ஓவர் சுத்தம் உடம்புக்கு ஆகாது தெரியுமா?

சோப்பு போட்டு முகத்தை கழுவும் பெண்
சோப்பு போட்டு முகத்தை கழுவும் பெண்
Published on

சிலர் அடிக்கடி முகத்தை சோப்பு போட்டு கழுவுவது, குளிக்கும்போது இரண்டு மூன்று முறை சோப்பு போடுவது என்று அதிகப்படியான சுத்தப்படுத்துதலில் ஈடுபடுபவார்கள். ஆனால், அது சருமத்துக்கு மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தும். அது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

அடிக்கடி முகத்தை கழுவுவதும் இரண்டு மூன்று முறை சோப்பு போடுவதும் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி சுத்தமாக்கும் என்று நினைத்துக் கொள்கிறார்கள் சிலர். ஆனால், உண்மை அதுவல்ல. சோப்பு போன்ற ரசாயனங்கள் மூலம் அடிக்கடி முகத்தையோ உடலையோ கழுவும்போது அது மென்மையான சருமத்தை பாதிக்கிறது. சிலர் அதிக சூடான நீரில் குளித்தல், அதிக நுரை பொங்கும் சோப்பு, ஹேண்ட் வாஷ் போன்றவற்றை அடிக்கடி உபயோகித்து தங்கள் சருமத்துக்கு தீங்கைக் கொண்டு வருகிறார்கள்.

அடிக்கடி சுத்தம் செய்வதால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள்:

1. சருமம் வறண்டுபோதல்: சோப்பு போன்ற ரசாயனங்கள் முகம், மற்றும் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணையை சுரண்டி எடுத்து விடும். அதனால் சருமம் எரிச்சலுக்கு உள்ளாகும். முகமும், கை,கால்களும் எளிதில் வறண்டு விடும். சருமத்தில் ஆங்காங்கே வெள்ளைத் திட்டுகள் போன்ற படிமானங்கள் தோன்றும். அதனால் குளிக்கும்போது ஒரு முறை மட்டும் சோப்பு போட்டால் போதும்.

2. முகப்பரு: அதிகப்படியான சுத்தம் சருமத்தின் மேல் உள்ள உற்பத்தி துளைகளை அடைக்கிறது. இதன் விளைவாக முகப்பரு ஏற்படுகிறது. சருமத்தின் அமிலக் கவசமும் அதிகமாக சுத்தப்படுத்துதலின் விளைவால்  சீர்குலைக்கப்படும்.

3. வயதான தோற்றம்: அதிகமாக சோப்பு போடும்போது அது முகத்தில் உள்ள கொலாஜன்களை சிதைத்து விரைவில் வயதான தோற்றத்தை ஏற்படுத்தி விடும்.

4. பிற பாதிப்புகள்: சரும அரிப்பு, சிவத்தல், கண்கள் மற்றும் வாய் மூக்கை சுற்றி சிவப்பு புடைப்புகள், முகத்தில் அரிக்கும் சரும அழற்சி திட்டுகள் அல்லது பிற அழற்சி சரும நிலைகள், சருமத்தில் எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவை ஏற்படும். மேலும், அதிகமாக சோப்பு போட்டுவிட்டு, வெளியில் செல்லும்போது சூரிய ஒளி பட்டு முகத்தில் சுருக்கங்களும் மெல்லிய கோடுகளும் ஏற்படும்.

முகத்தை சரியாக பராமரிக்கும் முறை:

1. மேக்கப் போட்டுக்கொள்வோர் அதை அகற்ற சோப்பு போட்டு முகம் கழுவலாம். அதற்கு முன்பு தேங்காய் எண்ணெய் வைத்து மேக்கப்பை அகற்றிவிட்டு பின்பு மென்மையான சோப்பை முகத்தில் போட வேண்டும்.

2. சிலர் முகத்தை கடினமான துண்டால் அழுத்தி தேய்ப்பார்கள். அது மிகவும்  தவறு. ஈரத்தை மென்மையாக ஒற்றி எடுத்தாலே போதும்.

இதையும் படியுங்கள்:
உலர் பழங்களை விட ஃபிரஷ் ஃபுரூட்ஸ் சிறந்ததாகக் கருதப்படுவது ஏன் தெரியுமா?
சோப்பு போட்டு முகத்தை கழுவும் பெண்

3. முகத்திற்கு சோப்பு போடும்போது கீழிருந்து மேலாக மசாஜ் செய்வது போல மென்மையாக போட வேண்டும். மேலிருந்து கீழாக தேய்க்கும்போது, விரைவில் கன்னங்கள் தொங்கி முதுமை தோற்றம் வந்துவிடும்.

4. பார்லருக்கு சென்று மசாஜ் செய்யும்போது மட்டும் கீழிருந்து மேலாக மசாஜ் செய்தால் போதாது. தினமுமே சோப்பு போடும்போது கழுத்து, தாடைப் பகுதியில் ஆரம்பித்து மேல் நோக்கி கன்னங்களில் சோப்பு போடும் முறையை கையாள வேண்டும். இதனால் சருமம் விரைவில் சுருங்காது.

5. முகத்திற்கு ஃபேஸ் வாஷ் வேண்டவே வேண்டாம். அது இன்னும் முகத்திற்கு தேவையில்லாத வறட்சியை மட்டும்தான் கொடுக்கும். எனவே, மென்மையான சோப்பை உடல், முகம் இவற்றிற்கு உபயோகித்தால் போதும். தனியாக ஃபேஸ் வாஷ் அவசியம் இல்லை.

6. அதிகமாக சோப்பு போட்டால் முகம் பளபளப்பாக இருக்கும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டு, தேவையான தண்ணீர் குடித்தல், பழங்கள் சாப்பிடுதல், சத்துள்ள உணவுகளை உண்ணுதல், தினமும் இரு வேளை குளித்தல் என ஆரோக்கியமான முறையில் உடலை பராமரித்தாலே போதும். உடல் சுத்தமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com