டார்க் சாக்லேட் கசப்பான இனிப்பு சாக்லேட் என்று குறிப்பிடப்படுகிறது. இது மில்க் சாக்லேட்டை விட ஆரோக்கியமானது. சாதாரண பால் சாக்லேட்டில் அதிகளவு சர்க்கரை, குறைந்த கோக்கோ உள்ளடக்கம் உள்ளது. டார்க் சாக்லெட்டில் குறைந்த சர்க்கரை, அதிகளவு கோக்கோ மற்றும் ஆக்சிஜனேற்றிகள் உள்ளதால் அது ஆரோக்கியமாகக் கருதப்படுகிறது.
டார்க் சாக்லேட்டின் ஆரோக்கிய நன்மைகள்:
ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்தவை: இதில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிரம்பியுள்ளதால் ஃப்ரீரேடிக்கல்கள் எனப்படும் தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளால் ஏற்படும் சேதத்தில் இருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது. இது நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
இதய ஆரோக்கியம்: இது இரத்த அழுத்தத்தை குறைத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இரத்த நாளங்களை நெகிழ்வாகவும் ஆரோக்கியமாகவும் வைக்கிறது. இதனால் இதய நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. டார்க் சாக்லேட் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கவும், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கவும் உதவுகிறது. இதனால் ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க உதவுகிறது.
எடை மேலாண்மை: சாதாரண மில்க் சாக்லேட் உண்ணும்போது அதில் உள்ள அதிகளவு இனிப்பு மற்றும் கொழுப்பு காரணமாக உடல் எடையை அதிகரிக்கும். ஆனால், டார்க் சாக்லேட்டை மிதமாக, ஒரு சிறு துண்டை அவ்வப்போது எடுத்துக் கொள்வது வயிறு நிறைந்த உணர்வைத் தரும். இதனால் உடலின் ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலை கட்டுப்படுத்த உதவுகிறது.
சரும ஆரோக்கியம்: இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும். சருமத்துக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி நீரேற்றத்தை அதிகரிக்கிறது.
மேம்பட்ட மூளை செயல்பாடு: டார்க் சாக்லேட் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தலாம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிறந்த மூளை ஆரோக்கியம், மேம்பட்ட நினைவாற்றல் மற்றும் நரம்பியக் கடத்தி நோய்களின் அபாயத்தையும் குறைக்கின்றன.
இன்சுலின் உணர்திறன் மேம்பாடு: இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. அதனால் சர்க்கரை நோயாளிகளும் குறைந்த அளவு டார்க் சாக்லேட்டை அவ்வப்போது எடுத்துக்கொள்ளலாம்.
டார்க் சாக்லேட்டை தேர்வு செய்யும் விதம்: 70 சதவீதம் கோகோ உள்ளடக்கம் கொண்ட டார்க் சாக்லேட்டை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.
பக்க விளைவுகள்:
அதிக கலோரிகள்: டார்க் சாக்லேட்டை தினசரி அல்லது அடிக்கடி உண்பது நல்லதல்ல. ஏனென்றால், இதில் அதிக கலோரிகள் உள்ளன. உடல் எடை மிக விரைவில் அதிகரித்து விடும். மேலும், இது உடல் பருமன், வகை 2 நீரிழிவு போன்ற பல பிரச்னைகளை உண்டாக்கும்.
காஃபின் உள்ளடக்கம்: இதில் சிறிய அளவில் காஃபின் உள்ளது. தலைவலி உள்ள நபர்கள், மைக்ரேன் தொல்லை உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.
ஒவ்வாமை: சிலருக்கு சாக்லேட் மற்றும் சாக்லேட் பொருட்களில் காணப்படும் சோயா அல்லது பால் பொருட்கள் போன்றவை ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனவே, அவர்கள் டார்க் சாக்லேட் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
இரைப்பை குடல் பிரச்னை: அதிகப்படியான டார்க் சாக்லேட் உண்ணும்போது வயிற்றுப் பிடிப்புகள், வீக்கம் அல்லது செரிமானப் பிரச்னைகளுக்கு வழி வகுக்கும்.
மனநிலை மாற்றங்கள்: டார்க் சாக்லேட் பலருக்கு நல்ல மனநிலையை அதிகரிக்கும். அதேவேளையில் அதிக சர்க்கரை அல்லது அதிக கொழுப்புள்ள உணவுகளை உட்கொண்ட பிறகு மனநிலையில் மாறுபாடுகள் ஏற்படும். இது பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே குறைந்த அளவு டார்க் சாக்லேட்டை எடுத்துக் கொள்ளலாம்.