சமீப காலமாகவே மக்கள் மத்தியில் சியா விதைகள் பிரபலம்டைந்து வருகின்றன. இதில் அதிக அளவு ஒமேகம் 3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், இது பலரால் விரும்பப்படுகிறது. இருப்பினும், இவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது சில ஆபத்துக்களை ஏற்படுத்தலாம். இந்தப் பதிவில் சியா விதைகளை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
செரிமானப் பிரச்சனைகள்: சியா விதைகளை அதிக அளவில் உட்கொள்வது, குறிப்பாக இதை உட்கொள்ளும்போது போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வயிற்று வலி, வயிறு வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். சியா விதைகள் தண்ணீரில் நனைந்தால் தடிமன் ஆகிவிடும். அவை குடலில் அடைப்பை ஏற்படுத்தி தீவிர உடல் நல சிக்கல்களை உண்டாக்கும்.
நீர் பற்றாக்குறை: சியா விதைகள் தண்ணீரை அதிக அளவில் உறிஞ்சிக் கொள்ளும் தன்மை கொண்டவை. எனவே, போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் சியா விதைகளை உட்கொள்வது உடலில் நீரேற்றக் குறைபாட்டை ஏற்படுத்தும். இதனால், அதிக தாகம், வாய் வறண்டு போதல், தலைச் சுற்றல், தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
ஊட்டச்சத்து குறைபாடு: சியா விதைகள் பல முக்கியமான ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும். இருப்பினும், இதை அதிக அளவில் உட்கொள்வது மற்ற ஊட்டச்சத்துக்களின் உறிஞ்சுதலை பாதிக்கலாம். குறிப்பாக, இரும்பு, துத்தநாகம், மெக்னீசியம் போன்ற தாதுக்களின் உறிஞ்சல் இதனால் குறையும் வாய்ப்புள்ளது.
ஒவ்வாமை எதிர்வினைகள்: சிலருக்கு சியா விதைகளில் உள்ள புரதங்கள் அல்லது பிற ரசாயனங்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால், சருமத்தில் வெடிப்பு, வீக்கம், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற தீவிரமான ஒவாமை எதிர்வினைகள் ஏற்படலாம்.
ரத்த சர்க்கரை பாதிப்பு: சியா விதைகள் குறைந்த கிளைசெமி குறியீட்டைக் கொண்டிருந்தாலும், இதை அதிக அளவில் உட்கொள்வது ரத்த சர்க்கரை அளவை பாதிக்கும். குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்கள் சியா விதைகளை அதிக அளவில் உட்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும்.
எடை அதிகரிப்பு: சியா விதைகள் அதிக கலோரிகள் கொண்டவை. எனவே, அதிக அளவில் இவற்றை உட்கொள்வது எடை அதிகரிப்பை ஏற்படுத்தலாம். குறிப்பாக, நீங்கள் உட்கொள்ளும் கலோரிகளை விட குறைவான கலோரிகளை எரிக்கும் சமயத்தில் இது நிகழும் வாய்ப்புகள் அதிகம்.
சியா விதைகளில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், இவற்றை அதிக அளவில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். எனவே, இதை உங்கள் உணவில் சேர்ப்பதற்கு முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. மேலும், போதுமான அளவு தண்ணீர் குடித்து, பிற ஊட்டச்சத்துக்களின் சமநிலையைப் பராமரிப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.