
உங்கள் குழந்தை அடிக்கடி நோயினால் பாதிக்கப்படுகிறதே என வருத்தமாய் உள்ளதா? குழந்தைகள் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாவது சகஜமானதொன்று தான். அதற்கான சரியான காரணத்தைக் கண்டுபிடித்து குணமாக்குவதும் சுலபம்தான். குழந்தைகளுக்கு உடல் நலக் கோளாறு உண்டாவதற்கான 10 வகை காரணங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் என்ன என்பதையும் இப்பதிவில் பார்க்கலாம்.
1. வெளியில் விளையாடிவிட்டு வீடு திரும்பும் குழந்தை தன் கைகளை கழுவாமல் அல்லது சரியான முறையில் கழுவாமலிருப்பது ஒரு முக்கிய காரணம். குழந்தைக்குப் பிடித்த நிறத்தில், நல்ல வாசனையும் உடைய ஹேண்ட் வாஷ் வாங்கி வைப்பது அவர்களை சரியான முறையில் கைகளைக் கழுவிக்கொள்ள ஊக்குவிக்கும்.
2. இரவில் போதுமான அளவு தூக்கம் பெறாத குழந்தையின் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, ஒவ்வொரு நாள் இரவிலும் குழந்தைக்கு நல்ல ஓய்வு கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
3. டே கேர் சென்டர் மற்றும் ஸ்கூல் சென்று வரும் குழந்தைகள் தங்களுடன் நோய்க் கிருமிகளையும் கொண்டு வர வாய்ப்புள்ளது. ஆகவே, அவர்களுக்கு, அவர்களின் பொருட்களை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்வது என்றும், சுகாதாரமற்ற பொருட்களை விட்டு விலகியிருப்பது எப்படி என்பதையும் கற்றுக்கொடுங்கள்.
4. கிருமிகளிடமிருந்து குழந்தைகளைக் காக்க அதிகளவு பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவதும் சில சமயம் நமக்கு எதிர்மறை விளைவுகளை உண்டாக்குவதாகிவிடும். குழந்தைகளின் நோயெதிர்ப்பு மண்டல செல்கள், கிருமிகளின் திடீர்த் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் போகும்போது, நோய் உண்டாகும் வாய்ப்பு உருவாகிவிடும்.
5. குழந்தைகளின் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க அவர்களுக்கு அடிக்கடி பச்சை இலைக் காய்கறிகள், பழங்கள், யோகர்ட் போன்ற ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளக் கொடுத்து வருவது அவசியம்.
6. குழந்தைகளை தினமும் சில மணி நேரமாவது பார்க் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று, ஊஞ்சல் ஆடுதல், சறுக்கு மரத்தில் ஏறி சறுக்குதல் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடச் செய்வது அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
7. குழந்தைகளுக்கு இருமும்போதும், தும்மும்போதும் வாயை மூடிக் கொள்ளச் சொல்லிக் கொடுப்பது மிக நல்லது. அதன் மூலம் நோய்க் கிருமிகள் காற்றில் பரவி மற்றவர்களை பாதிப்படையச் செய்வது தடுக்கப்படும்.
8. குழந்தைகளுக்கு அதிகளவு சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கிக் கொடுத்து உண்ணச் செய்வதும் அடிக்கடி நோய் உண்டாவதற்கான காரணமாகும். ஏனெனில் அந்த மாதிரி உணவுகளில் ஊட்டச் சத்துக்கள் குறைவு. மேலும், பற்சிதைவு மற்றும் உடல் பருமன் போன்ற உடல் நலக் கோளாறுகள் உண்டாகும் அபாயம் ஏற்படவும் இவ்வகை உணவுகள் வழி வகுக்கும்.
9. அடிக்கடி ஸ்கூல் மாறுவது போன்ற நிகழ்வுகள் குழந்தை மனதில் ஸ்ட்ரெஸ் உண்டாகக் காரணமாகி அவர்கள் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகவும் வாய்ப்பாகும். ஆரோக்கியமான முறையில் மாற்றங்களை எதிர்கொள்ள குழந்தைக்கு கற்றுக் கொடுப்பது பெற்றோரின் கடமைகளில் ஒன்று.
10. சின்னதா ஒரு ஆரோக்கியக் குறைபாட்டின் அறிகுறி தோன்றும்போது, உடனே சக்தி வாய்ந்த மருந்துகளை வாங்கி குழந்தைக்கு கொடுப்பதும் குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை குறையச் செய்யவே உதவும். எனவே, ஒன்றிரண்டு நாட்கள் பொறுத்த பின் செயலில் ஈடுபடுவது சிறந்த பலன் தரும்.
மேலே கூறப்பட்ட ஆலோசனைகளைப் பின்பற்றி பெற்றோர் தங்கள் குழந்தைகளை நோயின்றிப் பாதுகாக்கலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு தகுந்த மருத்துவரை அணுகவும்)