

நமக்கு வயதாகும்போது, தசைகளின் ஆரோக்கியத்திற்கும், இதயம் மற்றும் மூளையின் சிறப்பான செயல்பாட்டிற்கும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் தேவைப்படுகிறது. இதற்கு நாம் காலை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டிய ஐந்து வகை உணவுகள் (Breakfast for senior citizens) என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. ஓட் மீல்: சீனியர் சிட்டிசன்களுக்கு எந்தக் காலத்திற்கும் பொருந்தக் கூடிய உணவு ஓட் மீல். இதிலுள்ள கரையக்கூடிய நார்ச் சத்துக்கள் உடலில் கொழுப்பின் அளவைக் குறைக்கவும், இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தவும் உதவும். இதனால் இதய நோய் மற்றும் டைப் 2 வகை நீரிழிவு நோய் வராமல்
உடலைப் பாதுகாக்க முடியும். ஸ்டீல்-கட் அல்லது நசுக்கிய ஓட்ஸ் வகை பாதுகாப்பானவை. ஓட் மீல் மீது பெரி வகைப் பழங்கள், உலர் கொட்டைகள் மற்றும் சிறிது பட்டை (Cinnamon) பவுடர் தூவி உண்பது உடலில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் அளவை அதிகரிக்க உதவும்.
2. க்ரீக் யோகர்ட்: இதிலுள்ள அதிகளவு ப்ரோட்டீன் சத்துக்கள் தசைகளின் அளவையும் சக்தியையும் மேம்படுத்த உதவுகின்றன. கால்சியம் எலும்புகளை பலப்படுத்தவும், ப்ரோபயோட்டிக்குகள் இரைப்பை குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து செரிமானம் சிறப்பாக நடைபெறவும் உதவி புரிகின்றன. கலோரி அளவு குறைவாக எடுத்துக்கொள்ள விரும்புவோர் குறைந்த அளவு கொழுப்பு உள்ள அல்லது கொழுப்பு சத்து இல்லாத யோகர்ட்டை தேர்ந்தெடுக்கலாம். முழுமையான கொழுப்பு நிறைந்த யோகர்ட் எடுத்துக்கொண்டால், கூடுதல் சர்க்கரை சேர்க்காமலே, சுவையும், நல்ல திருப்தியும் கிடைக்கும். ப்ரோட்டீன், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த க்ரீக் யோகர்ட்டை காலையில் உட்கொள்வது நீடித்த சக்தி, சீரான செரிமானம் மற்றும் வலுவான தசைக் கட்டமைப்பு பெற உதவும். சீட்ஸ் அல்லது முழு தானிய க்ரனோலா சேர்த்து உண்பது கூடுதல் நார்ச்சத்தும் ஊட்டச்சத்தும் தரும்.
3. முட்டை: உயர்தர புரதச் சத்து, அமினோ ஆசிட்ஸ், வைட்டமின் D, வைட்டமின் B12 மற்றும் ச்சோலைன் சத்துக்கள் நிறைந்தது முட்டை. இவை முதியோர்களுக்குத் தேவையான மூளை ஆரோக்கியம், தசைகளின் சிறப்பான செயல்பாடுகள் மற்றும் சுறு சுறுப்பு ஆகியவை கிடைக்க பெரிதும் உதவி புரியும்.
முழு தானிய பிரட்டை டோஸ்ட் செய்து முட்டை ஆம்லெட்டுடன் சாப்பிட்டால் காலைப் பொழுது முழுவதிற்குமான சக்தி கிடைக்கும்.
4. முழு தானிய பிரட்: இதிலுள்ள பல வகையான கார்போ ஹைட்ரேட்கள் சக்தியின் அளவை குறைவாக எரியச் செய்து, இரத்தத்தில் சர்க்கரை மெதுவாக கலக்க உதவுகிறது. முழு தானிய பிரட்டில் உள்ள நார்ச் சத்துக்கள், B வைட்டமின்கள் மற்றும் கனிமச் சத்துக்கள் செரிமானம் சிறப்பாக நடைபெறவும், இதய இரத்த நாளங்கள் ஆரோக்கியமாக செயல்படவும் உதவி புரிகின்றன. இந்த பிரட்டுடன் அவகாடோ பழம், நட் பட்டர், தக்காளிப் பழம் சேர்த்து உண்பது கூடுதலாக நல்ல கொழுப்பு, ப்ரோட்டீன் மற்றும் வைட்டமின் சத்துக்கள் பெற உதவும்.
5. ஃபிரஷ் ஃபுரூட்ஸ்: ஃபிரஷ் ஆப்பிள், பெரி வகைப் பழங்கள், வாழைப்பழம் ஆகியவை ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தவை. இவை உடலின் வீக்கங்களைக் குறைக்கவும், இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கவும் சிறந்த முறையில் உதவி புரிபவை. இவற்றில் உள்ள இயற்கை முறை சர்க்கரை சத்து மெதுவாக இரத்தத்தில் கலப்பதால், இரத்த சர்க்கரை அளவு சமநிலையற்றுப் போகும் வாய்ப்பு உண்டாகாது. இப்பழங்களை யோகர்ட், காட்டேஜ் சீஸ் மற்றும் நட்ஸ் உடன் சேர்த்து உண்பது கூடுதல் ஆரோக்கியம் பெற உதவும்.
மூத்த குடி மக்கள் மேற் கூறிய உணவுகளை காலை வேளைகளில் உட்கொண்டு ஆரோக்கியம் பெறுவீர்.