

திடீரென திக்கித் திக்கிப் பேசும் 5 வயது குழந்தை – பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
டாக்டர், என் மகன் ஐந்து வயது வரை ரொம்ப சரளமாகப் பேசினான். கடந்த சில நாட்களாக திடீரென்று திக்கித் திக்கிப் பேசுகிறான் ஏன்?
முன்பு இப்படி இருந்ததே இல்லை. ஏதாவது மூளையில் பிரச்சினையா?
இப்படிப்பட்ட மாற்றம் பெற்றோருக்கு நிச்சயமாகப் பதற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் ஒவ்வொரு திக்கிப் பேச்சும் நோயின் அறிகுறி அல்ல. அதே நேரத்தில், முன்பு சரளமாகப் பேசிய குழந்தைக்கு திடீரென ஏற்பட்ட புதிய மாற்றத்தை அலட்சியப்படுத்தவும் கூடாது.
குழந்தைகளின் திக்குவாய் பற்றி முழுமையாக விளக்குகிறார் குழந்தை நல மருத்துவர் க. இராவணன் M.D
திக்கித் திக்கிப் பேசுவது ஏன் ஏற்படுகிறது?
ஒரே ஒலியை மீண்டும் மீண்டும் சொல்வது - 'அ… அ…அம்மா', ஒரு சொல்லை நீட்டித்துப் பேசுவது அல்லது ஒரு வார்த்தை வராமல் சிறிது நேரம் தடைப்படுவது போன்றவை Stuttering / Stammering (பேச்சுத் தடுமாற்றம்) எனப்படும். குழந்தைகளின் பேச்சு மற்றும் மொழித் திறன் வேகமாக வளரும் 2–5 வயதில் இது பொதுவாகத் தோன்றலாம். சில குழந்தைகளுக்கு இது திடீரெனவும் ஆரம்பிக்கலாம்.
திடீரென்று வந்தால் பயப்பட வேண்டுமா?
பதற்றப்பட வேண்டாம், ஆனால் சரி செய்ய வேண்டும். குழந்தை உற்சாகமாக இருக்கும்போது, வேகமாகப் பேச முயற்சிக்கும்போது, சோர்வாக இருக்கும்போது அல்லது மன அழுத்தத்தில் இருக்கும்போது தடுமாற்றம் அதிகரிக்கலாம். இது குழந்தையின் அறிவுத்திறன் குறைபாட்டையோ, சோம்பேறித்தனத்தையோ குறிக்காது.
பெற்றோரின் தவறால் இது ஏற்படுமா?
கண்டிப்பாக இல்லை. “நீ மெதுவாகப் பேசு”, “முதலில் யோசித்துவிட்டு பேசு”, “எதற்குத் திக்கித் திக்கிப் பேசுகிறாய்?” என்று மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுவது குழந்தையின் பதற்றத்தை அதிகரிக்கலாம். குழந்தையின் பேச்சைத் திருத்துவதைவிட, பெற்றோர் தாங்களே மெதுவாகவும் அமைதியாகவும் பேசுவது உதவியாக இருக்கும்.
குழந்தையைப் சரளமாக பேச வற்புறுத்தலாமா?
கூடாது. “மீண்டும் சொல்லு”, “சரியாகப் பேசு” என்று அழுத்தம் கொடுக்க வேண்டாம். குழந்தை பேசும்போது இடையில் குறுக்கிடாமல் பொறுமையாகக் கேளுங்கள். பேச்சின் வேகத்தைவிட, குழந்தை சொல்ல விரும்பும் கருத்துதான் முக்கியம்.
எப்போது Speech Therapist-ஐ அணுக வேண்டும்?
திக்கித் திக்கிப் பேசுவது தொடர்ந்து நீடித்தால், அதிகரித்தால், குழந்தை பேசுவதைத் தவிர்க்க ஆரம்பித்தால், பேசும்போது முகத்தில் இறுக்கம், கண் சிமிட்டுதல், உதடு நடுக்கம் போன்றவை தோன்றினால், குழந்தை நல மருத்துவரை அணுகுவது மற்றும் பேச்சு பயிற்சி நிபுணரின் மதிப்பீடு மற்றும் வழிகாட்டுதல் அவசியம். குழந்தையின் பேச்சு மட்டுமல்லாமல், மொழி வளர்ச்சி, குடும்ப வரலாறு, உணர்ச்சி மற்றும் சமூக தாக்கம் ஆகியவையும் மதிப்பீட்டில் கணக்கிடப் படும்.
திடீர் பேச்சு மாற்றம் மூளை நோயாக இருக்குமா?
மிக அரிதாக, குறிப்பாக திடீரெனத் தொடங்கிய புதிய பேச்சுக் கோளாறு நரம்பியல் காரணங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம். தலையில் காயம், வலிப்பு, முகம் அல்லது கை-கால் பலவீனம், நடையில் மாற்றம், கடுமையான தலைவலி, குழப்பம், புரிந்துகொள்ளும் திறனில் மாற்றம் அல்லது தெளிவற்ற பேச்சு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக நரம்பியல் மருத்துவ ஆலோசனை தேவை.
வீட்டில் பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?
குழந்தைக்கு பேசும்போது கண்களைப் பார்த்துக் நிதானமாக பேசுங்கள். அவசரப்படுத்தாதீர்கள். கதை படித்துக் காட்டுதல், ஒன்றாகப் பேசுதல், பாடல்கள் பாடுதல் போன்ற மகிழ்ச்சியான செயல்களை செய்யுங்கள். குழந்தையின் முன் “இவன் திக்கிப் பேசுகிறான்” என்று மற்றவர்களிடம் சொல்வது கூடாது.
முக்கியமாக பெற்றோர் என்ன நினைவில் கொள்ள வேண்டும்?
“திக்கிப் பேசுகிறாய்” என்று குழந்தையை மாற்ற முயற்சிப்பதைவிட, “நீ சொல்ல வேண்டியதை நான் பொறுமையாகக் கேட்கிறேன்” என்ற நம்பிக்கையை உருவாக்குங்கள். பேச அனுமதியுங்கள்.
ஒரு குழந்தையின் பேச்சு தற்காலிகமாக தடுமாறலாம். ஆனால் குழந்தை நல மருத்துவர் மற்றும் பேச்சு, மொழி பயிற்சி நிபுணர் (Speech-Language Pathologist) மூலம் மதிப்பீடு செய்து சிகிச்சை அளிப்பதே சரியான அணுகுமுறை. சிறப்பான சிகிச்சைகளால் முழுமையாக சரியாகி விடும்.
குழந்தையின் வார்த்தைகள் திக்கி திணறி வரலாம்…ஆனால் அதன் தன்னம்பிக்கை தடுமாறக் கூடாது.
பெற்றோர் கொடுக்கும் பொறுமையும் புரிதலும் ஊக்கமும் குழந்தையின் மனதை உறுதியுடன் பாதுகாக்கும், சரளமான பேச்சை மீட்டெடுக்கும்.