உங்கள் குழந்தை இரவில் மூச்சு விட சிரமப்படுகிறதா? இதோ மருத்துவரின் எச்சரிக்கை!

தூக்கத்தில் உங்கள் குழந்தை வாயைத் திறந்து சுவாசிப்பதன் பின்னணியில் இருக்கும் ஆபத்தான காரணங்கள் என்ன?
Child Nasal congestion | மூக்கடைப்பு
Child Nasal congestion | மூக்கடைப்புAI Image
Updated on

பகல் முழுவதும் சுறுசுறுப்பாக விளையாடும் குழந்தை, இரவு படுத்தவுடன் மூக்கடைப்பால் அவதிப்படுவது பல பெற்றோர்களை கவலைப்படுத்தும். 'சளி பிடித்திருக்கும்' என்று நினைத்து அலட்சியம் செய்வது சரியல்ல. சில குழந்தைகளுக்கு இது சாதாரண ஜலதோஷத்தின் அறிகுறியாக இருந்தாலும், வேறு பல மருத்துவக் காரணங்களும் இருக்கலாம்.

இது குறித்து விளக்குகிறார் மருத்துவர் க. இராவணன் குழந்தைகள் நல மருத்துவர்.

குழந்தைகளில் இரவில் மூக்கடைப்பிற்கு மிகவும் பொதுவான காரணம் ஒவ்வாமை (Allergic Rhinitis) ஆகும். வீட்டு தூசி, தூசிப்பூச்சி (Dust mites), பூக்களின் மகரந்தம், பூஞ்சைக் கிருமிகள், செல்லப்பிராணிகளின் முடி போன்றவை ஒவ்வாமையைத் தூண்டலாம். இதனால் மூக்கின் உட்புறச் சவ்வு வீங்கி, குறிப்பாக இரவில் படுக்கும்போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும் தூங்க முடியாமல் அவதிப்படுவர். அடிக்கடி தும்மல், மூக்கு அரிப்பு, கண் அரிப்பு ஆகியவையும் இணைந்து காணப்படும்.

மற்றொரு முக்கிய காரணம் அடினாய்டு (Adenoids) சதை பெரிதாகுதல் ஆகும். அடினாய்டு என்பது மூக்கின் பின்பகுதியில் இருக்கும் நோய் எதிர்ப்பு திசு. சில குழந்தைகளில் இது அதிகமாக வளர்ந்து காற்றுப்பாதையை மறைக்கலாம். இதனால் இரவில் குறட்டை, வாயைத் திறந்து தூங்குதல், அமைதியற்ற தூக்கம், சில சமயங்களில் தூக்கத்தின் போது சில விநாடிகள் மூச்சு நின்றுபோவது போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அடிக்கடி காது தொற்று மற்றும் கேட்கும் திறன் குறைவதும் இதனுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

சைனுசைட்டிஸ் (Sinusitis) எனப்படும் சைனஸ் அழற்சியும் நீடித்த மூக்கடைப்பை ஏற்படுத்தும். பச்சை அல்லது மஞ்சள் நிற மூக்குச்சளி, தலைவலி, இரவு நேர இருமல், துர்நாற்றமுள்ள மூச்சுக் காற்று போன்ற அறிகுறிகள் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சிறுநீர் கசிவு பிரச்னையா? காரணங்களும் நவீன சிகிச்சை முறைகளும் இதோ!
Child Nasal congestion | மூக்கடைப்பு

வைரஸ் ஜலதோஷம், மூக்கில் சதை வளர்ச்சி (Nasal polyps – குழந்தைகளில் அரிது), மூக்கின் உள்ளே சிக்கியுள்ள சிறிய வெளிப்பொருள் (foreign body), மூக்குத் தண்டின் வளைவு (Deviated Nasal Septum), சுற்றுச்சூழல் மாசு, புகைபிடிக்கும் நபர்களின் புகை, குளிர்சாதன (AC) அறையில் உறங்குதல் போன்ற காரணங்களாலும் மூக்கடைப்பு ஏற்படலாம்.

பெற்றோர்கள் தாங்களாகவே மூக்குச் சொட்டு மருந்துகளை பயன்படுத்தக் கூடாது. குழந்தை போதுமான தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யவும். படுக்கையறையை தூசியில்லாமல் சுத்தமாக வைத்திருக்கவும். தலையணை உறைகள் மற்றும் படுக்கை விரிப்புகளை வாரம் ஒருமுறை மாற்றுவது நல்லது. மருத்துவரின் ஆலோசனையின்படி உப்புநீர் (Saline) மூக்குச் சொட்டுகள் அல்லது மூக்கு கழுவுதல் நல்லது.

உங்கள் குழந்தைகளுக்கு இன்ஃப்ளூயன்ஸா, நியுமோனியா போன்ற நோய்களைத் தடுக்கும் தடுப்பூசிகளை மருத்துவர் பரிந்துரைத்தால் தவறாமல் போடுங்கள். இது சுவாச மண்டலத்தை பெரும்பான்மை நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

இதையும் படியுங்கள்:
பெரி-பெரி நோயைத் தவிர்க்கணுமா? வைட்டமின் B1 நிறைந்த உணவுகள் இதோ!
Child Nasal congestion | மூக்கடைப்பு

இரண்டு வாரங்களுக்கு மேல் மூக்கடைப்பு நீடித்தாலோ, குறட்டை அதிகமாக இருந்தாலோ, வாய்வழி மட்டுமே மூச்சுவிட்டாலோ, மீண்டும் மீண்டும் காது அல்லது சைனஸ் தொற்று ஏற்பட்டாலோ, குழந்தை நல மருத்துவர் அல்லது காது–மூக்கு–தொண்டை (ENT) நிபுணரை அணுகுவது அவசியம். சரியான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தால், குழந்தையின் தூக்கமும், உடல் நலனும் சீரடையும்.

logo
Kalki Online
kalkionline.com