குழந்தை தண்ணீர் குடிக்க மறுக்கிறார்களா? சிறுநீர் நிறம் சொல்லும் செய்தி!

நீர்ச்சத்துக் குறைபாடு தடுப்பு, வாட்டர் பெல் பழக்கம், பழச்சாறு vs தண்ணீர் மற்றும் எச்சரிக்கை அறிகுறிகள்.
Child refuses water - குழந்தை தண்ணீர் குடிக்க மறுத்தல்
Child refuses water - குழந்தை தண்ணீர் குடிக்க மறுத்தல்Image Credit: ChatGPT
Dr K. Ravanan M.D, Paediatrics

டாக்டர். க. இராவணன் அவர்கள் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் M.B.B.S. பட்டப்படிப்பினையும் சென்னை மருத்துவக் கல்லூரியில் குழந்தை நல மருத்துவத்தில் M.D (Paed) உயர் பட்டப்படிப்பினையும் படித்தவர். குழந்தைகள் நல மருத்துவத்தில் 28 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். தற்போது அரக்கோணத்தில் Dr. RAV’s Child Clinic என்ற பெயரில் குழந்தைகளுக்கான மருத்துவமனையினை நடத்தி வருகிறார். Indian Medical Association, Indian Academy of Pediatrics & Infectious Disease Chapter IAP முதலான அமைப்புகளின் வாழ்நாள் உறுப்பினராவார். தமிழ் இலக்கியத்தில் பெரும் ஈடுபாடு கொண்டவர். சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது நடைப்பெற்ற கவிதைப் போட்டியில் வெற்றி பெற்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கரங்களால் முதல் பரிசினைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய நூல்கள் ‘குழந்தை நலம்’ மற்றும் 'ஒரு குழந்தை நல மருத்துவரின் டைரி குறிப்புகள்' ஆகும்.

Updated on: 

நீர்ச்சத்துக் குறைபாட்டைத் தவிர்க்கப் பெற்றோர் அறிந்திருக்க வேண்டிய முக்கியமான செய்திகள்.

குழந்தைகள் விளையாட்டில் மூழ்கியிருக்கும்போது தாகத்தைக்கூட மறந்துவிடுகிறார்கள். பள்ளியில் பாடங்கள், விளையாட்டு நேரம், வீட்டில் தொலைக்காட்சி அல்லது கைப்பேசி எனப் பொழுதைக் கழிக்கும் குழந்தைகள் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருக்கலாம். சில குழந்தைகள் தண்ணீரைக் குடிக்க விரும்புவதில்லை. இன்னும் சிலர் தாகம் எடுத்த பிறகே தண்ணீர் குடிக்கிறார்கள். இத்தகைய பழக்கம் தொடர்ந்து நீடித்தால், உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

Q

குழந்தையின் உடலுக்கு ஏன் தண்ணீர் அவசியம்?

A

உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்கவும், ரத்த ஓட்டம், செரிமானம், ஊட்டச்சத்துகளைக் கடத்துதல், கழிவுகளை வெளியேற்றுதல் போன்ற அவசியமான செயல்கள் முறையாக நடைபெறவும் தண்ணீர் தேவைப்படுகிறது. குழந்தைகள் விளையாடும்போதும் வெயிலில் இருக்கும்போதும் வியர்வை மூலம் நீரை இழக்கிறார்கள். காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற நேரங்களில் இந்த இழப்பு அதிகரிக்கலாம்.

Q

ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் தேவை?

A

எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே அளவு தண்ணீர் தேவையில்லை. வயது, உடல் எடை, உணவு, உடல் இயக்கம், காலநிலை மற்றும் உடல்நிலை ஆகியவற்றைப் பொறுத்து தேவை மாறும். உணவிலிருந்தும் பால் போன்ற பானங்களிலிருந்தும் உடலுக்குத் திரவம் கிடைக்கிறது. ஒரு கிலோ எடைக்கு 50-70 மி.லி வீதம் ஒரு நாளில் தண்ணீர் குடிக்க வேண்டும்.

பொதுவாக, ஆரோக்கியமான குழந்தைகளுக்கு நாள் முழுவதும் இடைவெளிவிட்டு தண்ணீர் வழங்க வேண்டும். வெப்பமான காலநிலையில் அல்லது அதிகமாக விளையாடும் நேரத்தில் தேவை அதிகரிக்கலாம். தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை உருவாக்குவது நல்லது.

Q

சிறுநீரின் நிறத்தை பொறுத்து எப்படி கவனிப்பது?

A

குழந்தையின் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருப்பது பொதுவாகப் போதுமான நீர்ச்சத்து கிடைப்பதற்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம். அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது நீர்ச்சத்துக் குறைவைக் குறிக்கக்கூடும். ஆனால், வைட்டமின் மாத்திரைகள், சில மருந்துகள் மற்றும் பிற உடல்நிலைகளும் சிறுநீரின் நிறத்தை மாற்றலாம். எனவே, நிறத்தை மட்டும் வைத்து நீர்ச்சத்தைக் கணிக்கக் கூடாது.

சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கை குறைதல், வாய் உலர்தல், வழக்கத்திற்கு மாறான சோர்வு போன்ற அறிகுறிகளையும் கவனிக்க வேண்டும்.

