
புறாக்களின் எச்சம் ஆபத்தானது. இவை உடல் நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். இவற்றினுடைய எச்சத்தில் பல வகையான நோய்க்கிருமிகள் உள்ளன.
ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ்:
புறா எச்சத்தில் உள்ள பூஞ்சை காளான்கள் நுரையீரல் பாதிப்புகளை ஏற்படுத்தும். பூஞ்சையால் ஏற்படும் சுவாச நோய் இது. இந்த பூஞ்சை நுரையீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி, சுவாசிப்பதில் சிரமத்தை உண்டாக்கும்.
சால்மோனெல்லா:
இவற்றிலுள்ள பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் டைபாய்டு, சால்மோனெல்லா போன்ற நோய்களை பரப்பலாம். இது வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.
ஒவ்வாமை:
சிலருக்கு புறாக்களின் எச்சங்களிலிருந்து வரும் தூசிகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். தோல் அரிப்பு மற்றும் சுவாச பிரச்னைகள் போன்ற ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தலாம்.
கிரிப்டோகாக்கோசிஸ்:
இந்த பூஞ்சை தொற்று நுரையீரல், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கலாம். அத்துடன் அவற்றின் எச்சங்களில் காணப்படும் வைரஸ்களால் மூளைக்காய்ச்சல் ஏற்படலாம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
1) முகமூடி மற்றும் கையுறைகள் அணிவது:
புறா எச்சத்தை சுத்தம் செய்யும்பொழுது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். முக்கியமாக முகமூடி மற்றும் கையுறைகள் அணிவது சுவாசப் பாதையில் நோய் கிருமிகள் செல்லாமல் இருக்க உதவும். கையுறைகள் அணிவதன் மூலம் தோல் வழியாக நோய்க்கிருமிகள் உடலில் நுழைவதை தடுக்கலாம்.
2) எச்சத்தை அப்புறப்படுத்துவது:
புறாக்களின் எச்சங்களை நேரடியாக கைகளால் தொடாமல் கையுறைகளை அணிந்து ஈரத்துணியால் சுத்தம் செய்வது நல்லது. அத்துடன் புறாவின் எச்சத்தை ஒரு மூடியுடன் கூடிய கொள்கலனில் போட்டு மூடி முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும்.
3) சுத்தம் செய்வது:
புறா எச்சத்தை முறைப்படி சுத்தம் செய்வது நோய் கிருமிகளை பரப்பவிடாமல் தடுக்கும். தண்ணீர் கொண்டு புறா எச்சங்களை சுத்தம் செய்யவும். அதற்கு பின் அந்த இடத்தை நன்றாக கிருமி நாசினி கொண்டும் சுத்தம் செய்ய புறாவின் அச்சத்தால் ஏற்படும் ஆபத்துக்களை குறைக்கலாம்.
எச்சங்களை சுத்தம் செய்த பின்பு கைகளை கிருமி நாசினி சோப்புக்கொண்டு நன்கு தண்ணீரில் கழுவ வேண்டும்.
4) பாதுகாப்பு நடவடிக்கைகள்:
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் புறாக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்க்கலாம். அவற்றுக்கு உணவு அளிப்பதையும் தவிர்க்கலாம்.
புறாக்களின் எச்சங்களை சுத்தம் செய்யும் பொழுது அது தொடர்பான நோய் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு தகுந்த மருத்துவரை அணுகவும்)