
மாதவிடாய் சமயத்தில் பெண்கள் படும் பாட்டை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதுவும் சில பெண்களுக்கு ஏற்படும் கடும் வயிற்று வலியை சமாளிப்பது என்பது மிகவும் கடினமாகும். எனவே, பெண்கள் மாதவிடாய் நாட்களை எதிர்கொள்வதற்கு சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அத்தகைய சத்தான உணவுகள் என்னென்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. கீரை வகைகள்
காலே மற்றும் வெந்தயக் கீரையில் இரும்புச்சத்து உள்ளது மாத விடாய் சமயத்தில் இரத்தப் போக்கு ஏற்படும். ஆகவே, மேற்கூறிய கீரைகளை உண்ண வேண்டும். அவற்றில் மக்னீசியம் மற்றும் வைட்டமின் கே உள்ளதால் வயிறு வீக்கம் மற்றும் வயிற்றை பிடித்து இழுக்கும் வலியை தடுக்கும்.
2. வாழைப்பழம்
பொட்டாசியமும், பி6 சத்தும் நிறைந்த இது நம் மனநிலையை சரியாக வைக்கவும், நீர் சத்தையும் தருகிறது. தசைகளின் வலியை குறைக்கும். இதன் இயற்கை சர்க்கரைச்சத்து சக்தியைத் தரும். மேலும் செரிமானம் மேம்படும்.
3. டார்க் சாக்லேட்
அதிக அளவு கோகோ உள்ளதால் இதில் மக்னீசியம் சத்து அதிகமாக இருக்கும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல் வலியைத் தடுக்கும். இதில் ஃப்ளேவினாய்டுகள் மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகளும் உள்ளதால், மனதை நல்ல நிலையில் வைக்கும் எரிச்சலைப் குறைக்கும். சர்க்கரை குறைந்த சாக்லேட் சாப்பிடுவது நல்லது.
4. சால்மன் மீன்
இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளதால் மாதவிடாய் போது ஏற்படும் வலிகளைக் குறைக்கும். இதன் புரதமும், டி சத்தும் ஹார்மோனை சமச்சீராக வைக்கும். இந்த சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு மாறுபாட்டால் ஏற்படும் மனநிலையை சரி செய்யும்.
5. யோக்ஹர்ட்
ப்ரோ பயாடிக் நிறைந்த இது குடல் மற்றும் பிறப்புறுப்பு ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. இது கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்தைத் தருகிறது. இதனால் நரம்பு மண்டலம் அமைதிபடுத்தப்படுகிறது.
6. பூசணி விதை
பூசணி விதைகளில் துத்தநாகம், மக்னீசியம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது ஹார்மோன்களை சமச்சீராக வைக்கிறது. இது வயிறு உப்புசம், வலிகள் முதலியவற்றைத் தடுத்து நல்ல தூக்கத்தைத் தருகிறது. மாதவிடாய் சமயத்தில் இவ்விதைகளை உட்கொள்ள உடல் அந்த சமயத்தில் ஆரோக்கியமாக இருக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)