Child refuses water - குழந்தை தண்ணீர் குடிக்க மறுத்தல்
Child refuses water - குழந்தை தண்ணீர் குடிக்க மறுத்தல்
Q

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு என்ன செய்யலாம்?

A

குழந்தையின் பையில் பாதுகாப்பான, சுத்தமான தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொடுங்கள். இடைவேளையின்போது தண்ணீர் குடிக்க நினைவூட்டலாம். 'வாட்டர் பெல்' என்று அழைக்கப்படும் தண்ணீர் நினைவூட்டும் முறையை கடைபிடிப்போம். பாட்டிலை ஒரே நேரத்தில் காலி செய்ய வற்புறுத்தாமல், நாள் முழுவதும் சிறிது சிறிதாகக் குடிக்க ஊக்குவியுங்கள்.

வீட்டிலும், விளையாட்டு முடிந்ததும், உணவு நேரத்திலும், வெளியே செல்லும் முன்பும் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். பெற்றோரும் குழந்தைகளின் முன்னிலையில் தண்ணீர் குடிப்பது நல்ல முன்மாதிரியாக அமையும்.

Q

பழச்சாறா, குளிர்பானமா, தண்ணீரா?

A

அன்றாடத் தாகத்தைத் தீர்க்கத் தண்ணீரே சிறந்தது. சர்க்கரை அதிகமுள்ள குளிர்பானங்கள், இனிப்பூட்டப்பட்ட பானங்கள் மற்றும் அடிக்கடி பழச்சாறு குடிப்பது தேவையற்ற சர்க்கரை உட்கொள்ளலை அதிகரிக்கலாம். முழுப் பழங்களைச் சாப்பிடுவது பழச்சாறு குடிப்பதைவிடச் சிறந்தது.

குழந்தை தண்ணீர் குடிக்க மறுத்தால், சுத்தமான கோப்பையில் வழங்குதல் அல்லது தனக்குப் பிடித்த வடிவில், வண்ணத்தில் உள்ள பாதுகாப்பான பாட்டிலைத் தேர்ந்தெடுக்க அனுமதித்தல் போன்ற எளிய முயற்சிகள் உதவலாம். தண்ணீருக்குப் பதிலாக இனிப்புப் பானங்களைக் கொடுக்க வேண்டாம்.

இதையும் படியுங்கள்:
குழந்தை குறைவாகச் சாப்பிடுகிறதா? அளவை விடத் தரமே முக்கியம்! பெற்றோர் வழிகாட்டி
Child refuses water - குழந்தை தண்ணீர் குடிக்க மறுத்தல்
Q

நீர்ச்சத்துக் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன?

A

அதிக தாகம், வாய் மற்றும் நாக்கு உலர்தல், சிறுநீர் குறைதல், அடர் நிறச் சிறுநீர், தலைச்சுற்றல், சோர்வு ஆகியவை நீர்ச்சத்துக் குறைவைக் காட்டலாம். குழந்தை மிகவும் சோர்வாக இருப்பது, விழிப்புணர்வு குறைதல், குடிக்க முடியாமை, தொடர்ந்து வாந்தி எடுப்பது அல்லது நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காதது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்.

வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், தண்ணீர் மட்டும் போதுமானதாக இருக்காது. உடலில் இழந்த நீரையும் உப்புகளையும் ஈடுசெய்ய மருத்துவரின் ஆலோசனைப்படி வாய்வழி நீரேற்றக் கரைசலை (ORS) சரியான முறையில் வழங்க வேண்டும்.

Q

அதிகத் தண்ணீரும் நல்லதல்ல! ஏன்?

A

தண்ணீர் ஆரோக்கியத்திற்கு அவசியமானது என்பதற்காக அளவுக்கு அதிகமாகக் குடிக்க வற்புறுத்தக் கூடாது. மிகக் குறுகிய நேரத்தில் அதிக அளவு தண்ணீர் குடிப்பது உடலின் உப்புச் சமநிலையைப் பாதிக்கலாம். சிறுநீரக அல்லது இதய நோய் போன்ற சில உடல்நிலைகள் உள்ள குழந்தைகளுக்கு திரவ அளவு குறித்த தனிப்பட்ட மருத்துவ பரிந்துரை தேவைப்படலாம்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுக்கு சுயமாக மருந்து கொடுப்பது ஆபத்தா? பெற்றோர் அறிய வேண்டிய 10 உண்மைகள்!
Child refuses water - குழந்தை தண்ணீர் குடிக்க மறுத்தல்

நிறைவாக…

குழந்தை தண்ணீர் குடிப்பதை நினைவூட்டுவது ஒரு சிறிய நல்ல வழி. ஏனென்றால், அந்தப் பழக்கம் உடலின் வெப்பநிலை முதல் சிறுநீரகச் செயல்பாடு வரை பலவற்றைப் பாதுகாக்க உதவுகிறது.

தாகம் எடுத்த பிறகுதான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று குழந்தையைக் காத்திருக்கச் செய்யாதீர்கள். தண்ணீர் பாட்டிலைப் பள்ளிக்கு அனுப்புவது மட்டும் போதாது, அதிலிருந்து சரியான அளவு தண்ணீரை குடிக்கும் பழக்கத்தையும், அதை உறுதிப் படுத்தி அவர்களை ஊக்கப்படுத்த பழகிக் கொள்ளுங்கள் பெற்றோர்களே!