சதகுப்பை (Dill) என்பது சீரகச் செடியை ஒத்த மருத்துவ குணம் நிறைந்த ஒரு செடியாகும். மலைகளிலும், நிலத்திலும் வளரும் இச்செடியின் பூக்களில் தோன்றும் விதைகள் பழுத்ததும் தனியாக பிரிக்கப்படும். இதன் இலைகள் இனிப்பும் கார்ப்பும் கலந்த சுவையுடன் இருக்கும். சோயிக் கீரை என்பது சதகுப்பை கீரையின் மற்றொரு பெயர் ஆகும். தலைவலி, காது வலி, மூக்கில் நீர்வடிதல், வாதம் முதலியவற்றைப் போக்கும் குணம் உடையது. விக்கல், வாந்தி, தலைசுற்றல் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாகும். பசியை தூண்டும், நுரையீரல், இரைப்பை இவைகளில் உள்ள சிக்கலை நீக்கி உடலுக்கு நன்மை தரும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்கு அதிகம் இருக்கும். சதகுப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் இவைகளை சம அளவில் எடுத்து இடித்து பொடியாக்கி சம அளவு பனை வெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை சாப்பிட கோளாறு நீங்கும்.
மாந்தத்திற்கு சதகுப்பை இலையை கைப்பிடி எடுத்து அரைத்து 500 மி.லி. விளக்கெண்ணையுடன் கலந்து காய்ச்சி வடிகட்டி 5 சொட்டு வீதம் 3 வேளை கொடுக்க மாந்தம் நீங்கும். மாந்தம் என்பது குழந்தைகளுக்கு ஏற்படும் ஒருவித செரிமானக் கோளாறு.
வலிப்பு நோய் உள்ளவர்கள் சதகுப்பையை கைப்பிடி எடுத்து அரைத்து 500 500 மி.லி. விளக்கெண்ணையுடன் கலந்து காய்ச்சி வடிகட்டி மூன்று வேளையும் 5 சொட்டு வீதம் 12 நாட்கள் தொடர்ந்து கொடுக்க வேண்டும். அடுத்த 12 நாட்கள் கொடுக்கக் கூடாது. அதன் பிறகு 123 நாட்கள் கொடுக்க வேண்டும். உடல் சூடாகி விட்டது தெரிந்தால் நிறுத்தி விட வேண்டும்.
ஆசனவாய் கடுப்பு உள்ளவர்கள் சதகுப்பை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து 15 கிராம் எடுத்து சிறிது சர்க்கரையுடன் கலந்து 3 வேளை சாப்பிட ஆசனவாய் கடுப்பு நீங்கும்.
கைக்குழந்தைகளுக்கு அஜீரணம் ஏற்படும். இதனால் வாந்தி எடுக்கும். இதற்கு அரை தேக்கரண்டி சதகுப்பை, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் எடுத்து வறுத்து 100 மி.லி. நீரில் கொதிக்கவைத்து இளஞ்சூட்டில் கொடுக்க அஜீரணம் நீங்கும்.
மூக்கில் நீர்வடிதல் பிரச்சனைக்கு 15 கிராம் சதகுப்பை எடுத்து அரைத்து 200 மி.லி நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி 30 மில்லியளவு 3 வேளை சாப்பிட இப்பிரச்னை நீங்கும்.
பெண்கள் மாதவிடாய் தொடங்குவதற்கு பத்து நாட்கள் முன் சதகுப்பை, எள், கருஞ்சீரகம் சம அளவு எடுத்து வறுத்து பொடி செய்து பனை வெல்லத்துடன் கலந்து எலுமிச்சை அளவு உருண்டையை இருவேளை உண்ண மாதவிடாய் பிரச்சனை நீங்கும். பெண்கள் பிரசவித்த பிறகு கொடுக்கப்படும் லேகியத்தில் இது சேர்க்கப்படுகிறது. கர்ப்பப்பையில் உள்ள அழுக்கை போக்கக் கூடியது சதகுப்பை.
சதகுப்பை சூர்ணம் ஒரு கிராம் எடுத்து சிறிது நாட்டுச் சர்க்கரையுடன் சாப்பிட்டு வர வாதநோய் கட்டுப்படும்.
சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் சதகுப்பை இலையை காயவைத்து பொடியாக்கி சாம்பிராணி புகை போல் புகைக்க காதுவலி, மூக்கில் நீர்வடிதல் சைனஸ் போன்றவை கட்டுப்படும்.
சதகுப்பை ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. இதன் விதையை டீ தயாரித்துக் குடிக்க நல்ல ஆரோக்கியம் ஏற்படும்.
காய்ந்து வீணாக கிடந்த ஒன்றை ஆராய்ந்து நம் முன்னோர்கள் அதன் மருத்துவ குணத்தைக் கண்டு வியந்தனர். மேலும் வருங்கால தலைமுறையினர் அதை பயன்படுத்தி நலமுடன் வாழ பல வழிமுறைகளை வகுத்தனர். அவர்கள் வழியில் சதகுப்பையை தேவைக்கேற்ப பயன்படுத்தி நலமுடன் வாழ்வோம்.