தற்போது ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்பு கவலைக்குரியதாக மாறி விட்டது. மாரடைப்பு பற்றித் தொகுத்த சில தகவல்களை இங்கு காண்போம்.
மாரடைப்பு என்றால் என்ன?
மாரடைப்பு என்பது இதய தசைக்கு இரத்த ஓட்டம் குறைவதால் அல்லது தடைபடுவதால் ஏற்படும். உடனடி மருத்துவ அவசரநிலை தேவைப்படும். ஒரு உடல் நிலை பாதிப்பு ஆகும்.
மாரடைப்பின் அறிகுறிகள்:
மார்பில் அழுத்துதல் அல்லது வலிப்பது போன்ற உணர்வு ஏற்படலாம். தோள்பட்டை, கை, முதுகு, கழுத்து, தாடை, பற்கள் அல்லது சில நேரங்களில் மேல் வயிற்றில் பரவும் வலி அல்லது அசௌகரியமான நிலை. ஜில்லென்ற குளிர் வியர்வை. சோர்வு. நெஞ்செரிச்சல், திடீர் தலைச்சுற்றல், குமட்டல், மூச்சுத் திணறல் ஆகியவை.
எவ்வளவு நேரம், எப்படி நீடிக்கும்?
மாரடைப்பு பொதுவாக 15 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும். மார்பு வலி லேசானதாகவோ அல்லது கடுமையானதாகவோ இருக்கலாம். சிலருக்கு, குறிப்பாக பெண்களுக்கு, அறிகுறிகள் குறைவாகவே வெளிப்படும். உதாரணமாக, மாரடைப்பு அறிகுறிகளில் குமட்டல் அல்லது கழுத்து, கை அல்லது முதுகில் ஒரு குறுகிய அல்லது கூர்மையான வலி உணரப்படலாம்.
சில மாரடைப்புகள் திடீரென நிகழ்கின்றன. ஆனால் பலருக்கு மணிநேரங்கள் அல்லது நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை அறிகுறிகள் இருக்கும்.
தடுப்பு முறைகள் என்ன?
பொதுவாக வாழ்க்கை முறை மாற்றங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் மற்றும் மாரடைப்பைத் தடுக்கவும் உதவும். புகைபிடிக்கவோ அல்லது புகையிலை பயன்படுத்தவோ தவிருங்கள். தொடர்ந்து உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமான எடையை பராமரியுங்கள். சத்தான உணவுகளை உண்ணுங்கள், உப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளைக் குறைக்கவும். மதுவை கட்டுப்படுத்துங்கள். மன அழுத்தத்தை நிர்வகித்து இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்தவும். தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்கி ஓய்வு எடுப்பது அவசியம்.
மாரடைப்பு வந்தபின் செய்யப்படும் முதலுதவி .. ?
மாரடைப்புக்கான முதலுதவியில் Cardio Pulmonary resuscitation (CPR) சிகிச்சை முக்கியமானது. இது ஒரு நபரின் உயிரைக் காப்பாற்ற உதவும். நபருக்கு நாடித்துடிப்பு இல்லாவிட்டால் அல்லது சுவாசிக்கவில்லை என்றால் CPR-ஐத் தொடங்குங்கள். நீங்கள் CPR-ல் பயிற்சி பெறவில்லை என்றால், கைகளால் மட்டும் CPR-ஐச் செய்யுங்கள்.
அதாவது, அந்த நபரின் மார்பில் கடுமையாகவும் வேகமாகவும் அழுத்துங்கள். இதை ஒரு நிமிடத்திற்கு 100 முதல் 120 முறை செய்யலாம்.
மாரடைப்புக்கான அறிகுறிகளை தயவுசெய்து புறக்கணிக்காதீர்கள். ஆம்புலன்ஸ் அல்லது அவசர வாகனம் உங்கள் இடம் வராத சூழலில் அருகிலுள்ளவரின் உதவியுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்லுங்கள். வேறு வழியேயில்லை என்றால் மட்டும் நீங்களே வாகனம் ஓட்டுங்கள்.
பரிந்துரைக்கப்பட்டால் ஆஸ்பிரின் எடுத்துக் கொள்ளுங்கள். ஆஸ்பிரின் இரத்த உறைவைத் தடுக்க உதவுகிறது. மாரடைப்பின் போது ஆஸ்பிரின் உட்கொள்வது இதய பாதிப்பைக் குறைக்கலாம் எனப்படுகிறது. ஆனாலும் குடும்ப மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது.
குறிப்பாக உங்களுக்கோ அல்லது வேறு யாருக்காவது மாரடைப்பு ஏற்படக்கூடும் என்று நினைத்தால் 911 அல்லது அவசர மருத்துவ உதவியை தாமதிக்காமல் அழைக்கவும்.
தனியே இருக்கும் போது மாரடைப்பு வந்தால் என்ன செய்யலாம்?
தனியே இருக்கும் போது வரும் மாரடைப்பில் சுயநினைவை இழக்கும் முன் தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும வேண்டும். ஒவ்வொரு முறை இருமுவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும், இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும். இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும்.
மூச்சை இழுத்து விடுவதினால் நுரையீரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது. மேலும் இருமல் இருதயம் நிற்பதில் இருந்து தடுத்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும். இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இருமல் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும். பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம் என்கிறது ஒரு குறிப்பு.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)