தற்போதைய காலக்கட்டத்தில் சர்க்கரை நோய் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஏற்படக்கூடிய பிரச்னையாக உள்ளது. இது வருவதற்கான முக்கியக் காரணங்கள் என்னவென்று பார்த்தால், அதிகமாக மாறிவரக்கூடிய உணவு பழக்க முறைகள், மன அழுத்தம், உடல் உழைப்பில்லாத வாழ்க்கை போன்ற பல காரணத்தால் சர்க்கரை நோய் வருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய 5 காய்கறிகள் எவை என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. கோவக்காய்: கோவக்காய் பார்ப்பதற்கு சிறிய வெள்ளரிக்காய் போன்று இருக்கும். இது லேசான கசப்பு சுவையைக் கொண்டது. பொதுவாக, கசப்பு மற்றும் துவர்ப்பு சுவைக் கொண்ட காய்கறிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என்று சொல்வார்கள். கோவக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதில் உள்ள கசப்பு சுவையும், நார்ச்சத்தும் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக ஏறுவதைத் தடுக்கிறது. இதனால், இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ளும். எனவே, சர்க்கரை நோயாளிகள் வாரத்திற்கு இரண்டு முறை கோவக்காயை உணவில் எடுத்துக்கொள்வது நல்லது.
2. பப்பாளி காய்: பப்பாளி காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லதாகும். இதில் அதிகமாக வைட்டமின், மினரல், ஆன்டி ஆக்ஸிடன்ட், நார்ச்சத்து உள்ளது. பப்பாளி காயில் இனிப்பு சுவை இல்லை என்பதால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக இதை சாப்பிட்டு வரலாம். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை நன்கு கட்டுப்படுத்த உதவும்.
3. வாழைத்தண்டு: பொதுவாகவே வாழையில் இருந்து கிடைக்கக்கூடிய வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ ஆகியவற்றை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். வாழைத்தண்டில் வைட்டமின் B6 அதிகமாக உள்ளது. இது கணையத்தில் உள்ள பீட்டா செல்களை தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகரித்து இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்தி சீராக வைக்க உதவுகிறது. மேலும், வாழைத்தண்டில் Lectin என்னும் புரதம் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரை விளைவாக உடலில் சேரக்கூடிய கெட்டக் கொழுப்பை குறைக்கும். இதனால் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு சீராக இருக்க உதவும்.
4. கத்தரிக்காய்: கத்தரிக்காயில் Glycemic index மிகவும் குறைவாக உள்ளது. இதனுடைய Glycemic index 10கும் குறைவாகவே உள்ளது. மேலும், கத்தரிக்காயில் அதிகப்படியான நார்ச்சத்தும் உள்ளது. 100 கிராம் கத்தரிக்காயில் 6.3 கிராம் நார்ச்சத்து இருக்கிறது. நார்ச்சத்து அதிகமாக சர்க்கரை அளவு இரத்தத்தில் ஏறுவதை குறைக்கும். கத்தரிக்காயின் தோலில் Anthocyanin உள்ளது. இது சர்க்கரை நோயால் வரும் இருதய பாதிப்பை தடுக்கும். எனவே, சர்க்கரை நோயாளிகள் உணவில் கத்தரிக்காயை சேர்த்துக்கொள்வது நல்லது.
5. வெண்டைக்காய்: வெண்டைக்காயில் வைட்டமின் B, வைட்டமின் C, Folic acid, கால்சியம், நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுவதோடு, இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்கவும் உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் வெண்டைக்காயை நீளவாக்கில் கீறி இரவு தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலை வெண்டைக்காய் ஊறிய நீரை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் நன்கு குறையும். இந்த 5 காய்கறிகளையும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவில் எடுத்துக்கொண்டால், சர்க்கரை நோயை விரைவில் குணமாக்கலாம். முயற்சித்துப் பாருங்களேன்.