இன்று நம் கையில் ஸ்மார்ட்போன் வந்தாலே போதும், விரல்கள் தானாகவே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (Reels) அல்லது யூடியூப் ஷார்ட்ஸ் (Shorts) பக்கம் சென்றுவிடுகின்றன. "சும்மா கொஞ்ச நேரம் பார்க்கலாம்" என்று ஆரம்பித்து, மணிக்கணக்கில் அதிலேயே மூழ்கி விடுகிறோம். இது வெறும் பொழுதுபோக்கு என்று நாம் நினைத்தாலும், இது நம் மூளையை அமைதியாகப் பாதித்துக்கொண்டிருக்கிறது என்று ஒரு புதிய அறிவியல் ஆய்வு எச்சரிக்கிறது. சுமார் ஒரு லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இந்தத் தொடர் வீடியோ பார்க்கும் பழக்கம் மூன்று பெரிய ஆபத்துகளை உருவாக்குவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1. கவனம் சிதறுகிறது!
நாம் தொடர்ந்து சிறிய வீடியோக்களை வேகமாகத் தள்ளிவிட்டுப் பார்க்கும் போது, நம் மூளைக்குத் தொடர்ந்து புதிய புதிய விஷயங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இதனால் மூளைக்கு 'டோபமைன்' (Dopamine) என்ற மகிழ்ச்சி தரும் வேதிப்பொருள் கிடைக்கிறது. மூளை எப்போதும் இந்த உடனடி மகிழ்ச்சியை எதிர்பார்க்கத் தொடங்கிவிடுகிறது.
இதன் விளைவாக, பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்துவது, நீண்ட நேரம் ஒரே வேலையைச் செய்வது அல்லது அமைதியாக அமர்ந்து படிப்பது மிகவும் கடினமாகிவிடுகிறது. உங்களின் கவனிக்கும் திறன் இதனால் வெகுவாகக் குறைந்துவிடுகிறது.
2. மன அழுத்தம் மற்றும் கவலை!
இடைவிடாமல் வீடியோக்களைப் பார்ப்பது மகிழ்ச்சியைத் தருவதற்குப் பதிலாக, மனச்சோர்வு, பதற்றம் மற்றும் தனிமை உணர்வை அதிகரிக்கிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது. வீடியோக்களில் வரும் உணர்ச்சிப் பெருக்குகளைத் தொடர்ந்து பார்ப்பதால், நிஜ வாழ்க்கையில் உணர்வுகளைக் கையாள்வது சிரமமாகிறது. இறுதியில் இது உங்களை உற்சாகப்படுத்துவதற்குப் பதிலாக, மனரீதியாகச் சோர்வடையச் செய்கிறது.
3. தூக்கத்தைக் கெடுக்கும் பழக்கம்!
இரவு தூங்குவதற்கு முன் வீடியோ பார்ப்பது மிக மோசமான பழக்கம். செல்போனில் இருந்து வரும் 'நீல ஒளி' (Blue light), நமக்குத் தூக்கத்தைத் தரும் மெலட்டோனின் போன்ற ஹார்மோன்களைக் குறைக்கிறது. இதனால் சரியான நேரத்தில் தூக்கம் வராமல் போவது, காலையில் சோர்வாக உணர்வது மற்றும் அமைதியற்ற தூக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இந்தச் சிறிய வீடியோக்கள் நம் நேரத்தை மட்டும் திருடவில்லை, நம் மூளையின் ஆரோக்கியத்தையும் சேர்த்தே கெடுக்கின்றன. எனவே, போனிலேயே மூழ்கிக்கிடக்காமல், அதை ஒரு வரம்பிற்குள் பயன்படுத்த வேண்டும். அவ்வப்போது திரையை விட்டு கண்களை விலக்கி, நிஜ உலகத்தைப் பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். அதுதான் உங்கள் மூளைக்கும், மனதிற்கும் நல்லது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)