
தொழில்நுட்பத்தின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது. குறிப்பாக, ஸ்மார்ட்போன் பயன்பாடு இந்த உலகத்துடன் நம்மை அதிகமாக இணைத்து, பல தகவல்களை விரைவாகப் பெற உதவுகிறது. இதனால், பல நன்மைகள் இருந்தாலும் அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அவற்றில் பெரும்பாலானவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைதான் “சைபர்சிக்னஸ் (Cybersickness)”. என்னப்பா, இங்கிலீஷ்ல என்னென்னமோ சொல்ற. எங்களுக்கு ஒன்னும் புரியலையே என்கிறீர்களா? வாங்க இந்தப் பதிவில் அத பத்தி முழுசா தெரிஞ்சுக்கலாம்.
சைபர்சிக்னஸ் என்பது கணினி, மொபைல் போன்ற சாதனங்களை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் ஒரு வகையான உடல் மற்றும் மனநலப் பிரச்சனை. இந்த பிரச்சனைகள் பற்றி பெரும்பாலும் நாம் உணர்வதில்லை என்றாலும், நீண்ட கால அடிப்படையில் இதன் பாதிப்பு கண்கூடாகத் தெரியும். அதுவும் தற்போது அனைவருமே ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால், தற்போது பொதுவான பிரச்சனையாக உள்ளது.
ஃபோன் பார்த்தா எப்படி பிரச்சினை வரும்?
நீங்கள் தொடர்ச்சியாக ஸ்மார்ட் ஃபோனை பார்க்கும்போது அதில் காட்டப்படும் படங்கள் விரைவாக மாறுகிறது அல்லவா? இந்த செயல்பாடு கண்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்து சோர்வை ஏற்படுத்தும். மேலும், இத்தகைய சாதனங்களில் காட்டப்படும் படங்கள் உண்மையான உலகில் நீங்கள் காணும் விஷயங்களுடன் வேறுபட்டு இருக்கும். இது மூளைக்கு குழப்பத்தை ஏற்படுத்தி சோர்வடையச் செய்யலாம்.
வீடியோ கேம் விளையாடும்போது அதில் பயன்படுத்தப்படும் 3டி காட்சிகளால் தலை சுற்றல், மயக்கம் போன்ற உணர்வுகள் ஏற்படும். மேலும், தொடர்ச்சியாக அந்த சாதனங்களை பயன்படுத்துவதால் கண்கள் வறண்டு போதல், கழுத்து மற்றும் முதுகு வலி போன்ற பாதிப்புகளை உண்டாக்கும். குறைந்த வெளிச்சத்திலோ அல்லது அதிக ஒளி இருக்கும் இடத்திலோ ஸ்மார்ட்போன், கணினி போன்ற சாதனங்களைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவது, சைபர்சிக்னஸ் பாதிப்பை அதிகரிக்கும்.
விளைவுகள்: இந்த சைபர்சிக்னஸ் பிரச்சனை உடல் மற்றும் மனநலம் இரண்டையும் கடுமையாக பாதிக்கிறது. குறிப்பாக, இன்றைய காலத்தில் இளைஞர்களும், குழந்தைகளும் நீண்ட நேரம் கைப்பேசி பயன்படுத்துவதால் அவர்களின் கல்வி மற்றும் தொழில் சார்ந்த விஷயங்கள் பாதிக்கப்படலாம். ஸ்மார்ட்போன் அதிகமாக பயன்படுத்துபவர்கள் மற்றவர்களுடன் நேரடித் தொடர்பு கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்வார்கள். நீண்ட காலமாக சைபர்சிக்னஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் பார்வை குறைதல், தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
நவீன வாழ்க்கையில் பெரும் பிரச்சினையாக மாறி இருக்கும் அதிக ஸ்மார்ட்போன் பயன்பாட்டை உடனடியாகக் குறைத்துக் கொள்ளுங்கள். இதனால், உங்கள் உடல் மற்றும் மனநலம் இரண்டையும் நீங்கள் பாதுகாத்துக் கொள்ள முடியும். என்னதான் தொழில்நுட்பம் நம் வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றாலும், அதை அதிகமாகப் பயன்படுத்தக்கூடாது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.