
பெரும்பாலானோர் தங்கள் தினசரி தேவையை விட குறைவான நீரையே குடிக்கிறார்கள். இது சிறிய பிரச்னை என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் உண்மையில் பல உடல்நலக் கோளாறுகளுக்கு இது காரணமாக அமையலாம்.
குறைவான நீர் அருந்துவது சிறுநீர்ப்பாதையில் கற்கள் உருவாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. கற்கள் அகற்றப்பட்டாலும், மீண்டும் வராமல் தடுக்க தினமும் போதுமான நீர் அருந்துவது அவசியம். இது சுமார் 2 முதல் 3 லிட்டர் சிறுநீரை வெளியேற்ற உதவும். தண்ணீர் குறைவாகக் குடிக்கும்போது, உடலில் உள்ள கழிவுகள் அடர்த்தியான சிறுநீராக வெளியேறும், இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. மேலும், போதுமான நீர் குடிக்காததால் சிறுநீர் அடிக்கடி வெளியேறாமல், உடலில் உள்ள நச்சுக்கள் தேங்கி, சிறுநீர்ப் பாதை தொற்றுகள் ஏற்படலாம்.
செரிமானக் கோளாறுகள்: குறைந்த நீர் அருந்துவது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். ஏனெனில் தண்ணீர் உணவைச் செரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது. போதுமான நீர் இல்லாதபோது, உணவு செரிக்க நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதால் செரிமானப் பிரச்னைகள் உருவாகின்றன.
சருமப் பிரச்னைகள்: குறைவான நீர் அருந்துவதன் மிகப்பெரிய பாதிப்பு சருமத்தில் தென்படும். சருமம் வறண்டு, பொலிவிழந்து காணப்படும். போதுமான நீர் அருந்துவது சருமத்தை நீரேற்றமாக வைத்து, பளபளப்பாகவும், சுருக்கங்கள் இல்லாமலும் வைத்திருக்க உதவும்.
மேலும், நீர்ச்சத்து குறைபாடு ஆற்றல் குறைவு மற்றும் சோர்வுக்கு வழிவகுக்கும். மூளையின் செயல்பாட்டையும் இது பாதிக்கலாம். தலைவலி, கவனச்சிதறல், மற்றும் எரிச்சல் போன்ற மனநிலை மாற்றங்களும் ஏற்படலாம்.
யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?
கால்களில் வீக்கம், இதய நோய், சிறுநீரகச் செயலிழப்பு, மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிகமாக நீர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இவர்களுக்கு உடலில் அதீத நீர் சேர்வது ஆபத்தில் முடியலாம்.
மனித மூளையில் தாகத்தை உணர்த்தும் மையம் உள்ளது. ஆனால் 3 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கும், 70 வயதைக் கடந்தவர்களுக்கும் இந்த தாக உணர்வு குறைவாக இருக்கும். எனவே, இந்த வயதினர் தாகம் எடுப்பதற்கு முன்பே அவர்களுக்கு நீர் கொடுக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் அவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு மற்றும் இரத்த அழுத்தம் குறையும் அபாயம் உள்ளது.
நிபுணர்களின் கூற்றுப்படி, காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், சிறுநீரகங்கள் திறம்பட செயல்படவும் உதவுகிறது. மேலும், இது உடல் எடையைக் குறைப்பதற்கும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் துணைபுரியும்.
டீ அல்லது காபி அருந்துவதற்கு முன், ஒரு கிளாஸ் நீர் அருந்துவது நல்லது. குறிப்பாக வெதுவெதுப்பான நீர் அருந்துவது செரிமானத்திற்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் நன்மை பயக்கும்.