சாக்லேட் அன்பை வெளிப்படுத்தும் ஒரு பொருள் என்பதையும் தாண்டி அதற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. சாக்லேட் அதன் கவர்ச்சிகரமான சுவைக்காக உலகளவில் போற்றப்படுகிறது. டார்க் சாக்லேட் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. மற்ற சாக்லேட்டுகளுடன் ஒப்பிடும்போது அதிக கோகோ உள்ளடக்கம் மற்றும் குறைந்த சர்க்கரை உள்ளடக்கம் கொண்ட டார்க் சாக்லேட் சாப்பிடுவது அதிக நன்மைகளைக் கொடுக்கும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
டார்க் சாக்லேட்டில் குறிப்பிட்ட அளவு ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இவை இதயத்தை பாதுகாக்கக் கூடியவை. டார்க் சாக்லேட்டை அடிக்கடி, மிதமான அளவில் உட்கொள்வது இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதோடு தொடர்புடையது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் 'கெட்ட' LDL கொழுப்பின் அளவைக் குறைப்பதுடன் நல்ல கொழுப்பான HDL கொழுப்பை அதிகரிக்கிறது.
அறிவாற்றலை மேம்படுத்துகிறது
டார்க் சாக்லேட்டில் உள்ள கோகோ ஃபிளாவனால்கள் நரம்பு பாதுகாப்பு விளைவுகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. டார்க் சாக்லேட்டை உட்கொள்வது மூளையின் செயல்பாடு, நினைவாற்றல் மற்றும் கவனத்தை மேம்படுத்தக்கூடும், மேலும் இது வயது தொடர்பான அறிவாற்றல் குறைவு மற்றும் அல்சைமர் நோய் போன்ற நரம்பு சிதைவு கோளாறுகளின் அபாயத்தைக் குறைப்பதாக நிரூபித்துள்ளது.
வீக்கத்தைக் குறைக்கிறது
டார்க் சாக்லேட்டில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதன் அதிக ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பிகளுக்குக் காரணமாக உள்ளது. இந்த சேர்மங்கள் உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன. இதனால் கீல்வாதம் மற்றும் டைப் 2 நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன.
எடையை நிர்வகிக்க உதவுகிறது
டார்க் சாக்லேட்டில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் சேர்மங்கள் எடையைக் கட்டுப்படுத்த உதவும். இது திருப்தியாக சாப்பிட்டது போன்ற உணர்வுகளை ஊக்குவிக்கும். இது இனிப்பு, உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளுக்கான ஏக்கத்தைக் குறைக்கும். இதன் விளைவாக ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைக்க உதவும்.
மனஅழுத்தத்தைக் குறைக்கும்
டார்க் சாக்லேட்டில் செரோடோனின் என்ற சக்திவாய்ந்த சேர்மங்கள் உள்ளன. அவை மனநிலையை உயர்த்தவும் மனச்சோர்வு மற்றும் பதட்டத்தைக் குறைக்கவும் உதவும். மேலும் அதிலுள்ள மெக்னீசியம் உடலில் உள்ள டிரிப்டோபானை 'மகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்தும்' நரம்பியக்கடத்தியான செரோடோனினாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உடல் செயல்திறனை மேம்படுத்தும்
டார்க் சாக்லேட் உடலில் நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரிக்கும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் உடல் செயல்பாடுகளின் போது ஆக்ஸிஜன் நுகர்வு குறைக்கும் திறன் காரணமாக உடல் செயல்திறனை மேம்படுத்த முடியும். இது மேம்பட்ட சகிப்புத்தன்மைக்கும் உடற்பயிற்சியின் போது சோர்வு குறைவதற்கும் வழிவகுக்கும்.
எனவே, சுவையான ஆனால் ஆரோக்கியமான இனிப்பை தேடுபவர்களுக்கு, டார்க் சாக்லேட் சிறந்த விருப்பமாக உள்ளது. ஆனால் இதை சரியான அளவில் உட்கொள்ள வேண்டியது அவசியம்.