
பொதுவாக குழந்தைகள் இருக்கும் வீடுகளில் காய்ச்சல் மருந்துகள் மற்றும் இருமல் மருந்துகள் கைவசம் எப்போதும் இருக்கும்.
தற்போது இருமல் சிரப் பயன்படுத்தி பல குழந்தைகள் மரணம் மற்றும் நலபாதிப்பு அடைந்த நிலையில் இந்த சிரப்புகள் குறித்து அச்சமும், கவலையும் பலரிடத்தில் எழுந்துள்ளது .
அத்துடன் இனி இது போன்ற சிரப்புகளை பயன்படுத்தலாமா வேண்டாமா? என்பது குறித்தும் குழப்பமான மனநிலை உள்ளது. ஆனால், சுகாதாரக் கட்டுப்பாடு நிறுவனத்தின் அங்கீகாரம் வழியில் கிடைக்கும் எந்த மருந்துகளும் பாதுகாப்பானவை என்பதை நம்ப வேண்டும். சில விதிமீறல்கள் இது போன்ற சந்தேகங்களை நமக்குத் தந்து விடுகின்றன.
இருமல் சிரப்புகள் பாதுகாப்பானதா அல்லது பாதிப்பு தரக்கூடியதா? என்பது குறித்து திரட்டிய சில தகவல்கள் இங்கு:
இருமல் சிரப்களில் அடங்கியுள்ள (Cough syrups) பொருட்கள் மற்றும் அதன் பயன்பாடு அளவை பொறுத்து நன்மைகள் மற்றும் பாதிப்புகள் என இரண்டையும் கொண்டுள்ளது.
பொதுவான நன்மைகள்:
இருமல் சிரப்கள் இருமலில் இருந்து தற்காலிக நிவாரணம் அளிப்பதோடு ஓய்வெடுக்க உதவி குணமடைவதை எளிதாக்கும். இருமலால் தொண்டை எரிச்சல் வரும். பல இருமல் சிரப்களில் எரிச்சலூட்டும் தொண்டையை ஆற்றவும் அமைதிப்படுத்தவும் உதவும் பொருட்கள் உள்ளதால் தொண்டைக்கு இதமாக இருக்கும். சில இருமல் சிரப்கள் அதிக வலுவுடன் நுரையீரலில் இருந்து சளியை தளர்த்தி அகற்றவும், சுவாசிக்க எளிதாக்கவும் உதவும் மருந்துக் கலவைகளை உள்ளடக்கி உள்ளது.
சாத்தியமான பாதிப்புகள்:
பல இருமல் சிரப்களில் டெக்ஸ்ட்ரோமெத்தோர்பான் (dextromethorphan) போன்ற பொருட்கள் உள்ளன. அவை சிலருக்கு மயக்கம் அல்லது தலைச்சுற்றலை ஏற்படுத்தும். குறிப்பாக கோடீன் அல்லது பிற ஓபியாய்டுகளைக் கொண்ட சில இருமல் சிரப்கள் போதைப் பழக்கத்தை உருவாக்கும்.
இருமல் சிரப்கள் சில நபர்களுக்கு வயிற்று வலி, குமட்டல் அல்லது ஒவ்வாமை எதிர்வினைகள் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். இருமல் சிரப்கள் மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் போன்ற நாள்பட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தும் பிற மருந்துகளுடன் இடைவினையாற்றி பாதகமான விளைவுகளின் அபாயத்தை அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு.
இருமல் சிரப்களை அதிகமாகப் பயன்படுத்துவது அதை தொடர்ந்து பயன்படுத்தும் சார்புக்கு வழிவகுக்கும் அல்லது மருத்துவ கவனிப்பு தேவைப்படும் அடிப்படை நிலை பாதிப்புகளை மறைத்து கவனிக்க முடியாத நிலை தரலாம்.
என்ன முன்னெச்சரிக்கைகள் தேவை?
மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட அளவு மற்றும் பயன்பாட்டு வழிமுறைகளை எப்போதும் பின்பற்றவும். அதிக டோஸ் ஆபத்தைத் தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சுயமாக எப்போதோ வீட்டில் வைத்திருக்கும் மருந்தை உட்கொள்வதை நிச்சயமாக தவிர்க்க வேண்டும். ஏனெனில், ஒரு தடவை திறக்கப்படும் சிரப்புகள் காலாவதியாகும் வாய்ப்பு அதிகம்.
குழந்தைகள் அல்லது வேறு அடிப்படை மருத்துவ நிலைமைகள் உள்ள நபர்களுக்கு இருமல் சிரப்களை வழங்குவதற்கு முன் நிச்சயமாக மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற வேண்டும்.
சிலர் சளித் தொந்தரவு மற்றும் இருமலால் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பாதிக்கலாம். அந்த அறிகுறிகளின் அளவு பொறுத்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இருமல் சிரப்களைத் தேர்வு செய்யவும்.
அதிகப்படியான பயன்பாட்டைத் தவிர்க்க சாத்தியமான அபாயங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பதும், நமது அளவுகளை கண்காணிப்பதும் அவசியம்.
முக்கியமாக குழந்தைகளுக்கு எட்டும் வண்ணம் மருந்துகளை வைப்பது கூடாது.
பொதுவாக இருமல், சளி, காய்ச்சல் என்பதெல்லாம் மூன்று நாட்களுக்கு இருக்கவே செய்யும் என்பது மருத்துவர்களின் கூற்று. நமது உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கு வழிவகுக்கும். இது போன்ற சிறு சிறு தொற்று பாதிப்புகளுக்காக உடனடியாக பக்கவிளைவு தரும் மருந்துகளை உட்கொள்ளாமல் கூடியவரை வீட்டு வைத்தியங்களை முதல் இரண்டு நாட்கள் பார்த்துக் கொள்ளலாம்.
ஆனால், அதன் பின்னரும் பாதிப்பு குறையாமல் அதிகம் இருந்தால் உடனடியாக மருத்துவரை பார்ப்பது மிக அவசியம்.
அதேபோல் மருத்துவர் தரும் மருந்துகளின் அளவை நாமாக கூட்டவோ குறைத்தோ உட்கொள்ளக்கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)