இந்தியாவில் குஜராத் மாநிலத்தின், பவநகரிலிருந்து தென்மேற்கில் 50 கி. மீ. தொலைவில் அமைந்திருக்கிறது பாலிதானா (Palitana) நகரம். இந்நகரத்திலிருந்து 3 கி மீ தொலைவில் சத்ருஞ்ஜெய மலை உள்ளது. இம்மலை சமண சமயத்தவர்களின் முக்கியமான ஐந்து புனிதத் தலங்களில் முதன்மையானதாகும்.
சத்ருஞ்ஜெய (Shatrunjaya) என்பதற்கு மனதின் எதிரிகளை வென்றவர் என்று பொருள். பண்டைய வரலாற்றில் இம்மலையின் பெயர் புண்டரீக மலை என்பதாகும். தீர்த்தங்கரரின் கணாதரர் எனப்படும் தலைமை மாணவரான புண்டரீக சுவாமி என்பவரின் பெயரால் இம்மலை புண்டரீக மலை என அழைக்கப்பட்டது என்று பண்டைய வரலாறு கூறுகிறது. இம்மலையில் பல தீர்த்தங்கரர்களுக்கு அறிவொளி கிடைத்ததால், இம்மலையை சித்த சேத்திரம், சித்தாலயம், முக்தி நிலையம் போன்ற சிறப்புப் பெயர்களாலும் அழைக்கின்றனர்.
சமணர்களின் முதல் தீர்த்தங்கரர், ஆதிநாதர் எனும் ரிசபதேவர், இம்மலையில் அமர்ந்து தியானம் செய்தார் என்பதும், ரிசபதேவர் இம்மலை மீதுதான் தனது சமயப் பரப்புரையை முதன் முதலில் மேற்கொண்டார் என்பதும் சமணர்களின் நம்பிக்கை.
இங்கு சமணர்களின் முதல் தீர்த்தங்கரர் ரிசபதேவர் என்ற ஆதிநாதர் கோயில் முதன்மையான கோயிலாக இருக்கிறது. இங்கு ஆதிநாதர் கோயில் உட்பட, சமண சமயத்தவர்கள் வழிபடும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட 863 கோயில்கள் அமைந்திருக்கின்றன. இக்கோயில் தொகுதி அமைந்திருக்கும் மலை 7,288 அடி (2,221 மீ) உயரத்தில் அமைந்துள்ளது. மலையின் உச்சியை அடைவதற்கு 3,750 கல் படிகளுக்கு மேல் ஏற வேண்டும். இம்மலையின் உச்சியில்தான் ஆதிநாதர் கோயில் அமைந்திருக்கிறது.
சத்ருஞ்சய மலையில் உள்ள பாலிதானா கோயில்கள் 11 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கி 900 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டிருக்கின்றன. இந்த இடத்தில் முதல் கோயிலைக் கட்டியவர் சமணப் புரவலரான குமார்பால் சோலங்கி என்பவராவார்.
கி.பி 1311 ஆம் ஆண்டில் துருக்கிய முஸ்லிம் படையெடுப்பாளர்களால் இந்தக் கோயில்கள் அழிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, துறவி ஜினபிரபாசூரி என்பவர் கோயில்களுக்கு தலைமை தாங்கி, கோயில்களை மீட்டெடுத்தார் என்று வரலாறுகள் சொல்கின்றன.
இம்மலையைப் பார்க்க நாள்தோறும் இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இம்மலையில் ஏறுகின்றனர். கார்த்திகை மாதம் முழு நிலவு நாளன்று அதிக அளவிலான சமண சமயத்தினர் இங்குள்ள கோயில்களைத் தரிசித்துச் செல்கின்றனர். சமணர்கள் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது சத்ருந்ஜெய மலையில் அமைந்திருக்கும் 863 கோயில் தொகுதிகளைக் கண்டு தரிசனம் செய்வதன் மூலம் மோட்சம் கிட்டும் எனக் கருதுகின்றனர். சத்ருஞ்ஜெய மலைக்கு நேமிநாதர் தவிர, மற்ற அனைத்து சமணத் தீர்த்தங்கரர்களும் வருகை புரிந்துள்ளனர் என்கின்றனர்.
ஸ்வேதாம்பர ஜெயின் மூர்த்தி பூஜக அறக்கட்டளைகளில் ஒன்றால் புனித ஸ்தலங்களைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் இம்மலை பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதன்படி,
சத்ருஞ்சய மலையில் யாரும் இரவு தங்க அனுமதிக்கப்படுவதில்லை.
மழைக்காலத்தில் இங்கு பயணம் மேற்கொள்ள முடியாது.
தோல் அல்லது ரோமங்களால் ஆன எதையும் இம்மலைக்கு எடுத்துச் செல்லக் கூடாது.
பார்வையாளர்கள் புகைப்படம் எடுப்பதற்குச் சில விதிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
மேலும், இம்மலைக்குச் செல்லும் அனைத்து பார்வையாளர்களும் சூரியன் மறைவதற்கு முன் கீழே இறங்கி விட வேண்டும். அக்டோபர் முதல் ஜூன் வரை மட்டுமே சத்ருஞ்சயாவை அணுக முடியும்.
பார்வையாளர்கள் நடந்துதான் உச்சியை அடைய வேண்டும் அல்லது டோலி எனும் ஒரு வகையான சுமந்து செல்லும் பல்லக்கில் செல்லலாம். கீழிருந்து நடந்து செல்லும் மக்கள் தங்கள் சக்தியை மீட்டெடுக்க, வழியில் விற்பனைக்குக் கிடைக்கும் தயிரைப் பெற்றுக் கொள்கிறார்கள்.
சமணர்களின் புனித மலையான இம்மலை, உலகில் அதிகமான கோயில்களைக் கொண்ட மலை என்கிற பெயரையும் பெற்றிருக்கிறது.