நம்மில் பலர் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசையில் பல்வேறு உடற்பயிற்சிகள், உணவு முறைகளைப் பின்பற்றுவோம். ஆனால் என்ன செய்தாலும் சிலருக்கு உடல் எடை அதிகரித்து கொண்டே போகும். இதற்கு காரணம் நாம் நம்மையும் அறியாமல் செய்யும் சில தவறான பழக்க வழக்கங்களை. அத்தகைய பழக்க வழக்கங்கள் என்ன என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தூக்கமின்மை: நீங்கள் நினைப்பது போல தூக்கம் என்பது வெறும் ஓய்வு மட்டுமல்ல, நம் உடலின் ஹார்மோன் சுரப்பை சீராக்கி, வளர்ச்சிதை மாற்றத்தை சரியாக நடைபெறச் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. போதுமான தூக்கம் இல்லாதபோது, ‘கிரெலின்’ என்ற பசியைத் தூண்டும் ஹார்மோன் அதிகமாக சுரந்து, லெப்டின் என்ற பசியைத் தணிக்கும் ஹார்மோன் குறைவாக சுரக்கிறது. இதனால், நாம் அதிகமாக சாப்பிட தூண்டப்படுவோம். மேலும், தூக்கமின்மை காரணமாக உடலில் கார்ட்டிசோல் என்ற அழுத்த ஹார்மோன் அதிகரித்து, உடலில் கொழுப்பு சேர்வதை அதிகரிக்கும்.
நீர் குறைபாடு: நீர் நம் உடலில் பல முக்கிய செயல்பாடுகளைச் செய்கிறது. இதில் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் நச்சுப் பொருட்களை வெளியேற்றுவது ஆகியவை அடங்கும். போதுமான அளவு தண்ணீர் குடிக்காதபோது, உடல் நீரிழப்பை ஈடு செய்ய முயற்சிக்கும். இதனால், பசி மற்றும் தாகம் ஆகிய இரண்டையும் ஒரே மாதிரியாக உணர்கிறோம். இதன் விளைவாக நாம் தேவையை விட அதிகமாக சாப்பிடும் வாய்ப்புள்ளது.
அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளல்: சர்க்கரை நம் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளித்தாலும், அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளல், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். சர்க்கரை உடலின் ரத்த சர்க்கரை அளவை அதிகரித்து இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும். இன்சுலின் உடலில் உள்ள அதிக சர்க்கரையை கொழுப்பாக மாற்றி சேமிக்கும். இதனால் உடல் எடை அதிகரிக்கும்.
உடல் செயல்பாடு இல்லாத வாழ்க்கை: நவீன வாழ்க்கை முறையில் நாம் பெரும்பாலும் உட்கார்ந்து நிலயிலேயே வேலை செய்வதால், உடல் செயல்பாடு குறைந்துவிடுகிறது. உடல் செயல்பாட்டு குறைவதால் கலோரி எரிப்பு குறைந்து கொழுப்பு சேர்வது அதிகரிக்கும். இதனால், உடல் எடையும் அதிகரிக்கும்.
மன அழுத்தம்: மன அழுத்தம் காரணமாக கார்ட்டிசோல் என்ற அழுத்த ஹார்மோன் அதிகரித்து உடலில் கொழுப்பு சேர்வது அதிகரிக்கும். மேலும், மன அழுத்தம் அதிகரித்தால், நாம் ஆறுதல் அடைவதற்கு அதிகமாக சாப்பிடும் வாய்ப்புள்ளதால், மன அழுத்தம் உடல் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணியாக அமையக்கூடும்.
தவறான உணவுப் பழக்கங்கள்: அதிக கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்வது உடல் எடையை கணிசமாக அதிகரிக்கும். இதுபோன்ற உணவுகள் கலோரி மதிப்பு அதிகம் கொண்டவை. இந்த கலோரி எரிக்கப்படாமல் உடலில் கொழுப்பாக சேமிக்கப்படும்.
இப்படி உடல் எடையை அதிகரிப்பதற்கு பல்வேறு விதமான காரணங்கள் உள்ளன. இதில் நீங்கள் எந்தத் தவறான பழக்கத்தைக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் கண்டறிவது மிகவும் முக்கியம். ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள் போதுமான உடற்பயிற்சி, தகுந்த தூக்கம் மற்றும் மன அழுத்தத்தை நிர்வாகித்தல் ஆகியவை உடல் எடையை கட்டுப்படுத்த உதவும்.