இச்செயல்களை நீங்களும் செய்வதாகக் கூறுகிறீர்களே ?” என்றார்.

இதற்கு ஜென் குரு சிரித்தபடியே, “நீங்கள் செய்வதற்கும் நான் செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நீங்கள் சாப்பிடும் வேளைகளில் உங்களுடைய மனம் சாப்பாட்டில் நிலைத்திருக்காது. வேறு எதை எதையோ நினைத்தபடியே நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்பீர்கள். ஆனால், நான் சாப்பிடும் போது முழுக்க முழுக்க சாப்பாட்டைப் பற்றி மட்டுமே சிந்திப்பேன். நீங்கள் தூங்கும்போது உங்கள் மனத்தில் இருக்கும் குழப்பம், கவலை காரணமாக கனவு உலகத்தில் அலைகிறீர்கள். ஆனால், நான் தூங்கும்போது எனக்கு நிகழ்வது தூக்கம் மட்டுமே. கனவு வரவே வராது. சுருக்கமாகச் சொன்னால் எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் அந்தக் காரியமாக மாறிவிடுவது என் இயல்பு” என்றார்.

இதையும் படியுங்கள்:
சோலார் எனர்ஜியால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?
உணவு சாப்பிடும் பெண்

குரு சொன்னதின் உள்ளர்த்தம் கேள்வி கேட்டவருக்கு இப்போது விளங்கியது.  குருவின் பெருமையும் அவருக்குப் புரிந்தது.

சரியாக அரைக்கப்படாத உணவை வயிற்றுக்கு அனுப்பி வயிற்றிக்கு அதிக வேலை கொடுக்கக் கூடாது. இறைவன் பல் என்ற ஒன்றை காரணமின்றி படைத்திருக்க மாட்டான். உணவை நன்கு மென்று தின்பதற்காகவே பற்களை மிக வலிமையாகப் படைத்திருக்கிறான். பின்னர் எதற்கு அவசரம்? எந்த ஒரு உணவையும் ரசித்து, ருசித்து சாப்பிட வேண்டும். அப்போதுதான் அந்த உணவை சாப்பிட்டதற்கான பலன் நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.

சுவையான உணவை வேக வேகமாக சாப்பிட்டு சுவையை அனுபவிக்காமல் விட்டுவிடாதீர்கள். நிதானமாக மென்று சாப்பிடுங்கள். ரசித்துச் சாப்பிடுங்கள்.   உணவின் சுவையினையும் அனுபவிக்கலாம். இதன் மூலம் உமிழ்நீரும் போதிய அளவில் சுரந்து உணவும் சீக்கிரமாக ஜீரணமாகும்.

பசித்த பின்னர் சாப்பிடும் வழக்கத்தை கடைபிடியுங்கள். ஒரு வாரத்தில் அறுசுவை உணவுகளையும் சாப்பிடுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு மற்றும் உவர்ப்பு இவையே அறுசுவைகளாகும். அறுசுவை உணவுகளும் உடலுக்குள் சென்றால் உடல் அனைத்து சக்திகளையும் பெற்று சிறப்பாக இயங்கும். இவற்றைச் செய்து பாருங்கள், பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com