ஊட்டச் சத்துக்களை அளிப்பதில் சிறந்தவை உலர் பழங்களா அல்லது ஃபிரஷ்ஷானவையா என்ற கேள்வி எழுபோது, பலர் இரண்டும்தான் என பதில் கூறலாம். உலர் பழங்களில் சில வசதிகளும் சத்துக்கள் அடர்த்தியாகவும் இருக்கலாம். இருந்தாலும் பழங்களை ஃபிரஷ்ஷாக உண்பதே ஆரோக்கியத்திற்கு நல்லது. அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. ஃபிரஷ் ஆப்பிள்களில் நார்ச்சத்து, வைட்டமின் C மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம். ஒரு மீடியம் சைஸ் ஃபிரஷ் ஆப்பிளில் 19 கிராம் சர்க்கரையும் 4 கிராம் நார்ச்சத்தும் உள்ளன. ஒரு கப் உலர் ஆப்பிளில் 43 கிராம் சர்க்கரை மற்றும் 3 கிராம் நார்ச்சத்தும் உள்ளன. இதனால் கலோரி அளவு கூடவும், நிறைவற்ற உணர்வு ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
2. ஒரு கப் ஃபிரஷ் கிரேப்ஸில் வைட்டமின் C, K, அதிகளவு நீர்ச்சத்து, 15 கிராம் சர்க்கரை மற்றும் 1.5 கிராம் நார்ச்சத்தும் உள்ளன. இதே அளவு உலர் திராட்சையில் சர்க்கரை அளவு 86 கிராமும் நார்ச்சத்து 5 கிராமுமாக உள்ளன. இதில் இரும்புச் சத்தும் பொட்டாசியமும் அதிகளவில் இருந்தபோதும் இதிலுள்ள அதிகளவு சர்க்கரையின் காரணமாக இதை தினசரி உணவில் எடுத்துக் கொள்வது ஆரோக்கியமாகாது.
3. ஒரு ஃபிரஷ் ஆப்ரிகாட் பழத்தில் சுமார் 3 கிராம் சர்க்கரை, ஒரு கிராம் நார்ச்சத்து, மற்றும் அதிகளவு வைட்டமின் A, C போன்ற சத்துக்கள் உள்ளன. ஒரு கப் உலர் ஆப்ரிகாட் பழத்தில் சுமார் 32 கிராம் சர்க்கரையும் 4 கிராம் நார்ச்சத்தும் உள்ளன. இப்பழத்தின் நிறம் நீண்ட நாள் மாறாமலிருக்கப் பதப்படுத்தும் செயலில் சல்ஃபர் டை ஆக்ஸைட் சேர்க்கப்படுவதால் சிலருக்கு அது ஒவ்வாமையை உண்டுபண்ணக் கூடும்.
4. ஒரு ஃபிரஷ் வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் C, B6 ஆகியவற்றுடன் 14 கிராம் சர்க்கரை மற்றும் 3 கிராம் நார்ச்சத்தும் உள்ளன. ஒரு கப் உலர்ந்த வாழைப்பழ சிப்ஸ்களில் 36 கிராம் சர்க்கரையும் 2 கிராம் அளவுக்கு நார்ச்சத்தும் உள்ளன. அவை எண்ணெயில் பொரிக்கப்பட்டு, இனிப்புச் சத்தும் சேர்க்கப்படுவதால் அவற்றின் கலோரி அளவு கூடவும் ஊட்டச் சத்துக்கள் குறையவும் வாய்ப்பாகிறது.
5. ஸ்ட்ரா பெரி, ப்ளூ பெரி போன்ற ஃபிரஷ் பெரி வகைப் பழங்களில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து போன்றவற்றுடன் குறைவான அளவு சர்க்கரையும் உண்டு. ஒரு கப் ஃபிரஷ் ஸ்ட்ரா பெரியில் சுமார் 7 கிராம் சர்க்கரையும் 3 கிராம் நார்ச்சத்தும் உள்ளன. ஒரு கப் உலர் பெரி பழங்களில் சர்க்கரை அளவு 70 கிராம் வரை உயர்ந்தும் நார்ச்சத்து சுமார் 5 கிராமாகவும் காணப்படுகிறது.
6. ஃபிரஷ் பைனாப்பிள் பழத்தில் நீர்ச்சத்து, வைட்டமின் C, மாங்கனீஸ் மற்றும் ஜீரணத்துக்கு உதவும் என்சைமான ப்ரோமெலைன் ஆகியவை அடங்கியுள்ளன. ஒரு கப் ஃபிரஷ் பைனாப்பிள் பழத் துண்டுகளில் சுமார் 16 கிராம் சர்க்கரையும் 2 கிராம் நார்ச்சத்தும் உள்ளன. இதே அளவு உலர்ந்த பைனாப்பிள் துண்டுகளில் சுமார் 74 கிராம் சர்க்கரையும் 2 கிராம் நார்ச்சத்தும் உள்ளன. இனிப்புச் சத்து மிக அதிகளவில் உள்ளதால் இதை ஒரு ஆரோக்கியமான உணவாக எடுத்துக்கொள்ள இயலாது.
7. ஒரு கப் ஃபிரஷ் மாம்பழத் துண்டுகளில் வைட்டமின் C, A, நீர்ச்சத்து, 23 கிராம் சர்க்கரை மற்றும் 3 கிராம் நார்ச்சத்து உள்ளன. இதே அளவு உலர் மாம்பழத் துண்டுகளில் சுமார் 66 கிராம் சர்க்கரை மற்றும் 5 கிராம் நார்ச்சத்து உள்ளன. இவை நீண்ட நாட்கள் கெடாமலிருக்க செயற்கை இரசாயன கூட்டுப் பொருளும் சுவையூட்டிகளும் சேர்க்கப்பட்டவை. இதனால் இதிலுள்ள ஊட்டச் சத்துக்களின் அளவு மிகவும் குறைந்து விட வாய்ப்புண்டு.
8. ஒரு மீடியம் சைஸ் ஃபிரஷ் அத்திப் பழத்தில் அதிகளவு பொட்டாசியம், மக்னீசியம், 13 கிராம் சர்க்கரை மற்றும் 2 கிராம் நார்ச்சத்தும் உள்ளன. ஒரு கப் உலர் அத்திப் பழத்தில் 93 கிராம் சர்க்கரை மற்றும் 15 கிராம் நார்ச்சத்தும் உள்ளன. இதிலிருந்து நார்ச்சத்து அதிகம் கிடைத்தபோதும், சர்க்கரையின் அளவு மிக அதிகமாக உள்ளதால் இந்த உலர் அத்திப் பழங்களை ரெகுலர் உணவாக உட்கொள்வது உசிதமானதாகாது.
மேற்கூறிய அளவுகோலை ஆய்ந்து பார்க்கையில் உலர் பழங்களை உண்பதைவிட, பழங்களை ஃப்ரஷ்ஷாக உட்கொள்ளும்போது நம் உடலுக்கு ஊட்டச் சத்துக்களும் நீர்ச்சத்தும் அதிகம் கிடைக்கும் என்பது தெள்ளத் தெளிவாகிறது. எனவே எப்பொழுதும் பழங்களை ஃப்ரஷ்ஷாக உண்போம்; உடல் நலம் பல பெறுவோம்!