
பல பெற்றோர்கள் சதாசர்வகாலமும் தங்கள் குழந்தைகளின் திறமைகளை பிறரிடம் சொல்லிச் சொல்லி பெருமைபட்டுக்கொண்டே இருப்பார்கள். தங்கள் குழந்தைகளைத் தாங்களே பாராட்டி மகிழ்வார்கள். உறவினரோ அல்லது நண்பரோ யாராவது வீட்டிற்கு வந்தால் போதும். முதல் வேலையாக தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து அவர்களின் முன்னே நிறுத்தி ரைம்ஸ்களை எல்லாம் சொல்லச் சொல்லுவார்கள்.
அதுவும் எல்லாம் ஆங்கிலப் பாடல்களாக இருக்கும். பெயருக்குக் கூட ஒரு தமிழ்ப்பாடல் இருக்காது. குழந்தையும் கடனே என்று தனக்குத் தெரிந்த ரைம்ஸ்களை ஒரு ரோபோ போல சொல்லிக் கொண்டிருக்கும். வந்தவர்களும் வந்த இடத்தில் குழந்தையின் பெற்றோர்களின் மனது கஷ்டப்படப் போகிறதே என்று “ஆஹா பிரமாதம். வெல்டன்“ என்றெல்லாம் பொய்யாகப் பாராட்டுவார்கள்
“என் பையனுக்கு மூணு வயசுதான் ஆகுது. இதுக்குள்ளே எல்லா நாட்டோட தலைநகரையும் சொல்றான் தெரியுமா?” “என் பொண்ணுக்கு எல்லாத் திருக்குறளும் மனப்பாடம்”. “என் பையன் கராத்தேலே பிரௌன் பெல்ட் வாங்கிட்டான். இன்னும் கொஞ்ச நாள்லே பிளாக் பெல்ட் வாங்கிடுவான்.” “என் பொண்ணு இப்பவே கம்ப்யூட்டர்லே ப்ரோகிராம் எல்லாம் எழுதறா ?”
மேலே உள்ளவை எல்லாம் சின்ன சாம்பிள்தான். இன்னும் எவ்வளவோ பெருமைகள் இருக்கின்றன. இதையெல்லாம் விட கொடுமை “என் பையன் ஏபிசிடிஐத் தலைகீழாச் சொல்லுவான் தெரியுமா?” என்பார்கள். ஏபிசிடிஐ எதற்காக தலைகீழாகச் சொல்ல வேண்டும். இவற்றையெல்லாம் கேட்கும் உறவினர்களும் நண்பர்களும் உங்கள் குழந்தைகளைப் பற்றிப் பிறரிடம் பெருமையாக பேசமாட்டார்கள். மாறாக மனதில் ஒருவித எரிச்சலுடன்தான் விடைபெறுவார்கள்.
எல்லா குழந்தைகளுக்கும் ஒரு தனிப்பட்டத் திறமை இருக்கிறது. அதை இனம் கண்டு வளர்த்துவிடும் பொறுப்பு ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டு. நம் குழந்தைகளின் பெருமையை நாமே பேசக்கூடாது. அவர்களின் திறமையைக் கண்டு வியந்து பிறர் பாராட்ட வேண்டும். அதில்தான் ஒவ்வொரு பெற்றோருக்கும் பெருமை இருக்கிறது.
நம் குழந்தைகள் எதைக் கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள் என்பதைக் கண்டறிந்து அதில் அவர்களுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும். பயிற்சி பெறும் சமயத்தில் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ன கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் ஒருவருக்கும் சொல்லக்கூடாது. குழந்தைகள் அந்த கலையை முழுமையாகக் கற்றுத் தேர்ந்து அதை அவர்கள் காட்சி ஊடகங்களில் வெளிப்படுத்தி வெற்றி பெறும்போது அந்த செய்தி அச்சு ஊடகங்களில் வெளியிடப்படும். அதைப் பார்த்து பிறர் பெருமையும் ஆச்சரியமும் வியப்பும் அடையவேண்டும்.
பிறர் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பாராட்ட வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு விருப்பமில்லாத எதையும் திணிக்கக் கூடாது. உதாரணமாக உங்களுக்கு பாட்டு பிடிக்கும் என்றால் அதை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. அவர்களுக்கு ஓவியத்தில் ஆர்வம் இருந்து அந்த கலையில் உங்களுக்கு ஆர்வம் இல்லை என்றாலும் அதைப் பற்றி பெற்றோராகிய நீங்கள் கவலைப்படக்கூடாது.
உங்கள் குழந்தைகளுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதை அவர்கள் கற்றுக் கொள்ளும்படி செய்ய வேண்டியது பெற்றோராகிய உங்கள் பொறுப்பு என்பதை நீங்கள் உணரவேண்டும். அப்போதுதான் உங்கள் குழந்தைகள் பெரிய சாதனையாளர்களாக ஜொலிப்பார்கள்.
ஒவ்வொருவருக்கும் தங்களுடைய குழந்தைகள் அறிவாளிகள் பெரும் திறமைசாலிகள் என்று நினைப்பது இயற்கைதான். ஆனால் தற்காலத்தில் எல்லா குழந்தைகளுமே சற்று அதிகப்படியான அறிவாற்றலுடன் திறமைகளுடன் உள்ளார்கள் என்பதும் உண்மை.
உங்கள் குழந்தையின் திறமைகளை ஊர் உலகம் அறிந்து வியந்து அவர்களைப் பாராட்ட வேண்டும். மாறாக நீங்களே பார்ப்பவர்களிடம் எல்லாம் உங்கள் குழந்தைகளைப் பற்றி பெருமை பேசி பாராட்டி மகிழ்ந்தால் அதனால் ஒரு நன்மையும் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.