எந்தப் பொருளுக்குமே காலாவதி தேதி இருக்கும். ஒருசில பொருட்களை காலாவதியான பின்பும் நாம் சாப்பிடலாம். குறிப்பாக, பிஸ்கெட்டுகள். இதனால் பெரிய அளவில் ஆபத்து ஒன்றும் நேராது. ஆனால், சில உணவுகளை அதன் காலாவதி தேதிக்குப் பிறகு சாப்பிட அதிலுள்ள வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்றவை ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதன் காரணமாக வாந்தி, வயிற்றுப்போக்கு, குமட்டல், காய்ச்சல் என்று பல சிக்கல்களை உண்டாக்கும். இதனை தவிர்க்க உணவு பாக்கெட்களில் இருக்கும் காலாவதி தேதியை வாங்கும் முன்பு சரிபார்க்க வேண்டும். காலாவதியான பொருட்களை உடனுக்குடன் அப்புறப்படுத்துதல் நல்லது. இனி, காலாவதியான சில பொருட்களை உபயோகப்படுத்தினால் ஏற்படும் கேடுகளைப் பார்க்கலாம்
கீரை: அதிக சத்துக்கள் கொண்ட கீரைகளுக்கும் காலாவதி தேதி உண்டு. கீரைகளை வாங்கிய ஓரிரு நாட்களிலேயே சமைத்து விடுவது நல்லது. இல்லையெனில் இகோலி என்கின்ற பாக்டீரியா அதில் குடியேறி கீரைகளை நச்சுத்தன்மையாக்கி விடும்.
முட்டை: சிலர் முட்டைகளை மொத்தமாக வாங்கி வைப்பார்கள். முட்டைகளை தேவைக்கேற்ப அவ்வப்பொழுது வாங்குவதுதான் சிறந்தது. ஒவ்வொரு முறையும் அவற்றை உபயோகப்படுத்தும் முன்பு பாத்திரத்தில் நீர் விட்டு அதில் முட்டைகளை போட்டு முட்டைகள் மூழ்கினால் நல்லவை என்றும், மிதந்தால் காலாவதி ஆகிவிட்டது என்றும் தெரிந்து கொள்ளலாம்.
முளை கட்டிய உணவுகள்: பல்வேறு ஊட்டச்சத்துக்களை இவை கொண்டிருந்தாலும் காலாவதியானால் சாப்பிடுவது ஆபத்து. ஏனெனில், முளைகட்டிய உணவுகளில் ஈகோலி பாக்டீரியாக்கள் அதிக அளவில் குடிகொள்ளும். இதனை சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற கோளாறுகள் உண்டாகும்.
சீஸ் மற்றும் சிப்ஸ் வகைகள்: இவற்றிற்கும் காலாவதி தேதி உண்டு. மறக்க வேண்டாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் இவற்றைப் பார்த்து வாங்குவது அவசியம்.
மீன் மற்றும் இறைச்சி: இவற்றை சிலர் மொத்தமாக வாங்கி ஃப்ரிட்ஜில் வைத்து சமைத்து உண்ணும் பழக்கம் கொண்டுள்ளனர். தேதி காலாவதியான இறைச்சிகளை சாப்பிட அவை விஷமாக மாறிவிடும். எச்சரிக்கை தேவை. பால் பொருட்கள், இறைச்சிகள் போன்றவை காலாவதியான பிறகு உபயோகப்படுத்த அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும். உணவுப் பொருட்கள் அதன் காலாவதி தேதியை கடக்கும்பொழுது பாக்டீரியா வளர்ச்சி மற்றும் இரசாயன மாற்றங்கள் காரணமாக சாப்பிடுவது பாதுகாப்பற்றது. இதனை உட்கொள்வதால் சால்மோனெல்லா, இகோலி அல்லது லிஸ்டீரியா போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை உட்கொள்ளும் அபாயத்தை அதிகரிப்பதால் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படும்.
சால்மோனெல்லா பாக்டீரியா என்பது கெட்டுப்போன முட்டை, காய்கறிகள், பழங்களில் காணப்படும். இகோலி பாக்டீரியா என்பது காலாவதியான இறைச்சி மற்றும் பால் பொருட்களில் இருக்கும். லிஸ்ட்டீரியா என்ற பாக்டீரியாவானது குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.
காலாவதியான உணவில் பாக்டீரியாக்கள் இருக்கலாம். இவற்றை சாப்பிடுவது விஷத்திற்கு சமம். இவற்றை தவறுதலாக உண்ணும்போது பொழுது வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, நீரிழப்பு போன்றவை ஏற்படும். கடுமையான ஒவ்வாமையை ஏற்படுத்தும். சுவாசப் பிரச்னைகள், தலைவலி போன்றவற்றையும் உண்டாக்கும்.
காலாவதியான உணவில் சுவை, நிறம் மற்றும் வாசனையில் மாறுதல் இருக்கும். கெட்டுப்போன உணவு எடுத்துக்கொள்வதால் வயிற்றில் அசௌரியம் ஏற்படுவதுடன் இரப்பை குடல் பிரச்னைகளும் உண்டாகும்.
பிரட், சீஸ், ஸ்வீட் போன்றவை வாங்கி வந்ததும் பிரிட்ஜில் வைத்து மறந்துவிடும் பழக்கம் நிறைய பேருக்கு உண்டு. இனி இம்மாதிரி விரைவில் கெட்டுப்போகும் உணவுகளை வாங்கி வந்தவுடன் ஓரிரு நாட்களிலேயே உபயோகித்து விடுவது நல்லது.
காலாவதியான உணவை சாப்பிட நேர்ந்தால் என்ன செய்யலாம்?
பதற்றமடையாமல் ஆழ்ந்த மூச்சு எடுத்து எப்படி உணர்கிறீர்கள் என்பதை முதலில் மதிப்பிடுங்கள். பிறகு குமட்டல், வாந்தி, தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை கண்காணிக்கவும். அடுத்ததாக, நீரேற்றமாக இருங்கள். குடிதண்ணீர் நச்சுக்களை வெளியேற்ற உதவும். உணவு விஷத்தை போக்கும். எனவே, தாராளமாக தண்ணீர் குடிக்கவும். கடுமையான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள். அத்துடன் மீதமுள்ள கெட்டுப்போன உணவை சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.