நம்மில் பெரும்பாலானோர், காலை எழுந்ததும் முதல் வேலை ஒரு சூடான தேநீரைப் பருகுவதை பழக்கமாக வைத்துள்ளோம். ஆனால், உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடும்போது, தேநீர் ஒரு வில்லன் போல் சித்தரிக்கப்படுவது உண்டு. உடல் எடையை குறைக்க பலர் தேநீரைக் கைவிடுமாறு அறிவுறுத்துகிறார்கள். ஆனால் இது உண்மையிலேயே பலனளிக்குமா?
தேநீரைக் குடிப்பது நேரடியாக எடையை அதிகரிப்பதில்லை. உண்மையான பிரச்சனை தேநீருடன் நாம் சேர்க்கும் பொருட்கள் மற்றும் அதை அருந்தும் முறைதான். பொதுவாக, தேநீரில் அதிக சர்க்கரை, முழு கொழுப்புள்ள பாலைச் சேர்ப்பது கலோரி அளவை கணிசமாக அதிகரிக்கிறது. ஒரு கோப்பை தேநீர், சேர்க்கப்படும் பொருட்களின் அடிப்படையில், 100 முதல் 110 கலோரிகள் வரை இருக்கலாம். இதுமட்டுமின்றி, தேநீருடன் நாம் உண்ணும் பிஸ்கட், ரஸ்க், பப்ஸ் போன்ற ஆரோக்கியமற்ற தின்பண்டங்கள் எடை அதிகரிப்பிற்கு முக்கியக் காரணமாக அமைகின்றன.
தேநீரைக் கைவிடாமல் எடை குறைப்பது சாத்தியமா?
ஆம்,தேநீரைக் கைவிடாமல் உங்கள் எடையைக் குறைக்க முடியும். இதற்கான வழிமுறைகள் மிகவும் எளிமையானவை. தேநீர் தயாரிக்கும் முறையிலும், அதனுடன் சேர்த்து உண்ணும் தின்பண்டங்களிலும் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் இது சாத்தியமாகும். சர்க்கரைக்குப் பதிலாக ஸ்டீவியா அல்லது மோன்க் ஃப்ரூட் போன்ற இயற்கை இனிப்புகளைப் பயன்படுத்தலாம்.
முழு கொழுப்புப் பாலுக்குப் பதிலாக, கொழுப்பு நீக்கப்பட்ட பால் பயன்படுத்தலாம். மேலும், ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்து, மக்கானா, வறுத்த பருப்பு, பொரி அல்லது நட்ஸ் போன்ற சத்தான மற்றும் குறைந்த கலோரி கொண்ட சிற்றுண்டிகளைத் தேர்வு செய்யலாம். இந்த சிறிய மாற்றங்கள் உங்கள் கலோரி உட்கொள்ளலைக் கணிசமாகக் குறைத்து, எடை இழப்புக்கு உதவும்.
ஆரோக்கியமான உடல்நலத்திற்கு, எந்த ஒரு உணவுப் பொருளையும் அளவோடு எடுத்துக்கொள்வது முக்கியம். தேநீரும் இதற்கு விதிவிலக்கல்ல. சிலர் ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு முறை தேநீர் அருந்துவார்கள், இது செரிமான மண்டலத்திற்கும், உடலில் நீர்ச்சத்தின் சமநிலைக்கும் எதிர்மறையாகப் பாதிப்பை ஏற்படுத்தும். சுகாதார நிபுணர்களின் பரிந்துரைப்படி, ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கோப்பை தேநீர் மட்டுமே போதுமானது. படிப்படியாக உங்கள் தேநீர் பழக்கத்தைக் குறைத்து, க்ரீன் டீ, பிளாக் டீ அல்லது மூலிகை தேநீர் போன்ற ஆரோக்கியமான மாற்றுகளுக்கு மாறுவது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
நீங்கள் உடல் எடையை குறைக்க தேநீரை முழுமையாகக் கைவிட வேண்டிய அவசியமில்லை. தேநீர் தயாரிக்கும் விதத்திலும், அதனுடன் சேர்த்து உண்ணும் உணவிலும் கவனம் செலுத்துவதன் மூலம், உங்கள் விருப்பமான தேநீரைத் தொடர்ந்து பருகிக்கொண்டே ஆரோக்கியமான எடையைப் பராமரிக்க முடியும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)