ஒரு அருமையான சிற்றுண்டியை பற்றி நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய பதிவுதான் இது. அட ஆமாங்க, மழைக்காலம் வேற வந்தாச்சு, வெளில நல்லா ஜோரா மழை பெய்ய, மழையை ரசிச்சுகிட்டே சூடா ஏதாச்சும் ஸ்னாக்ஸ் சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது? அப்பதான் ஒரு ரசனை கலந்த சுவையை அனுபவிக்க முடியும். சரிதான்... புரியுது புரியுது ஸ்னாக்ஸ் ஓட டீ இருந்தாலும் நல்லாருக்கும்னு தானே யோசிக்கறீங்க? கண்டிப்பா நல்லாருக்கும்.
நம்ம ஸ்னாக்ஸ் சாப்பிடுவதெல்லாம் சரிதான், ஆனா என்ன ஸ்னாக்ஸ் சாப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியம். நான் ஒரு ஸ்னாக்ஸ் சொல்லுறேன். உங்களுக்கு மக்காச்சோளம் பிடிக்குமா? மக்காச்சோளத்தை மழை நேரத்தில் சாப்பிட்டா என்னென்ன நன்மைகள் இருக்கும்னு தெரியுமா? வாங்க தெரிஞ்சுப்போம்!
மக்காச்சோளத்தை மழை நேரத்தில் சாப்பிடுவதால், அதிக நன்மைகளை பெற முடியும். மக்காச்சோளத்தின் பிரியர்கள் அதிகம்தான். சென்னையில் கூட, பல இடங்களில் கார்ன் என்னும் சோளத்தை வாங்க கூட்டம் அலைமோதுவதை அடிக்கடி பார்த்திருக்கிறேன். இதனை சிலர் வறுத்தும், சிலர் வேக வைத்து மசாலா சேர்த்தும் சாப்பிடுவர். நாம் ரசித்து உண்ணும் இந்த சோளம் எவ்வாறு அவ்வளவு நன்மைகளை அள்ளித்தருகிறது?
செரிமானத்தை மேம்படுத்துகிறது
நம்முடைய உணவு பழக்கவழக்கத்தால், செரிமான பிரச்னை அதிகரித்து வருகிறது. அதிலும் மழைகாலங்களில் சூடாக சாப்பிட வேண்டும் என்று அதிக எண்ணெய் கலந்த உணவுகளை எடுத்து, செரிமான பிரச்னையில் சிக்கி கொள்வதுண்டு. சோளத்தில் மலச்சிக்கலைக் குறைக்கும் மற்றும் வழக்கமான குடல் இயக்கங்களை மேம்படுத்தும் திறன் உள்ளது. இதிலுள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதனால் செரிமான பிரச்னை உள்ளவர்கள் சோளத்தை எடுத்துக் கொள்ளவது நல்லது.
ஆற்றலை வழங்குகிறது
மழைக்காலத்தில் பொதுவாகவே நாம் அனைவரும் சோர்வாக இருப்பது போல உணர்வோம். அந்த நேரத்தில் மக்காசோளத்தை உட்கொள்வது நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும். அதாவது சோளத்தில் உடலுக்குத் தேவையான ஆற்றல், புரதம், உயிர்ச்சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றன. மேலும் சோளத்தில் உள்ள கரோடெனாய்டுகள், கண்களுக்கு மிகவும் நன்மை அளிக்கின்றன.
உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது
சோளத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், பசியைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவியாக இருக்கும். சோளத்தை சாப்பிடும் போதே பசி அடங்கிவிடும். இது உடலிற்கு அதிக நன்மைகளை தருவதால் இதை உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம். இது உடல் எடையை சீராக நிர்வகிக்க அதிக உதவியாக இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
மழைக்காலத்தில் அதிக ஈரப்பதம் காரணமாக தொற்று நோய்கள் எளிதாக பரவக்கூடும். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல், தும்மல் போன்ற பிரச்னைகளால் அவதிப்பட கூடும். இந்த நேரத்தில், சோளத்தை சாப்பிடுவதால், நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கக்கூடும். ஏனெனில், சோளத்தில் உள்ள வைட்டமின் C, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்று நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
சோளத்தில் உள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது சருமத்தை பொலிவாகவும், சுருக்கங்கள் இன்றியும் வைத்துக்கொள்ள உதவியாக இருக்கிறது.
நீங்கள் மழை நேரத்தில், சூடாக சாப்பிட வேண்டும் என்று, உடலுக்கு தீங்கு விளைவிக்கின்ற சிற்றுண்டிகளை உண்ணாமல், மக்காசோளம் போன்ற ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டால், அதிக நன்மைகளை பெற முடியும். உங்களுக்கு சோளத்தை வறுத்து சாப்பிட பிடிக்குமா? அல்லது வேக வைத்து மசாலா சேர்த்த கான் பிடிக்குமா? கமெண்ட்-ல சொல்லிட்டு போங்க......