அதிகமான கொலஸ்ட்ரால் அளவு உடலின் ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக கெடுத்துவிடும். குறிப்பாக இதய ஆரோக்கியத்திற்கு கொலஸ்ட்ரால் நல்லதல்ல. எனவே உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவை சியா விதைகள் குறைக்கும் என சொல்லப்படுகிறது. இந்த விதைகளில் அதிகப்படியான நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிரம்பியுள்ளதால், எடை இழப்புக்கு உதவும்.
சியா விதைகளை பல்வேறு வழிகளில் நாம் உணவாக எடுத்துக் கொள்ளலாம். இது நம் உடல் எடையை குறைப்பது மட்டுமின்றி, உடலுக்குத் தேவையான பல நன்மைகளை வழங்குகிறது. கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் இதன் பங்கு அதிகம் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளது - சியா விதிகளில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தி சீராக்கும். இந்த நார்ச்சத்து, செரிமானத்தை சிறப்பாக மாற்றி ரத்தத்தில் கொழுப்பு கலப்பதை தடுக்கிறது. இதனால் உடலில் கெட்ட கொழுப்பின் அளவு குறையும். நார்ச்சத்து காரணமாக நம் செரிமானத்திற்கும் இது நல்லது.
சர்க்கரை அளவை சீராக்கும் - இதய ஆரோக்கியம் நன்றாக இருக்க உடலில் நிலையான ரத்த சர்க்கரை அளவு இருப்பது அவசியம். இதில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் பண்புகள் நிறைந்துள்ளது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இது செரிமானத்தின்போது கார்போஹைட்ரேடுகள் அதிகம் உறிஞ்சப்படுவதை தடுத்து, திடீரென இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுக்கிறது.
ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது - சியா விதைகள் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாகும். இது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
எடையை கட்டுப்படுத்தும் - ஆக்சிஜனேற்ற பண்புகள் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து நம் செரிமானத்தை ஊக்குவிப்பதால், வளர்ச்சிதை மாற்றம் வேகமாக இருக்க உதவுகிறது. இதனால் சியா விதைகளை சாப்பிட்டால் ஒரு நிறைவான உணர்வை நமக்கு ஏற்படுத்தி, உடல் எடை குறைய வழிவகுக்கும். உடல் எடையைக் குறைத்தால் கொலஸ்ட்ராலின் அளவும் குறைய ஆரம்பிக்கும்.
மேலும் இதில் ரத்த அழுத்தத்தை நிர்வகிக்கும் பண்புகளும் இருப்பதால், சியா விதைகளை நம் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இந்த விதைகளை ஓட்ஸ், சாலட், ஸ்மூத்தி போன்றவற்றில் சேர்த்தும் சாப்பிடலாம்.