
பொதுவாக காய்கறிகள் மற்றும் பழங்கள் தான் உடம்பிற்கு ஆரோக்கியத்தை தருபவை ஆகும். தினமும் உணவில் எந்தளவிற்கு இவற்றினை சேர்த்துக் கொள்கின்றோமோ அந்த அளவிற்கு நாம் ஆரோக்கியமாக வாழலாம். ஆயுளை நீட்டிக்கும் உணவு ரகசியம் குறித்து உணவியல் நிபுணர்கள் கூறியுள்ள சில தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
இன்று பெரும்பாலான நபர்கள் தட்டின் ஓரத்தில் குறைவாக காய்கறி, பெரும்பாலான இடத்தினை நிரப்பும் வகையில் சோறு இவற்றினை வைத்து சாப்பிடுகின்றனர். ஆனால், இவ்வாறு செய்வது தலைகீழான ஒரு மாற்றம் ஆகும். ஆம் நாம் காய்கறிகளை தான் அவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும். சோறு ஒரு சிறிய பவுல் எடுத்துக் கொண்டாலே போதுமானதாகும். பழங்கள் காய்கறிகள் சாப்பிட்டால் தான் இதயம் ஆரோக்கியமாக இருப்பதுடன், மனிதர்களின் ஆயுளும் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
'புளோவினாய்டு' எனும் இரசாயனம் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அன்றாடம் உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் உடல் பருமன் பிரச்னைகள் ஏற்படாது என்கிறார்கள் இங்கிலாந்து நாட்டின் ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். பழங்களில் புளுபெர்ரி, ஆப்பிள், பேரிக்காய், ஸ்ட்ராபெரி, திராட்சை போன்றவைகளையும், காய்கறிகளில் செலரி மற்றும் குடைமிளகாய் போன்றவைகளை அதிகம் சேர்த்துக் கொண்டால் உடல் எடைக் கூடாது என்கிறார்கள். பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஞாபக மறதி எனும் அல்சைமர் நோய் தாக்கம் 48 சதவீதம் தடுக்கப்படுகிறது என்கிறார்கள்.
உங்கள் வாழ்வு மகிழ்ச்சிகரமாக மற்றும் திருப்திகரமாக இருக்க வேண்டுமா?
உங்கள் அன்றாட உணவில் 8 காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள் அமெரிக்காவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். வாழ்வில் டல்லாக இருப்பதாக உணர்கிறவர்கள் தங்களது உணவு முறையை மாற்றி தினமும் 8 காய்கறிகள் மற்றும் பழங்களை உணவின் மூலம் எடுத்துக் கொண்டால் வாழ்வில் சந்தோஷம் வருவதை காணலாம் என்கிறார்கள்.
தினசரி உங்கள் உணவில் 10 காய்கறிகள், பழங்களை சேர்க்கிறீர்களா?
அப்படியானால் உங்கள் ஆயுள் கூடும் என்கிறார்கள் லண்டன் இம்பீரியல் காலேஜ் ஆய்வாளர்கள்.தினசரி உணவில் 10 வகை காய்கறிகள் பழங்களை சேர்த்துக் கொண்டால் 24 சதவீதம் இதய நோய்களும், 33 சதவீதம் பக்கவாத நோய்களும்,13 சதவீதம் புற்றுநோய்களும் மொத்தத்தில் 31 சதவீதம் திடீர் மரணமும் தவிர்க்கப்படுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
மன நலம் பாதுகாக்கணுமா?
அதிகளவில் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது உடல் நலத்திற்கு மட்டும் பயன் தருவதில்லை அது மனநலத்திற்கும், மூளை நலத்திற்கும் அதிக பயன் தருகிறது என்கிறார்கள் லண்டன் விர்விக்ஸ் மெடிக்கல் ஸ்கூல் ஆராய்ச்சியாளர்கள். நாள் ஒன்றுக்கு ஏதேனும் 5 காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு மேல் சாப்பிடுகிறவர்களின் மூளைத்திறன் மற்றும் மனநலம் 33 சதவீதம் மற்றவர்களை காட்டிலும் சிறப்பாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நீண்ட ஆரோக்கியமான ஆயுள் வேணுமா?
நீண்ட ஆரோக்கியமான ஆயுளுக்கு ஒரு நாளில் 7 தடவை காய்கறிகளும் பழங்களும் சாப்பிட வேண்டும் என்கிறார்கள் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள். இதயநோய், புற்றுநோய், வலிப்பு போன்றவற்றால் நேரும் மரணங்களைக் காய்கறிகள் தவிர்க்கும். பழங்களை விட காய்கறிகளில் தான் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் என்கிறது ஆய்வு.
தினமும் 2-3 காய்கறிகள் எடுத்துக் கொண்டால் மரணம் 19 சதவீதம் தள்ளிப் போகிறது. அதே வேளையில் பழங்கள் 2-3 எடுத்துக் கொண்டால் 10 சதவீதம் மரணம் தள்ளிப் போடப்படுகிறது என்கிறது லிவர்பூல் யுனிவர்சிட்டி ஆய்வு. அதே வேளையில் உறைநிலையில் வைத்துப் பாதுகாக்கப்பட்ட பழங்களால் எந்த ஆரோக்கிய பலனும் இல்லை என்கிறார்கள்.
5 வேளைகளிலும் காய் பழம் சாப்பிடறீங்களா?
உலக சுகாதார அமைப்பு ஒரு நாளில் ஒவ்வொருவரும் 400 கிராம் அளவில் காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்து கொள்ள வேண்டும் என்கிறது. அதை 5 வேளைகளாக எடுக்கவும் அறிவுறுத்துகிறது. நபர் ஒருவர் ஒரு வேளைக்கு 150 கிராம் காய்கறி சாப்பிட வேண்டும். அதிலும் வேக வைத்தவுடன் அளவில் குறைந்துவிடும் காய்கறிகளான வெண்டைக்காய், நீர்க்காய்கள் இவற்றினை 200 கிராம் சாப்பிட வேண்டும்.
பீன்ஸ், அவரைக்காய் போன்ற காய்கறிகள் வெந்தாலும் அளவு குறையாது என்பதால், அவற்றை 150 கிராம் சாப்பிட்டாலே போதும். கிராம் கணக்கை அளவிட முடியாதவர்கள், ஒன்றரை கப் காய்கறிகளை சாப்பிட வேண்டும். வேக வைத்த காய்கறிகள் ஒரு கப், காய்கறி சாலட், காய்கறி சூப் என்று பருகலாம்.மேலும் அந்தந்த சீசன்களில் கிடைக்கும் பழங்களை கட்டாயம் நாம் சாப்பிட வேண்டும். அளவு பெரியதாகவும், சிறியதாகவும் இல்லாமல் நடுத்தர அளவு கொண்டதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.