
கிராமங்களில் பொடுதலையை அடிக்கடி துவையல் அரைத்து கொடுத்து சாப்பிட வைப்பார்கள். அதனால் வயிறு சமநிலை பெறும். ஜீரண சக்தி இன்றி சிரமப்படும் குழந்தைகளுக்கு முக்கியமான மருந்தாக இதைத்தான் கொடுப்பார்கள். அவ்வளவு சக்தி வாய்ந்த பொடுதலையின் ஆரோக்கிய குணங்களைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
இது பொடுகை போக்கியதால் பொடுதலை என பெயர் பெற்றது. பழங்கால மருத்துவங்களிலும் கிராமப்புறங்களில் இதை நோய் நீக்க பயன்படுத்தினார்கள். நம் தென்னிந்தியாவில் அதிகமாக காணப்படும் ஒரு மூலிகை ஆகும். இதில் பலவித சத்துக்களும் அடங்கியுள்ளன. வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, கால்சியம் சத்து, பாஸ்பரஸ், பி காம்ப்ளக்ஸ் சத்து, நார்ச்சத்து, அல்கஹலாய்ட் ஆகியவை இந்த மூலிகையில் உள்ளன.
அதிக மருத்துவ குணங்கள் கொண்ட இந்தக் கீரையை சமையலிலும் பயன்படுத்தலாம். பொடுதலைத் துவையல், பொடுதலை பொரியல், பொடுதலை கூட்டு, பொடுதலை பருப்பு சாதம் பொடுதலை கிரேவி என்று பலவிதமாக பயன்படுத்தி பயன் பெறலாம்.
பொடுதலையின் (Poduthalai keerai) பயன்கள்
இதன் இலைகளை தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றுடன் கலந்து தைலம் காய்ச்சி வடிகட்டி அந்த எண்ணெயை தினமும் தலையில் தேய்த்து வந்தால் தலையில் உள்ள பொடுகு போகும். தலைமுடி செழித்து வளரும். கண்ணில் எரிச்சல் தீரும். உடல் உஷ்ணம் குறையும்.
நீரிழிவு என்னும் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதில் பொடுதலைக்கு பெரும் பங்குண்டு. கைப்பிடி பொடுதலையை ஒரு டம்ளர் நீரில் போட்டு நன்றாக காய்ச்சி அந்த நீர் கால் பங்காக வற்றும் போது குடிக்க வேண்டும். இது இன்சுலின் என்ற ஹார்மோனை அதிகமாக சுரக்கச் செய்து நீரிழிவு நோயினால் ஏற்பட்ட பாதிப்புகளை குறைக்கும். மேலும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் வராமல் தடுக்கும். சளி, இருமல் குணமாகும். ஒற்றைத் தலைவலி நாளடைவில் குணமாகும்.
பொடுதலையை (Poduthalai keerai) மையாக அரைத்து அக்கி புண்கள் மீது தடவி வர அக்கி புண்களை குணப்படுத்தும். அக்கி வராமலும் தடுக்கும். இதனை முறையாக சமைத்து சாப்பிட்டு வர வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும். ஜீரண கோளாறுகளால் வரக்கூடிய இரண்டாம் வகை சர்க்கரை நோயை வராமல் தடுக்கும்.
பெண்களின் வெள்ளைப்படுதல் நோய்க்கு பொடுதலையை நிழலில் உலர்த்தி நன்றாக பொடித்து தினசரி காலை ஒரு டீஸ்பூன் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர இந்த நோய் குணமாகும். அதேபோல் பொடுதலையை கஷாயமாக வைத்து காலை, மாலை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
மாதவிடாய் ஏற்படுவதற்கு முன் ஏற்படும் எரிச்சல், டென்ஷன் ஆகியவையும் ,மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தத்தையும் போக்கும். இதன் இலைகளை அரைத்து பற்று போட உடம்பில் எந்த இடத்தில் வீக்கம், வலி போன்றவை இருந்தாலும் குறையும்.
இதனை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் கருப்பை வலு இல்லாமல் இருந்தால் கருப்பையை வலிமை பெறச் செய்யும். கருச்சிதைவு ஏற்படுவதைத் தடுக்கும். கை, கால்களில் வீக்கம் குணமாகும். சொறி, சிரங்கு, புண் மற்றும் இதர தோல்வியாதிகள் குணமாகும்.
பொடுதலையை அரைத்து அதனுடன் சிறிதளவு சீயக்காய் கலந்து தேய்த்து குளித்து வந்தால் தலையில் உள்ள பொடுகு போகும். பொடுதலையை துவையல் மற்றும் பருப்புடன் சேர்த்து கடைந்து சாப்பிட்டு வந்தால், வயிற்றுப்புண், உள்மூலம், வெளிமூலம், ரத்த மூலம் ஆகியவை சரியாகும்.
பொடுதலை எண்ணையை தலையில் தினசரி தடவி வந்தால் முடி உதிர்தல், அரிப்பு ஆகியவை சரியாகும். பொடுதலையை எந்த விதத்திலாவது தினசரி உணவில் சேர்த்து வரும் பொழுது உடல் சூட்டை தணித்து, செரிமானத்தைத் தூண்டி மலச்சிக்கலைப் போக்கும். ஆதலால் பொடுதலையை கீரை விற்பவர்களிடம் சொல்லி வைத்தால் அவர்கள் கேட்கும் போதெல்லாம் கொடுப்பார்கள்.
அது தரையோடு வளரும் செடி என்பதால் எந்தவித கழிவுகளும் இல்லாமல் மிகவும் கவனமாக சுத்தம் செய்து ,வாங்கி சமைத்து சாப்பிட்டு பழகுவோம். அது பல்வேறு நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றும் !
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)