ஒட்டுமொத்த உடலுக்கும் உடற்பயிற்சி தரும் சைக்கிள் ரைடிங்!

ஒட்டுமொத்த உடலுக்கும் உடற்பயிற்சி தரும் சைக்கிள் ரைடிங்!

Published on

நாம் சென்ற தலைமுறையில் உபயோகித்த பொருட்கள் தற்போது பழைமையாகத் தோன்றினாலும், அவை ஒவ்வொன்றிலும் ஏதோ ஒரு பலனும், மகிழ்ச்சியும் இருக்கத்தான் செய்தது. அம்மிக்கல், ஆட்டுரல் என சமையல்கட்டிலிருந்து, வாசலில் ஓட்டிச் சென்ற சைக்கிள் வரை உடலுக்குத் தேவையான சுறுசுறுப்பையும் வலிமையையும் தந்தது எனில் மிகையில்லை. இவற்றையெல்லாம் ஓரங்கட்டியதன் விளைவு, தற்போதைய தலைமுறையினர் ஆரோக்கியத்தில் மோசமாக அவதியுறுவதைப் பார்க்க முடிகிறது.

நம்மில் பலர் தற்போது மறந்த சைக்கிள் பல நன்மைகளைத் தந்து ஆரோக்கியத்தைப் பாதுகாத்தது. இப்போது சிறுவர்கள், பெரியவர்களால் மறுபிறப்பு பெற்றாலும் பழைய மாதிரி சைக்கிளை மிதிப்பதற்குபதில் இ சைக்கிள், கியர் சைக்கிள் என அதன் பணி வேறு மாதிரி உள்ளது.

சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் போக்குவரத்துக்கான முதன்மை வாகனமாக சைக்கிள் பயன்படுத்தப்படுகிறது. சைக்கிளுக்கென தனி லேன், போக்குவரத்து சிக்னல்கள் என சைக்கிள் பயணத்தை ஊக்குவிப்பதாக உள்ளது.

சைக்கிள் ஓட்டுவதால் நன்மைகள் பல கிடைக்கின்றன. சைக்கிளை மிதிக்கும்போது கால் பாதத்திலிருந்து மூளை வரை உடலின் அனைத்து உறுப்புகளும் இயக்கத்தில் உள்ளன. அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டிட 300 கலோரிகள் எரிக்கப்படுவதாகவும், உடலில் படியும் கொழுப்பை கரைப்பதால் இரத்த ஓட்டம் சீராக பராமரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இரத்த ஓட்டம் சீராக இருப்பதால் இரத்தக் கொதிப்பு மற்றும் மாரடைப்பு போன்ற இதய நோய்களைத் தடுக்கிறது. சைக்கிள் ஓட்டும்போது சுவாசம் சீராகி, மூளைக்குத் தேவையான சுத்தமான பிராண வாயு கிடைக்கிறது. உடலில் உள்ள கெட்ட நீர் வியர்வையாக வெளியேறுவதால் உடல் எடை குறைவதோடு, புத்துணர்வையும் பெற முடிகிறது.

சைக்கிளை மிதிப்பதால் காலுக்கு நல்ல பயிற்சி கிடைப்பதோடு, கால் நரம்பு, எலும்புகள் வலுவடையும். உடல் முழுவதற்குமான சிறந்த பயிற்சியாகயும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் சைக்கிள் ஓட்டுதல் திகழ்கிறது.

எரிபொருள் இல்லாமை, இடவசதி, பராமரிப்பு என சைக்கிள் பல நல்ல பலன்களையே தருகிறது. நம் பிள்ளைகளை ஒரே இடத்தில் வைக்காமல் சைக்கிள் ஓட்டச் சொல்வதன் மூலம் சுவாச சுத்தம், உடல் வலிமை, புத்துணர்ச்சி என பல பலன்களை அவர்களுக்குக் கிடைக்கச் செய்யலாம்.

logo
Kalki Online
kalkionline.com