நமது பாட்டி காலத்தில் வீட்டின் முற்றத்தில் கண்டிப்பாக ஒரு நார்த்தங்காய் மரம் இருக்கும். வெயில் காலத்தில் பழைய சோற்றுக்கோ அல்லது தயிர் சாதத்துக்கோ நார்த்தங்காய் ஊறுகாய் தொட்டுக்கொண்டு சாப்பிடும் சுகமே தனிதான். அந்த ஊறுகாயின் சுவைக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை, அந்த மரத்தின் இலைகளுக்குக் கொடுப்பதில்லை. காயை மட்டும் பறித்துவிட்டு, இலைகளைக் காய்ந்து சருகாகப் போக விட்டுவிடுகிறோம்.
ஆனால், உண்மையில் அந்தக் காயை விட அதன் இலைகளில்தான் (Citron leaves) அபரிமிதமான மருத்துவக் குணங்கள் ஒளிந்துள்ளன என்பது பலருக்கும் தெரிவதில்லை. இந்த இலைகள் சாதாரணமானவை அல்ல, உடலுக்குத் தேவையான பலவிதமான நன்மைகளை வாரி வழங்கக்கூடிய ஒரு இயற்கை பொக்கிஷம்.
கால்சியம் சக்தி: வயது ஏற ஏற மூட்டு வலியும், கை கால் குடைச்சலும் வருவது இயல்பு. இதற்கு முக்கியக் காரணம் எலும்புகளில் ஏற்படும் தேய்மானம் மற்றும் வலுவின்மை. நார்த்தங்காய் இலைகளில் கால்சியம் சத்து மிக அதிக அளவில் நிறைந்துள்ளது. இது எலும்புகளை இரும்பு போல உறுதிப்படுத்த உதவுகிறது. எதிர்காலத்தில் வரக்கூடிய எலும்புருக்கி நோய் எனப்படும் ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் மூட்டு வாதம் போன்ற பிரச்சனைகள் நம்மை நெருங்காமல் இருக்க இந்த இலைகள் ஒரு பாதுகாப்பு அரணாகச் செயல்படுகின்றன.
நுரையீரலின்பாதுகாப்பு: இன்றைய மாசு நிறைந்த உலகில், சுவாசப் பிரச்சனைகள் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லலாம். ஆஸ்துமா, மூச்சுத்திணறல் மற்றும் அடிக்கடி வரும் சளித் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த இலை ஒரு வரப்பிரசாதம். இது நுரையீரலில் தேங்கியிருக்கும் நச்சுக் கழிவுகளை வெளியேற்றி, சுவாசப் பாதையைச் சுத்தப்படுத்துகிறது. சுவாச மண்டலத்தை 'டீடாக்ஸ்' செய்து, காற்றை முழுமையாக உள்ளிழுக்க இந்த இலைகள் உதவுகின்றன.
ரத்தத்தைச் சுத்திகரிக்கும்: நமது உடலில் ஓடும் ரத்தம் சுத்தமாக இருந்தாலே பாதி நோய்கள் குணமாகிவிடும். நார்த்தங்காய் இலைக்கு இயற்கையாகவே ரத்தத்தை வடிகட்டிச் சுத்தப்படுத்தும் ஆற்றல் உண்டு. இது ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கழிவுகளை நீக்குவது மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள், புற்றுநோயை உண்டாக்கும் செல்களை எதிர்த்துப் போராடி, குறிப்பாகக் கல்லீரல் மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.
குழந்தைகள் பாடங்களைப் படித்தாலும் அது நினைவில் நிற்கவில்லை என்று பெற்றோர்கள் கவலைப்படுவதுண்டு. அத்தகைய குழந்தைகளுக்கு இந்த இலையை உணவில் சேர்த்துக் கொடுப்பது நல்லது. இது மூளையில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களைக் குறைத்து, நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கிறது. ஞாபக மறதியை விரட்டி, மூளையைச் சுறுசுறுப்பாக இயங்க வைக்க இது உதவுகிறது.
சமையல் முறை: இந்த இலைகளைப் பச்சையாகச் சாப்பிட முடியாது என்பதால், இதைச் சுவையான துவையலாகவோ அல்லது ரசமாகவோ செய்து சாப்பிடலாம். புதினா, கொத்தமல்லி துவையல் செய்வது போலவே, நார்த்தங்காய் இலைகளையும் வதக்கி அதனுடன் காய்ந்த மிளகாய், புளி, பூண்டு, இஞ்சி மற்றும் தேங்காய் சேர்த்து அரைத்துச் சாப்பிடலாம்.
இது இட்லி, தோசை மற்றும் சாதத்திற்குத் தொட்டுக்கொள்ள மிகச்சிறப்பாக இருக்கும். அதேபோல, ரசம் வைக்கும்போது, சீரகம் மற்றும் மிளகுடன் இரண்டு நார்த்தங்காய் இலைகளையும் சேர்த்து இடித்துப் போட்டால், ரசம் கமகமவென மணப்பதோடு ஆரோக்கியத்தையும் அள்ளித் தரும்.
நமது வீட்டுத் தோட்டத்திலேயே இருக்கும் மருந்தைக் கண்டுகொள்ளாமல், நாம் மருந்துக் கடைகளைத் தேடி அலைகிறோம். வாரம் இரண்டு முறையாவது இந்த இலைகளைத் துவையலாகவோ அல்லது ரசத்திலோ சேர்த்துச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.