வீடு என்பது தூங்குவதற்கான இடம் மட்டுமல்ல, நாம் வாழும் நாட்களின் பெரும் பகுதியை செலவிடும் இடமும் அதுதான். எனவே, வீட்டின் உள்ளே நன்றாக இருப்பதை உறுதி செய்ய நாம் வாழ்கின்ற வீட்டின் வெளிப்புறத்தில் மட்டுமல்லாமல், உட்புறமும் அழகு நிறைந்து இருக்க வேண்டும். கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும், மனதிற்கு இனிமையாகவும் இருக்க வீட்டின் உட்புறத்தில் நாம் செய்யும் சிறிய அலங்காரம் கூட நம் மனதில் பெரிய மாற்றத்தை உண்டுபண்ணும். வீட்டின் உட்புறத்தை அழகாக வடிவமைக்க அதில் வாழும் நம்மால் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும். நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு வீட்டின் உட்புறப் பகுதியை வடிவமைத்துக் கொள்ளலாம். இதற்கு எந்தவிதமான விதிகளும் கிடையாது. கற்பனைத் திறனும், ஆக்கபூர்வமான சிந்தனைகளும், படைப்புத்திறனும் இருந்தால் மட்டும் போதும். சுவரின் நிறங்கள், டிசைன்கள், ஒளி தரும் பல்புகள், இயற்கை காட்சிகள் என நம் வீட்டின் உட்புறத்தை தனித்துவமாக இன்டீரியரை அமைக்க முடியும்.
கற்பனை திறனுக்கேற்ப வடிவமையுங்கள்: மக்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ரசனை உண்டு. நம்முடைய வீடு எந்த மாதிரியான அமைப்பில் இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து வைத்திருப்போம். சிலர் பாரம்பரிய முறையிலும், சிலர் மாடர்னாகவும், ட்ரெண்டிங்காகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். சிலர் குறிப்பிட்ட தீம்களில் வடிவமைக்க ஆசைப்படுவார்கள். சிலரோ, இதுவரை இல்லாத புதுமையான டிசைன்கள் வேண்டும் என்று நினைப்போம். இப்படி நம் விருப்பங்களுக்கு ஏற்ப நம்மால் வீட்டின் உட்புறத்தை தகுந்த இன்டீரியர் டெகரேட்டர் மூலம் வடிவமைத்துக்கொள்ள முடியும்.
வண்ணங்கள் செய்யும் மாயாஜாலம்: வண்ண உளவியலின்படி ப்ளஷ் பிங்க் மற்றும் வெளிர் நீலம் போன்ற வெளிர் நிறங்கள் கண்களை உறுத்தாத, மென்மையான நிறங்கள் மன அமைதியையும் மகிழ்ச்சியும் தரக்கூடியவை. மென்மையான நிறங்கள் நம் மனதை லேசாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள உதவும். மஞ்சள், சிவப்பு போன்ற அதிகமான அடர்நிறங்களால் ஆன சுவர்களுக்கு மத்தியில் நம்மால் நீண்ட நேரம் அதிக கவனத்துடன் வேலை செய்ய இயலாது. மன அழுத்தத்தை உண்டாக்கும். இவ்விதமான அடர் நிறங்களைத் தவிர்த்து மென்மையான வண்ணங்களை சுவர்களுக்குத் தேர்ந்தெடுக்கலாம்.
உள் அலங்காரங்கள்: கண்களுக்கு விருந்தளிக்கும் பசுமை நிறைந்த செடிகளை வீட்டிற்குள் (இன்டோர் பிளான்ட்) வளர்க்க நாம் வசிக்கும் இடம் அழகாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். கண்ணை உறுத்தாத பெயிண்டிங், சின்னச் சின்ன அலங்காரங்கள், அழகுச் செடிகள் போன்றவை நமக்கு அமைதியான, சந்தோஷமான மனநிலையை கொடுக்கும். தனித்துவமான டிசைனிங், அழகான அலங்காரப் பொருட்கள், படுக்கை அறையில் மென்மையான கண்களை நெருடாத திரைச்சீலைகள், சின்ன ஒளி விளக்குகள் என நம் பட்ஜெட்டிற்குள் வீட்டின் உட்புறத்தை அழகாக வடிவமைத்துக்கொள்ள முடியும்.
கிரியேட்டிவாக யோசியுங்கள்: நம் பட்ஜெட்டிற்கு தகுந்தாற்போல் வார்ட்ரோப் செட்டிங், அழகான, அதேசமயம் எளிமையான பர்னிச்சர்ஸ், விருப்பப்பட்டால் ஃபால்ஸ் சீலிங் என கிரியேட்டிவாக யோசித்து வீட்டுக்குள் இருக்கும் இடவசதிக்கு தகுந்தாற்போல் அழகுப்படுத்திக் கொள்ளலாம். அதிக இடம் அடைக்காத சுவருடன் அலமாரிகளை இணைக்கும்பொழுது பார்ப்பதற்கு சுவர் போன்றும், திறந்தால் அலமாரி போன்ற தோற்றமும் அளிக்கும். அதிக இடமும் பிடிக்காது.
கலை சேகரிப்பு: கலை ரசனை உள்ளவர்கள் என்றால் நம் மனநிலையை மேம்படுத்தும், நேர்மறையான எண்ணங்களை ஊக்குவிக்கும் சிறந்த ஓவியங்களைக் கொண்டு சுவர்களை அலங்கரிக்கலாம். மட்பாண்டங்கள், அலங்கார வளைவுகள், கண்ணாடி பொருட்கள், ஃபெங்சூய் பொருட்களைப் பயன்படுத்தி வீட்டிற்குள் நேர்மறையான அதிர்வுகளைக் கொண்டு வரலாம். இவை நம் மனநிலையை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவும்.