எண்ணெய் இல்லாமல் சமையல் செய்ய முடியாது என்பது உண்மை. ஆனால் அந்த எண்ணெய் எப்படி இருக்க வேண்டும்? இந்த எண்ணெயை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும்? எப்படி பயன்படுத்தினால் நமக்கு நல்லது? என்பது பற்றிய புரிதல் எல்லாம் நமக்கு குறைவுதான்.
பொதுவாக நாம் சமையல் செய்யும் போது சமையல் எண்ணெய் மீந்து போகும். நாம் என்ன செய்வோம்? அதை ஒரு பாத்திரத்தில் வைத்திருந்து மறுநாள் அதை பயன்படுத்துவோம். இதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதில் தான் ஆபத்துகள் ஒளிந்திருக்கின்றன.
நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு முதலில் வேட்டு வைப்பது எண்ணெய்தான். ஒருமுறை பயன்படுத்திய எண்ணையை மறுமுறை பயன்படுத்தினால் என்னென்ன ஆபத்துகள் ஏற்படும் தெரியுமா? ஒன்றா இரண்டா... பெரிய பட்டியலே போடலாம். ஆனாலும் உங்கள் கவனத்திற்கு மிக முக்கியமான சில ஆபத்துகள் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
என்னென்ன ஆபத்துகள்:
ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தினால் நச்சுப் பொருட்கள் உருவாகலாம். இதன் மூலம் புற்றுநோய் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், இவ்வாறு செய்வதன் மூலம் டிரான்ஸ் கொழுப்பு அதிகரிக்கும். இதனால் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இதய நோய்களுக்கு வழிவகுக்கும்.
பழைய எண்ணெய்யில் உள்ள அமிலங்கள் செரிமானத்தை பாதிக்கும். இதனால் அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கு வர நேரிடும். பலமுறை ஒரே எண்ணையை பயன்படுத்துவதால் அதிக கொழுப்பு சேர்ந்து உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் அபாயம் உண்டாகும்.
ஆக்சிடேஷன் காரணமாக நச்சுப் பொருட்கள் உருவாகும். இதன் மூலம் முகத்தில் பிம்பிள் மற்றும் அதிக எண்ணெய் சுரப்பு உருவாகலாம். பழைய எண்ணையில் உள்ள நச்சுப்பொருட்கள் டாக்ஸின்களை வெளியேற்றும் திறனை குறைக்கும். இதன் மூலம் கல்லீரல் பாதிப்பு ஏற்படும்.
பழைய எண்ணையில் இருக்கும் பாக்டீரியாக்கள் உணவில் விஷ தன்மையை ஏற்படுத்தும். அதாவது, நுண்ணுயிர் தொற்று அபாயம் (Risk of microbial infection) உண்டாகும்.
நாம் உணவு கட்டுப்பாடுகளை கடைபிடித்தாலும் சரி, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சியும் யோகா என பல விஷயங்கள் கவனம் செலுத்தினாலும் சரி, எண்ணெய் விஷயத்தில் நீங்கள் கவனம் செலுத்தவில்லை என்றால்... எல்லாமும் வேஸ்ட். ஒரு முறைக்கு மேல் அடுத்த முறை அந்த எண்ணையை நாம் பயன்படுத்தும் பொழுது அது விஷம் என்பதை மட்டும் மனதில் கொள்ளுங்கள். நம் சமையலறை நமக்கு கல்லறையாக மாறிவிடக்கூடாது அல்லவா?