வளமான வாழ்வு தரும் வண்ண உணவுகள்!

Colorful foods that give a healthy life
Colorful foods that give a healthy lifehttps://www.rush.edu

டல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நாம் வண்ணங்களால் பிணைக்கப்பட்டிருக்கிறோம். உணவுகளுக்கும் வண்ணங்களுக்கும் என்றுமே ஒரு தொடர்பு உண்டு. வண்ணங்கள் உணவை சுவாரஸ்யமாக்குகிறது. காய்கறிகள் மற்றும் பழங்கள் எல்லாம் ஒரே நிறத்தில் இருப்பதில்லை. அவை நிறத்தை தீர்மானிப்பதில் பல்வேறு காரணிகள் இடம் பெறுகின்றன. அவற்றுக்கு நிறத்தைத் தரும், ‘பைட்டோ நியூட்ரான்கள்'தான் அவற்றுக்கு சத்தையும் தருகிறது. காய்கறி மற்றும் பழங்களில் இருக்கும் நிறமிகளின் தன்மைக்கு ஏற்ப அதன் ஊட்டச்சத்து அளவும் மாறுபடும் என்கிறார்கள்.

கலர்புல்லான காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிடுகிறவர்களுக்கு அந்த ‘பைட்டோ நியூட்ரான்கள்' பலதரப்பட்ட நாள்பட்ட நோய்களிலிருந்தும், புற்றுநோய்களிலிருந்தும் பாதுகாப்பை அளிக்கின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எனவே, காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடும்போது அதன் தோல்களை உறிக்காமல் அப்படியே சாப்பிட அறிவுறுத்துகிறார்கள். உதாரணமாக, ஆப்பிள், பேரிக்காய், கத்தரிக்காய்.

அன்றாடம் நாம் உண்ணும் உணவில் பெரும்பாலும் பச்சை நிற காய்கறிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மற்ற நிறங்களுக்குப் பெரிதாகக் கொடுப்பதில்லை. சிவப்பு, ஊதா, மஞ்சள், நீலம் மற்றும் வெள்ளை என்ற நிறத்தில் காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த காய்கறிகள் நம் உடலுக்கு தேவையான பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகிறது. மேலும் இது உணவில் ஏற்படும் சலிப்பை போக்க உதவுகிறது.

வெள்ளை நிற பூண்டு, காளான், காலிபிளவர், பேரிக்காய், ஆப்பிள் மற்றும் வாழைப்பழத்தில் உள்ளே உள்ள வெள்ளைப் பகுதிகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டி இம்பிளமென்ரி பண்புகள் நிறைந்துள்ளன. இந்த நிற காய்கறிகள் மற்றும் பழங்களை தினசரி 170 கிராம் எடுத்துக்கொண்டால் 52 சதவீதம் பக்கவாதம் வரும் வாய்ப்பு குறையும் என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர் நெதர்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள். தினமும் 25 கிராம் வெள்ளை நிற பழ சதைகளை சாப்பிட்டாலே 9 சதவீதம் ஸ்ட்ரோக் அபாயம் குறையும் என்கிறார்கள்.

சிவப்பு நிறத்தில் இருக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களான தக்காளி, வெங்காயம், மாதுளை, தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றில் ‘லைக்கோபின்' எனும் இரசாயனம் உள்ளது. இது இதயம் மற்றும் நுரையீரல் நோய்களிலிருந்து பாதுகாக்கும் ஆற்றல் உடையது. இந்த ‘லைக்கோபின்' ஆண்களைத் தாக்கும் புரோஸ்டேட் கேன்சர் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது மற்றும் காற்று மாசு மாற்றங்களால் ஏற்படும் பாதிப்பு களிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது.

சிவப்பு நிற தோல்களிலுள்ள, ‘குயிர்சாட்டின்' சத்து உடலுக்கு வெள்ளை அணுக்கள் உற்பத்தியை தொடர்ந்து வழங்கும் ஆற்றல் உடையது. இதனால் சளி, காய்ச்சல் மற்றும் மூட்டு வலி தொந்தரவுகள் வராது என்கிறார்கள் லண்டன் ஷெப்பர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

பெரும்பாலான சிவப்பு நிறத்தில் உள்ள பழங்களில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அதிகமாக இருக்கும். நீர்ச்சத்து நிறைந்தவையாகவும் இருக்கும். சிவப்பு நிற பழங்களில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் இரத்த அழுத்தத்தின் அளவைக் குறைத்து கார்டியோ வாஸ்குலர் நோய்கள் வராமல் தடுத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தச் செய்கின்றன. அதோடு இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதைத் தடுப்பது மற்றும் கெட்ட கொலஸ்டிரால் (எல்டிஎல்- LDL) அளவைக் குறைக்க உதவி செய்யும்.

சிவப்பு நிற காய்கறிகள் மற்றும் பழங்களில் வைட்டமின் ஏ அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, இந்த சிவப்பு நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் கரோட்டினாய்டுகள் கண் பார்வையை மேம்படுத்த உதவி செய்யும். குறிப்பாக வயதாகும்போது ஏற்படுகிற பார்வை கோளாறுகளைச் சரிசெய்ய உதவும்.

அடர் சிவப்பு நிறத்தில் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ள ஆற்றல் வாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தச் செய்யும். குறிப்பாக சூரியக் கதிர்வீச்சால் ஏற்படுகிற புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தைக் குறைத்து சருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் வைத்திருக்கச் செய்யும். சிவப்பு நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஆன்டி - இன்ஃபிளமேட்டரி பண்புகள் அதிகமாக இருக்கின்றன. இது உடல் வலியைக் குறைக்கச் செய்யும்.

ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறமுள்ள சர்க்கரை வள்ளிக்கிழங்கு, காரட், ஆரஞ்சு பழம், மாம்பழம் மற்றும் பைன் ஆப்பிள் போன்ற காய்கறி மற்றும் பழங்களில் பீட்டா கிரைடோடேக்சின் உள்ளது. இது உடலின் செல்களுக்கு வலிமை தருகிறது. மேலும் அவற்றிலுள்ள லூடின், ஜீயாக்சாந்தின் மற்றும் வைட்டமின் ஏ, சி போன்றவை கண்களை புளூ லைட் கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கிறது.மேலும் மற்ற கண் நோய்கள் வராமல் தடுக்கிறது என்கிறார்கள்.

மஞ்சள் நிற உணவுகளான உருளைக்கிழங்கு, மர வள்ளிக்கிழங்கு, கருணைக்கிழங்கு போன்றவை கணையத்தில் ஏற்படும் புற்றுநோயை கட்டுப்படுத்தும் என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, ஈரல் நோய், வயிற்று கோளாறுகள், சிறுநீரக நோய்கள், நீரிழிவு, கண் நோய்கள் மற்றும் தொண்டை தொற்றுநோய் குணமாக மஞ்சள் நிற சிட்ரஸ் அதிகமுள்ள பழங்கள் சாப்பிட வேண்டும் என்கிறார்கள் பிரேசில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். அதேபோல, B கரோட்டின் சத்துக்களையும் அதிகம் சாப்பிடுவது கண்களுக்கு நன்மை தரும். மஞ்சள், ஆரஞ்சு நிற உணவுப் பொருட்களில், இந்த சத்துக்கள் அதிகமாக இருக்கும். குறிப்பாக, கேரட், பப்பாளி, கேப்ஸிகம், சிவப்பு நிற காய்கறி, மஞ்சள் நிற காய்கறி, மஞ்சள் நிற பழங்கள் இப்படி நிறைந்திருக்கும். அந்தவகையில் மாம்பழம் அதில் ஒன்று.

இதையும் படியுங்கள்:
‘பிளாசிபோ எபெக்ட்’ எப்படி நம் வாழ்வோடு பொருந்துகிறது தெரியுமா?
Colorful foods that give a healthy life

ஆரோக்கியமான பச்சை இலைகளை உணவுடன் சேர்ப்பதன் மூலம் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை நீங்கள் பெற முடியும். இது நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கிறது மற்றும் உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கிறது. மேலும், அதிக நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் எடை நிர்வாகத்தை ஊக்குவிக்கிறது. எனவே, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அவசியமான சில இலை, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, கீரைகள்.

நினைவாற்றலை அதிகரிக்க, எலும்புகளை கட்டமைக்க, புரோட்டீன் உற்பத்தி செய்ய உதவும் மெக்னீசியம் சத்து பச்சை நிற காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளில் அதிகமுள்ளது. நரம்பு கோளாறுகள், சளி, காய்ச்சல், குளிர் காய்ச்சல் உள்ளவர்கள் பச்சை நிற காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிட வேண்டும் என்கிறார்கள் அமெரிக்க எம்.ஐ டி கல்வி நிறுவன ஆராய்ச்சியாளர்கள். பச்சை நிற பசலைக்கீரை, புரோக்கோலி மற்றும் கிவிப்பழம் போன்றவை புற்றுநோய் காரணிகளை அழிக்கிறது . பச்சை நிற காய்கறிகள் மற்றும் கீரைகளில் இருக்கும் நைட்ரேட் சத்து 50 வயதிற்கு மேல் வரும் ‘மாகுலர் டி ஜெனரேசன்’ குறைபாட்டால் வரும் கண் பார்வை குறைபாடுகளை சரி செய்யும் என்கிறார்கள் ஆஸ்திரேலியாவின் வெஸ்டர்ன் என்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

புளூ மற்றும் பர்பில் வண்ண புளூ பெர்ரி, திராட்சை போன்றவற்றிலுள்ள ஆந்தோசையின் எனும் சத்து வயது மூப்படைவதை தள்ளிப்போட உதவுவதுடன், இரத்த அடைப்பையும் நீக்க உதவுகிறது என்கிறார்கள். மேலும் இப்பழங்களின் தோல்களிலுள்ள ‘ரெஸ்வெரேட்ரால்' நோய் தொற்றுகளை தவிர்க்க, மூளையை இளமையாக வைத்திருக்க உதவுகிறது என்கிறார்கள் வெர்ஜினியா கார்தான் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர்கள்.

மற்ற நிறங்களை விட கருப்பு நிற கவனி அரிசி, மிளகு,கருஞ்சீரகம், கருப்பு திராட்சை,எள், பிளாக் பெர்ரி மற்றும் கருப்பு பேரிச்சம்பழம் போன்ற உணவுப்பொருட்களில் உள்ள அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆந்தோசைபினின் புற்றுநோய் காரணிகளை அழிப்பதுடன் இதயநோய், பக்கவாதம், நுரையீரல் நோய்கள் மற்றும் முடக்குவாதம் போன்ற பல்வேறு நோய்களை குணப்படுத்தும் ஆற்றலையும் தரும் என்கிறார்கள் போலந்து நாட்டின் வேளாண்மை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். கருப்பு நிறத்திற்குக் காரணமாக இருப்பது ‘ஆன்தோசயானின்' எனும் நிறமி. இது மற்ற நிறமிகளை விட அதிக சக்தி வாய்ந்தது. இந்நிற உணவுகள் தசை சிதைவு மற்றும் பல் சிதைவுகளை தடுக்கும் ஆற்றல் உடையதாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com