

டெங்கு, மலேரியா போன்ற கொசுக்கடியால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் நாம் அனைவருமே கொசுக்கு பயந்து கொசு விரட்டிகளை பயன்படுத்துகிறோம். ஆனால் இவை உண்மையிலேயே பாதுகாப்பானதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். கொசு கடியால் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் மற்றும் காதருகில் ரீங்கார ஓசையிடும் அதன் சத்தம் நமக்கு எரிச்சலை ஊட்டுகிறது. இதற்கு பயந்து நாம் கொசுவத்தி சுருள்கள், கிரீம்கள், ஊதுபத்திகள் என வாங்கி புகைக்க விடுகிறோம். இவை கொசுக்களுக்கு மட்டுமல்ல நமக்கும் எதிரி தான் என்பதை மறந்து விடுகிறோம்.
கொசு விரட்டிகளின் பக்க விளைவுகள்:
கொசு விரட்டிகளில் உள்ள ரசாயனங்கள் கண் மற்றும் தோல் எரிச்சல், இருமல், தும்மல், ஒவ்வாமை, தடிப்புகள், வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
கடுமையான தலைவலி, தலை சுற்றல் மற்றும் அரிப்பு, கண்களுக்குள் சென்றால் எரியும் உணர்வு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
அதிலும் கொசுவத்தி புகை மிகவும் ஆபத்தானது. இவற்றை உள்ளிழுக்கும் பொழுது அவற்றின் புகையை சுவாசிக்கும் நமக்கு தொண்டை அரிப்பு, மூக்கு எரிதல், மூச்சுத் திணறல், நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது.
கொசுக்களை விரட்ட பயன்படுத்தும் காயில், லிக்விட்கள், ஊதுபத்தி, சாம்பிராணி புகைகள் ஆகியவற்றில் உள்ள புகை மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அதிகம் ஏற்படுத்துகிறது.
பாதுகாப்பான வழிகள்:
இதற்கு பதில் நம் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பான கொசு பேட், கொசு வலை போன்றவை மிகவும் சிறந்தது. இதில் எந்த ரசாயனக் கலப்பும் இல்லாததால் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதில்லை.
கொசுவின் தொல்லை தாங்க முடியவில்லை, இரவின் தூக்கம் கெடுகிறது வேறு வழி இல்லை என்று கொசுவத்திகளை வாங்குவதாக இருந்தால், சரியான பிராண்டை பார்த்து வாங்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்டவற்றை உபயோகிக்கலாம். அதுவும் மிகவும் கவனமாக.
அத்துடன் ஜன்னல் கதவுகள் மற்றும் கதவுகளை மூடிக்கொண்டு அடைக்கப்பட்ட இடத்தில் உபயோகப்படுத்துவது சரியான முறை இல்லை. காற்றோட்டமான இடத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் அதை சுவாசிக்கும் நமக்கும் ஆபத்து உண்டாகும்.
அட்டையின் மேற்புறத்தில் முக்கியமாக CIR, CPCB நம்பர் குறிக்கவில்லை என்றால் அந்த தயாரிப்புகளை வாங்காமல் இருப்பது நல்லது. காரணம் இவை அதிக விஷத்தன்மை உள்ளதாக கூறப்படுகிறது. அங்கீகரிக்கப்படாத பூச்சி விரட்டியை ஒரு போதும் பயன்படுத்த வேண்டாம்.
கொசு விரட்டிகளை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் தெரியாமல் வாயில் வைத்துக் கொண்டால் உடனடியாக அவர்களுக்கு தண்ணீரில் உப்பு கலந்து கொடுத்து வாந்தி எடுக்க வைக்கலாம். இதனால் விஷம் அவர்களின் உடலுக்குள் செல்வதை தவிர்க்க முடியும்.
இரவு தூங்கச் செல்லும் பொழுது உடலை முழுவதும் மறைக்கும் வகையில், குறிப்பாக நீண்ட கை ஆடைகளை அணிவது கொசுத் தொல்லையிலிருந்து பாதுகாக்க உதவும்.
இயற்கை கொசு விரட்டிகள்:
இயற்கையான கொசு விரட்டிகளான சிட்ரோனெல்லா எண்ணெய், எலுமிச்சை புல், வேப்ப எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய் போன்ற இயற்கையான கொசு விரட்டிகளை பயன்படுத்தலாம்.
அல்ட்ராசோனிக் கொசு விரட்டிகள் மனிதர்களுக்கும், செல்லப் பிராணிகளுக்கும் பாதுகாப்பானவை. இவை கொசுக்கள் விரும்பாத உயர் அதிர்வெண் ஒலி அலைகளை வெளியிட்டு கொசுக்களை விரட்டுகின்றன.
துளசி செடி, நொச்சியிலைச் செடி ஆகியவற்றை வீட்டில் வளர்ப்பது கொசுக்களை விரட்ட உதவும். சாமந்திப் பூக்களின் வாசனை கொசுக்களை அண்ட விடாது.
வீட்டைச் சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றி சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதும், கற்பூரம், லாவெண்டர், தேயிலை மர எண்ணெய் போன்றவற்றை இயற்கை கொசு விரட்டிகளாக பயன்படுத்தவும் செய்யலாம்.
எந்த பூச்சி விரட்டியையும் பயன்படுத்துவதற்கு முன்பு லேபிளில் உள்ள வழிமுறைகளை படிக்கவும். அதிகமாக பயன்படுத்த வேண்டாம். கொசு விரட்டிகளை தேர்ந்தெடுக்கும் பொழுது நம் ஆரோக்கியத்தையும் சுற்றுப்புறத்தையும் கருத்தில் கொண்டு பாதுகாப்பான முறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். செய்வோமா?