
அலுவலகத்தில் பணிபுரிபவர்கள், மன அழுத்தத்தையும், சோர்வையும் போக்க பெரும்பாலானோர் நாடும் ஒரு பானம் காபி. அதுவும் அலுவலகத்தில் காபி இயந்திரத்தில் இருந்து ஒரு சூடான கப் காபி அருந்துவது புத்துணர்ச்சியை அளிப்பதாகவும், சக ஊழியர்களுடன் உரையாட ஒரு வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்த பழக்கம் உங்கள் ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக உங்கள் இதயத்திற்கு ஆபத்தானது என்பது உங்களுக்கு தெரியுமா? இயந்திரத்தில் காபி காய்ச்சப்படும் முறைக்கும், உடலில் கொழுப்பு சேர்வதற்கும் இடையே ஒரு நேரடித் தொடர்பை சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஸ்வீடனில் உள்ள உப்சாலா பல்கலைக்கழகம் மற்றும் சால்மர்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஒரு விரிவான ஆய்வு, காபி காய்ச்சும் விதத்திற்கும், மனித உடலில் உள்ள கொழுப்பின் அளவுக்கும் இடையிலான தொடர்பை ஆராய்ந்துள்ளது. பல்வேறு வகையான காபி தயாரிப்பு முறைகள், குறிப்பாக காபி இயந்திரங்கள் மற்றும் பில்டர் பயன்படுத்தாத French Press போன்றவை இதில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த ஆய்வின் முக்கியக் கண்டுபிடிப்பு என்னவென்றால், இயந்திரத்தில் தயாரிக்கப்படும் வடிகட்டப்படாத காபியைத் தொடர்ந்து குடிப்பது, இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய கெட்ட கொழுப்பின் (LDL) அளவை அதிகரிக்கக்கூடும் என்பதுதான்.
இந்த ஆய்வின்படி, வடிகட்டப்படாத காபியில் cafestol மற்றும் kahweol போன்ற சில இரசாயனப் பொருட்கள் அதிக அளவில் உள்ளன. இந்த இரசாயனங்கள் நேரடியாக நமது கல்லீரலில் கொழுப்பின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, உடலில் இருந்து கொழுப்பை நீக்கும் திறனைக் குறைக்கின்றன.
இந்த ஆய்வு, காபி குடிப்பது என்பது தவறான பழக்கம் அல்ல என்றாலும் அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதே முக்கியம். காகித வடிகட்டிகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் Drip Coffee பாதுகாப்பானது என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
உங்கள் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், உங்கள் காபி பழக்கத்தைத் தொடர விரும்பினால், சில விஷயங்களைக் கவனத்தில் கொள்வது அவசியம்.
தினமும் அதிக அளவு காபி குடிப்பதைத் தவிர்க்கவும்.
முடிந்தவரை வடிகட்டிய காபிக்கு முன்னுரிமை கொடுங்கள்.
பிரெஞ்சு பிரஸ், எஸ்பிரெசோ, போன்ற வடிகட்டப்படாத முறைகளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துங்கள்.
உங்களுக்கு ஏற்கெனவே இதய நோய் அல்லது அதிக கொழுப்பு இருந்தால், காபி குடிப்பது பற்றி உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம்.
உங்கள் காபி பழக்கத்தில் ஒரு சிறு மாற்றம், உங்கள் இதய ஆரோக்கியத்தில் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்பதைத் தெரிந்து செயல்படுங்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)