

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பு அளிப்பது தடுப்பூசிகளே. சுகாதார பாதுகாப்பிற்கு அரசால் பரிந்துரைக்கப்படும் ,மருத்துவர்களால் கண்காணிக்கப்படும் நோய் தடுப்பான்களே தடுப்பூசிகள்.
தடுப்பூசி பற்றிய தவறான புரிதல்களை நாம் தவிர்க்க வேண்டும். ஒரு தடுப்பூசி உடலில் நுழையும்போது, நோய்க் கிருமிகள் இருப்பின் அவற்றை அழித்து, நோய் தொற்றிலிருந்து முழு பாதுகாப்பை அளிக்கிறது. நவீன மருத்துவம் , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான தடுப்பூசிகளை வழங்குகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நோயிலிருந்து பாதுகாப்பை தருகிறது.
குழந்தைகளுக்கான ஆரம்ப கால தடுப்பூசிகள், மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு, குழந்தை பருவ இறப்புகள், நோய் தீவிரத்தை தடுக்கும் அரணாக பயன் தருகின்றன.
குழந்தைகளுக்கு எம்.எம்.ஆர், சிக்கன் பாக்ஸ் தடுப்பூசிகள், போலியோ சொட்டு மருந்து என பல தரப்பட்ட தடுப்பூசிகள் உள்ளன. குறிப்பிட்ட கால அட்டவணைகள் படி குழந்தைகளுக்கு தவறாமல் கொடுப்பது அவர்களது எதிர்கால ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் அளிக்கிறது.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும்போது அவர்களுக்கு பருத்தியால் ஆன ஆடை எளிதில் கழட்டக் கூடியதாய் அணிவித்தால் சௌகரியமாக இருக்கும். ஊசி போடும்போது குழந்தையை அரவணைத்து பிடித்துக் கொண்டு வசதியான பொசிஷனில் அமர்ந்து தடுப்பூசி செலுத்த, குழந்தைக்கு சிரமமிருக்காது.
ஊசி போட்டதும் நர்ஸ் அறிவுறுத்தலின் படி இலேசாக தேய்ப்பதோ, ஈர துணியால் ஒற்றவோ செய்யலாம். ஊசி போட்டு வந்தபின் நார்மலான உணவு, தாய்ப்பால் தரலாம். குழந்தைக்கு காய்ச்சல், சளி, இருமல் இலேசாக இருந்தால் கொடுக்கக் கூடாது என்பது தவறான புரிதல்.
மருத்துவரின் ஆலோசனைப்படி குழந்தையை கண்காணித்தால், தடுப்பூசிகளால் எந்தவித பிரச்னையும் வராது. குழந்தை அமைதியாக தூங்கினால் பிரச்னை இல்லை. அழுது கொண்டே இருந்தாலோ, உணவு உண்ணாமை, அரிதாக உதடு, நாக்கு வீங்குதல், விடாமல் அழுதல், அதிகமான காய்ச்சல் இருந்தால் டாக்டரிடம் அழைத்து செல்ல வேண்டும்.
அதிக சோர்வு, பலவீனமாதல், உணவு உண்ணாமை, தூங்காமல் இருத்தல், தூக்கத்திலிருந்து எழுப்ப முடியாமல் போவது, தடிப்பு, சருமம் சிவத்தல், வலிப்பு, மலத்தில் ரத்தம் வருவது, அடிக்கடி வாந்தி எடுத்தல் இரண்டு நாளுக்கும் மேலாக காய்ச்சல் விடாமல் இருந்தால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம். மற்றபடி குழந்தைகளுக்கு ஏற்படும் சிறு உடல்நலக் குறைவையும் தடுப்பூசி யால் ஏற்பட்டது என குழப்பி கொள்ள வேண்டியது இல்லை.
குழந்தைகளுக்கு போன்றே பெரியவர்களுக்கும் தடுப்பூசிகள் உள்ளன. வருடாந்திர காய்ச்சல் தடுப்பூசி, நிமோகோகல் தடுப்பூசி, டெட்டனஸ், டிப்தீரியா தடுப்பூசி, ஷிங்கிள்ஸ் தடுப்பூசி, சுவாச பாதுகாப்புக்கான RSVதடுப்பூசி என பல்வேறு வகையான தடுப்பூசிகள் உள்ளன.
இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி தவறாது எடுத்துக் கொண்டு ஆரோக்கியம் காக்கலாம். தடுப்பூசிகள் உயிருக்கு ஆபத்தான பல்வேறு நிலைமைகளுக்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தியை வாழ்நாள் முழுவதும் வழங்குகிறது. இவற்றை அறிந்து கடைபிடிக்க நம் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.
(மருத்துவர் பிரகதீஷ், MBBS, பொதுநல மருத்துவர் சொன்ன அறிவுரைகளின் தொகுப்பு)