

காலையில் எழுந்ததும் நம் வீட்டு சமையலறையில் இருந்து கேட்கும் விசில் சத்தம் தான், அந்த நாளின் அலாரம் கிளாக். "நேரமில்லை, சீக்கிரம் கிளம்பணும்" என்று சொல்லிக்கொண்டே ஓடும் இந்த நவீன வாழ்க்கையில், பிரஷர் குக்கர் என்பது இல்லத்தரசிகளின் உற்ற தோழனாகிவிட்டது.
அடுப்பில் வைத்து மூன்றே விசில் வந்தால் போதும், பஞ்சு போன்ற சாதம் தயார். ஆனால், இந்த வேகம் நம் உடலுக்கு வினையாக மாறுகிறதோ என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. நேரத்தை மிச்சப்படுத்துவதாக நினைத்து, ஆரோக்கியத்தை நாம் அடகு வைத்துக்கொண்டிருக்கிறோமா? வாருங்கள் அலசுவோம்.
மாவுச்சத்து!
நம் பாட்டி காலத்தில் சோறு சமைப்பது என்பதே ஒரு கலை. பெரிய பானையில் அரிசி வேகவைத்து, அது பக்குவம் வந்ததும், அதைச் சாய்த்து அதிலிருக்கும் கஞ்சியை வடித்து விடுவார்கள். இந்த 'கஞ்சி வடித்தல்' வெறும் சமையல் முறை மட்டுமல்ல, அது ஒரு சுத்திகரிப்பு முறை. அரிசியில் இருக்கும் அளவுக்கு அதிகமான ஸ்டார்ச் எனப்படும் மாவுச்சத்து அந்த கஞ்சியோடு வெளியேறிவிடும்.
ஆனால், குக்கரில் நாம் வைக்கும் தண்ணீர், அந்த குக்கருக்குள்ளேயே ஆவியாகி, மீண்டும் அந்த அரிசிக்குள்ளேயே திணிக்கப்படுகிறது. வெளியேற வேண்டிய கெட்ட மாவுச்சத்து, சாதத்திலேயே தங்கிவிடுகிறது. இதைச் சாப்பிடுவது, மறைமுகமாக சர்க்கரையை அள்ளிச் சாப்பிடுவதற்குச் சமம்.
தொப்பையும் நோய்களும்!
இன்றைய தேதியில் சாலைகளில் நடப்பவர்களில் பாதிப் பேர் அதிக உடல் எடையுடன் இருப்பதைக் காண்கிறோம். "நான் அளவா தான் சார் சாப்பிடுறேன், ஆனா வெயிட் குறையவே மாட்டேங்குது" என்று புலம்புபவர்கள் அதிகம். இதற்கு முக்கிய காரணம், நாம் சாப்பிடும் இந்த குக்கர் சாதம் தான்.
இதில் தங்கியிருக்கும் அதீத கார்போஹைட்ரேட், நம் உடலில் கொழுப்பாக மாறுகிறது. இதுவே நாளடைவில் உடல் பருமனை அதிகரித்து, நம்மை சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு மற்றும் இதய நோயாளிகளாக மாற்றுகிறது. பி.எம்.ஐ (BMI) எனப்படும் உடல் எடையை சீராகப் பராமரிக்க முடியாமல் போவதற்கு, இந்த சமையல் முறையே முதல் எதிரி.
குழந்தைகளின் எதிர்காலம்!
பெரியவர்களுக்காவது வேலை, அலைச்சல் என்று கொஞ்சமாவது உடலுழைப்பு இருக்கிறது. ஆனால், இன்றைய குழந்தைகள், பள்ளி விட்டால் டியூஷன், விட்டால் மொபைல் கேம்ஸ் என்று ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்கிறார்கள். அவர்களுக்கு இந்த மாவுச்சத்து நிறைந்த குக்கர் சோற்றைப் போடுவது, எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போன்றது. சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படுவதற்கு இது மிக முக்கிய காரணமாக அமைகிறது.
மாற்று வழி?
உடனே குக்கரைத் தூக்கி குப்பையில் போடச் சொல்லவில்லை. பிரியாணி போன்ற உணவுகளைச் சமைக்கும்போதோ அல்லது மிகவும் அவசரமான நாட்களிலோ குக்கரைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், தினசரி மதிய உணவு என்பது நம் ஆரோக்கியத்தின் ஆதாரம். அதற்குச் சற்றே மெனக்கெட்டு, பாத்திரத்தில் வடித்துச் சமைக்கும் பழைய முறைக்கு மாறுவதே புத்திசாலித்தனம். வடித்த சாதத்தில் நார்ச்சத்து மட்டுமே மிஞ்சும் என்பதால், அது செரிமானத்திற்கு மிகவும் நல்லது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)