
உலகின் டாப் 10 காபி உற்பத்தியாளர்களில் இந்தியாவிற்கு 8 வது இடம். உலகின் மொத்த காபி உற்பத்தியில் 4 சதவீதம் இந்தியாவின் பங்கு. உலகின் டாப் 10 காபி உற்பத்தியாளர்கள் 1) பிரேசில், 2) வியட்நாம், 3) கொலம்பியா, 4) எத்தியோப்பியா, 5) மெக்சிகோ, 6) பெரு, 7) ஹோண்டுராஸ், 8) இந்தியா, 9) உகாண்டா, 10) இந்தோனேசியா.
இந்தியாவில், காபி பெரும்பாலும் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திராவின் சில பகுதிகளில் மற்றும் தென் மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. இந்தியாவின் சில வடகிழக்கு மாநிலங்களும் காபியை உற்பத்தி செய்கின்றன.
இந்தியாவில் காபி உற்பத்தியின் வரலாறு 16 ஆம் நூற்றாண்டின் சூஃபி துறவி பாபா புடான் மூலம் ஆரம்பமாகிறது. அவர் மெக்கா பயணம் முடித்து ஏமனில் இருந்து 'மோச்சா' காபி கொட்டைகளின் 'ஏழு விதைகளை' கொண்டு வந்து கர்நாடகாவில் உள்ள மைசூர் சந்திர கிரி மலை சரிவில் பயிரிட்டார். அது தான் தற்போது உள்ள "பாபா புடான் கிரிஸ்" என்று அழைக்கப்படுகிறது. 7 ராசியான எண் என்பதால் பாபா புடன் தன்னுடன் 7 காபி விதைகளை மறைவாக எடுத்து வந்தார்.
அப்போது காபி அரேபியர்களின் ஏகபோக உரிமையாக இருந்தது. அங்கிருந்து வறுத்த காபி கொட்டைகள் மட்டுமே வெளியே விற்பனைக்காக துறைமுகங்களுக்கு வரும். ஏமனில் மட்டுமே அந்நாளில் காபி விளையும் என்று நம்பப்பட்டது. காபி கொட்டைகளை கடத்துபவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. காலனி ஆதிக்கம் வந்த பின்னர் தான் காபி உலகளவில் பயிரிடப்பட்டது. பாபா புடன் விதைத்த 7 காபி விதைகள் மூலம் தொடங்கிய காபி உற்பத்தி படிப்படியாக காபி தோட்டமாக தென்னிந்தியா முழுவதும் பரவியது; மேலும் 18 ஆம் நூற்றாண்டில் வணிக ரீதியான காபி தோட்டங்கள் தொடங்கப்பட்டன.
காபிக் கொட்டைகள் காபி பீன்ஸ் பழங்களில் இருந்து வருகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? காபி மரத்தில் விளையும் சிவப்பு அல்லது மஞ்சள் நிற சிறிய பழங்களின் விதைகளில் இருந்தே காபி தயாரிக்கப்படுகின்றது.
இந்த பழங்கள் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு பின்னர் பதப்படுத்தப்பட்டு, வறுத்த மற்றும் வேக வைத்த காபி பீன்ஸ் உருவாக்கப்படுகின்றது. காபி ஒரு பிரபலமான பானமாக இருப்பதைத் தவிர, பல்வேறு உணவுகளின் சுவையையும் மேம்படுத்தும்.
காபி விதைகள் நடவு செய்த 3ம் ஆண்டு முதல் காபி செடிகளில் முழு பழங்களை எதிர்பார்க்கலாம். சிறந்த மகசூலை பெற 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். காபி மரம் 50 முதல் 55 ஆண்டுகள் பலன் தரும். ஒரு காபி மரம் சராசரியாக 4000 பீன்ஸ் அல்லது சுமார் 1-2 பவுண்டு காபியை உற்பத்தி செய்யும். காபி கொட்டைகள் அறுவடை பொதுவாக அக்டோபர் முதல் பிப்ரவரி வரை இருக்கும்.
உலகளவில் அதிகம் பயிரிடப்படும் காபி வகை 'அராபிகா'. இது 60 சதவீதம் பயிரிடப்படுகிறது. அடுத்தது 'ரோபஸ்டா' வகை. இது இந்தியாவில் அதிகம் விளைகிறது. இந்தியாவில் சுமார் 2.5 லட்சம் காபி விவசாயிகள் உள்ளனர். இவர்களால் உருவாகும் காபி 80 சதவீதம் வெளிநாடுகளுக்கும், 20 சதவீதம் உள் நாட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் சராசரி மொத்த காபி உற்பத்தி 8200 டன்கள்.
இந்தியாவில் அதிகமாக காபி விளையும் மாநிலம் கர்நாடக மாநிலம். இந்தியாவில் விளையும் 70 சதவீதம் காபி இங்குதான் விளைகிறது. அடுத்து கேரளா, தமிழ் நாடு, ஆந்திர மாநிலம், ஒடிசா, திரிபுரா, நாகலாந்து, மேகாலயா, மணிப்பூர் மற்றும் அசாம் மாநிலம். கர்நாடக மாநிலத்தில் அதிகம் விளையும் காபி வகை ரோபஸ்டா. கர்நாடக மாநிலத்தில் குடகு, சிக்மகளூர், ஹாசன் பகுதிகளில் அதிகம் விளைகிறது. இந்தப்பகுதிகளில் விளையும் காபி வருடத்திற்கு 15,400 கோடிக்கு ஏற்றுமதியாகிறது.
எல்லா வகை காபியும் ஒரே மாதிரியான முறையில் உருவாக்கப்படுவதில்லை. அராபிகா மற்றும் ரோபஸ்டா ஆகிய இரண்டும் பொதுவாக வளர்க்கப்படும் மற்றும் உட்கொள்ளும் காபி வகைகளாக காணப்படுகின்றன. அராபிகா அதன் லேசான மற்றும் நுட்பமான சுவைக்காக பிரபலமானது; அதே நேரத்தில் ரோபஸ்டா அதன் உள்ளடக்கத்தினால் உலகளவில் அதிகமாக நுகரப்படுகின்றது. காபி தயாரிக்கப்படும் விதம் அதன் தரம் என்பவற்றை பொருத்து அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது.