

உணவு என்பது நமது சுவை மட்டுமல்ல அதையும் தாண்டி ஆரோக்கியத்தையும் வழங்கக்கூடியதாகும். நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உணவிலிருந்துதான் கிடைக்கிறது. எனவே அந்த உணவை ஆரோக்கியமான உணவாக சாப்பிட வேண்டியது அவசியம் மற்றும் நமது கடமையாகும். நீங்கள் எந்த உணவை சாப்பிடுகிறீர்கள் என்பது மட்டுமல்ல எப்படி சாப்பிடுகிறீர்கள் என்பதும் உங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகும்.
சாப்பிடும் முறை என்று வரும்போது மெதுவாக சாப்பிடுவது மற்றும் வேகமாக சாப்பிடுவது என்று இரண்டு வகை உள்ளது. பலரும் வேகமாக சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது மிகவும் ஆபத்தான பழக்கமாகும்.
குறிப்பாக நம்மில் பலர் வேலைப்பளு காரணமாகவோ அல்லது காலையில் வேலைக்கு செல்லும் அவசரத்திலும் பலரும் வேகமாக சாப்பிடும் பழக்கத்தை பின்பற்றுகிறார்கள். அது இட்லியாக இருந்தால் ஒரு நிமிடத்திற்குள் நான்கு, ஐந்து இட்லிகளை சர்வ சாதாரணமாக சாப்பிடுபவர்களும் உண்டு.
அப்படி வேகமாக சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லதல்ல. வழக்கத்தை விட கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். உணவை அவசர அவசரமாக அல்லது மிக வேகமாக சாப்பிடுவது (Eating too fast) உடலுக்குப் பல்வேறு ஆரோக்கியக் கேடுகளை விளைவிக்கும். மிக வேகமாக சாப்பிடுவது (10 நிமிடங்களுக்குள் முடிப்பது) முற்றிலும் ஆபத்தானது.
மேலும் மூளைக்கு 'வயிறு நிரம்பிவிட்டது' என்ற சமிக்ஞை செல்ல சுமார் 20 நிமிடங்கள் ஆகும். அதற்குள் வேகமாகச் சாப்பிடுவதால் அதிகப்படியான கலோரிகளை உட்கொள்ள நேரிடுகிறது. ஏனெனில் அவசரமாக வேகமாக சாப்பிடும் போது செரிமானமாகுவதற்கு போதுமான நேரம் உடலுக்கு கிடைப்பதில்லை. வேகமாகச் சாப்பிடுவதால் காற்றை விழுங்குவது ஒரு பொதுவான பக்க விளைவாகும். உணவை முறையாக மெல்லாமல் விழுங்குவதன் வெளிப்பாடாக வாயுத்தொல்லை, அஜீரணம், அசிடிட்டி மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். உடலுக்கும் போதிய சக்தி கிடைக்காது. மேலும் இன்சுலின் எதிர்ப்புத் திறன் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி (Metabolic syndrome) உருவாக வாய்ப்புள்ளது.
சாப்பிட தொடங்கும் முன்பு சில எளிய பழக்கவழக்கங்களை பின்பற்றினால் போதுமானது.
சாப்பிடும் முன்பு நிதானமாக அமர்ந்து ஆசுவாசப்படுத்தி கொள்ளுங்கள்.
கையில் உணவை குறைவாக எடுங்கள். அதாவது வாய் நிறைய சாப்பிடுவதற்கு பதிலாக சிறிதளவு சாப்பிடுங்கள்.
உணவை விழுங்குவதற்கு முன்பு நன்றாக மெல்லுங்கள்.
குறிப்பாக உணவை 20 முதல் 30 முறை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
ஒருமுறை வாய்க்குள் உணவை வைத்ததும் உடனே கையில் உணவை எடுக்காதீர்கள். உணவை மென்று விழுங்கும் வரை கைக்கு ஓய்வு கொடுங்கள்.
நீங்கள் சாப்பிட உணவால் வயிறு நிறைந்து விட்டது என்பதை உணர்ந்து கொள்ள மூளைக்கு போதிய நேரம் கொடுங்கள்.
உண்ணும்போது, உங்களுக்கு வயிறு நிறைந்துவிட்டதா என்பதை உணர்ந்து, உங்கள் உணவைச் சரியாக ரசித்துச் சாப்பிட, அதில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
அவசரமாக சாப்பிடுவதையும், உணவை மெல்லும்போது பேசுவதையும் சாப்பிடும் நேரத்தில் தொலைக்காட்சி அல்லது கைபேசியைப் பார்த்துக் கொண்டு சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
பாதாம், ஓட்ஸ், கேரட் மற்றும் ஆப்பிள் போன்ற நார்ச்சத்து நிறைந்த, குறைந்த அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தேர்ந்தெடுங்கள். இந்த வகை உணவுகளுக்கு இயல்பாகவே அதிக நேரம் மெல்ல வேண்டியிருக்கும், மேலும் அவை அதிக திருப்தியையும் அளிக்கின்றன.
உங்கள் உடல் இயந்திரம் அல்ல. அதை கவனமா கையாளுங்கள்.
மிக வேகமாகச் சாப்பிடுவது உணவு உண்ணும் பழக்கவழக்கங்களைத் தாண்டி, உண்மையான உடல்நலப் பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும். அது செரிமானக் கோளாறு, ஊட்டச்சத்துக் குறைபாடு, உடல் எடை அதிகரிப்பு மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி, நீரிழிவு நோய் போன்ற நாள்பட்ட நோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்க வழிவகுக்கும்.
‘உணவு என்பது ரசித்து உண்பதற்காகவே’. நீங்கள் அவசரமாக உணவை உண்ணும்போது, அதை உண்மையாகச் சுவைப்பதால் கிடைக்கும் மணங்களையும், மென்மையையும், திருப்தியையும் இழந்துவிடுகிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம்.
உங்கள் குடும்பத்திலோ நண்பர் வட்டாரத்திலோ இப்படி அவசர அவசரமாக சாப்பிடுபவர் இருந்தால் அவருக்கு இதையெல்லாம் புரிய வையுங்களேன்!
Referance:
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)