

கட்டுப்படுத்த முடியாமல் சிறுநீர் வெளியேறுவதை ஒரு சாதாரண நிகழ்வு எனக் கருதி ஒதுக்கி விட முடியாது. இந்த குறைபாடு பொதுவாக ஆண் பெண் இரு பாலருக்கும் வரக் கூடியது. பலரும் இதை வெளியில் சொல்ல சங்கடப்பட்டுக்கொண்டும், விழிப்புணர்வு இல்லாமலும், வயதானல் இதெல்லாம் சகஜம் என்ற நினைப்பிலும் அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து மருத்துவ உதவி மூலம் குணப்படுத்த முயலாமல், குறைபாடுடனே ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
கர்ப்பமடைதல், பிள்ளைப்பேறு, மெனோபாஸ் மற்றும் மூப்படைதல் போன்ற காரணங்களால், பெண்கள் உடலின் அடிப் பகுதியில் உள்ள கர்பப்பை, சிறுநீர்ப்பை போன்ற உறுப்புகளை தாங்கி நிற்கும் தசைகள் (Pelvic Floor Muscles) பலவீனமடைகின்றன. அப்போது உண்டாவதே இந்த சிறுநீரை அடக்க முடியாத நிலை. அந்நிலையில், இருமும்போது, தும்மும்போது, உடற்பயிற்சி செய்யும்போது மற்றும் கனமான பொருளை தூக்கும் போதெல்லாம் சிறுநீர் கசிந்து வெளியேறுவதுண்டு.
பிள்ளைப்பேறு அல்லது மெனோபாஸின் பின் விளைவு இது என பெண்கள் தவறாக புரிந்து கொள்வதுண்டு. வாழ்வியல் மாற்றம், மன அழுத்தம் மற்றும் விபத்தினால் உண்டாகும் காயம் போன்ற காரணங்களால் இப்பிரச்னை குழந்தைகளையும் தாக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. ஆண்களுக்கு உடலில் இருக்கும் புரோஸ்டேட் சுரப்பி அளவில் அதிகமாக பெரிதாகும்போது அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றுவது அல்லது சிறுநீர் கழிப்பதில் சிரமம் உண்டாவது சகஜம்.
அதிகச் செயல்பாடு (overactive) கொண்ட சிறுநீர்ப்பை, தன்னிச்சையற்ற நிலையில் தன் தசைகளை சுருக்குவதுண்டு. அப்போதெல்லாம் சிறுநீரை அடக்க முடியாமல் உடனே வெளியேற்ற வேண்டும் என்ற வேகம் உண்டாகும். இது ஆண் பெண் என்ற இரு பாலருக்கும் உண்டாகும் பிரச்னை.
மேலும், நரம்பியல் சார்ந்த கோளாறுகளான பக்கவாதம், நீரிழிவு, பார்கின்சன் நோய், மறதி நோய் மற்றும் வலிப்பு நோய் போன்றவற்றால் பாதிப்படைந்தோரின் மூளை, சிறுநீர்ப் பையுடன் தொடர்பு கொள்ளும் திறனில் குறைபாடடைகிறது. அதன் தொடர் விளைவாக சிறுநீர்ப்பையின் செயல்பாடுகளும் சீரற்றுப் போகிறது. மூத்திரப் பாதை தொற்று, உடல் பருமன், அளவுக்கு அதிகமான காஃபின் உட்கொள்ளல், நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்னை, பெல்விக் பகுதி உறுப்புகளில் அறுவை சிகிச்சை போன்றவையும் கட்டுப்பாடற்ற சிறுநீர் வெளியேற்றத்திற்கு காரணமாகின்றன.
குணப்படுத்துவதற்கான வழிமுறைகள்:
இக் குறைபாட்டை வெற்றிகரமாக சரிப்படுத்த, நோய்க்கான காரணத்தை பரிசோதனைகள் மூலம் துல்லியமாக கண்டுபிடித்தல் முதல் படியாகும். பின் நோயாளியின் மருத்துவ வரலாறு (medical history), அப்போதைய உடல் பரிசோதனை, யூரின் டெஸ்ட், அல்ட்ரா சவுண்ட், போன்றவை மூலமும், தேவைப்பட்டால் சிறுநீர்ப் பையின் செயல்பாடுகளை விரிவாகக் காட்டக் கூடிய யூரோடைனமிக் ஸ்டடீஸ் போன்ற சிறப்பு மதிப்பீடுகளின் மூலமும் நோய்க்கான காரணத்தை கண்டுபிடிக்கலாம்.
ஆரம்ப சிகிச்சையாக வாழ்வியல் மாற்றம், உடல் எடை குறைப்பு, குறைந்த அளவு காஃபின் உட்கொள்ளல், உடல் தேவைக்கு ஏற்ப தண்ணீர் குடிப்பது மற்றும் மலச் சிக்கலை நீக்குவது போன்ற எளிய முறைகளை பின் பற்றுவதன் மூலம் பிரச்னையின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும். பிரச்னைக்கான காரணம் சிறுநீர்ப்பையின் அதிகச் செயல்பாடு அல்லது ஸ்ட்ரெஸ் என்று கண்டுபிடிக்கப்பட்டால், பெல்விக் ஃபுளோர் தசைகளுக்கு பயிற்சி (Kegel exercise) அளித்தும், சிறுநீர்ப்பைக்கு பயிற்சி அளிப்பதன் மூலமும் சிறுநீர் அவசரமாக வெளியேறுவதை தடுத்து நிறுத்தலாம்.
வாழ்வியல் மாற்றம், விரும்பிய மாற்றத்தை உண்டுபண்ணத் தவறும்போது, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.
மருந்துகள் மூலம் சிறுநீர்ப் பையில் சேகரிக்கப்படும் சிறுநீரின் அளவை அதிகரிக்கவும், புரோஸ்டேட் சுரப்பி அளவில் பெரிதாகும்போது உண்டாகும் அசௌகரியங்களை நீக்கவும், சிறு நீர்ப் பாதையில் சிறுநீர் ஓட்டத்தை ஒழுங்குபடுத்தவும் முடியும்.
கடந்த பத்தாண்டுகளுக்குள் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள, Bladder Botox சிகிச்சை, Sacral nerve மோடுலேஷன், லேசர் புரோஸ்டேட் சர்ஜரி மற்றும் பெல்விக் ஃபுளோர் தசைகள் புத்துணர்ச்சி பெற உதவுவதுமான, சிறிய அளவில் உடலை காயப்படுத்தும் அறுவை சிகிச்சை முறைகளை மேற்கொண்டு, கட்டுப்பாடின்றி அவசரமாக வெளியேறும் சிறு நீரை கட்டுக்குள் கொண்டுவரவும் முடியும். இவ்வாறான நவீன முறை சிகிச்சைகள் நம்பகமானவை என்றும் விரைவில் பூரண குணமடைய உதவுபவை என்றும் கூறப்படுகிறது.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference