நோய்களை குணப்படுத்த பல வைத்திய முறைகள் இருப்பினும், நாம் அடிக்கடி கேட்கும் இசை கூட ஒருவகையில் மருந்தாகப் பயன்படுகிறது. அவ்வகையில் இசை எப்படி நமக்கு உதவுகிறது என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.
இயற்கையின் பயன்பாட்டை மிஞ்சும் அளவிற்கு செயற்கையின் ஆதிக்கம் மேலோங்கிய நிலையில், அதற்கேற்ப எண்ணற்ற பிரச்சினைகளும், நோய்களும் புதிது புதிதாக உருவாகி விட்டது. நோய்களைக் குணப்படுத்த அனைவரும் அலோபதி மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத்தை நாடுகின்றனர். ஆனால் சில நோய்களுக்கு இசையே மருந்தாகப் பயன்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், இது முற்றிலும் உண்மை தான். எந்தவித தொந்தரவும் இன்றி நமக்குப் பிடித்த பாடல்களை கேட்பதும் கூட ஒருவித சிகிச்சை முறை தான். பாடல்கள் மட்டுமல்ல அருவியின் சத்தம் மற்றும் குயிலின் இசை போன்ற பல இயற்கையின் இசைகளும் நமக்கு மனதளவிலும், உடலளவிலும் உதவுகிறது.
தொடர்ந்து இசையைக் கேட்டு வருவதாலும், பயில்வதாலும் பல நோய்களை குணப்படுத்த முடியும். அதே நேரத்தில் பல நோய்களில் இருந்து தப்பிக்கவும் முடியும். உடல் சோர்வினை நீக்கி, நாடி நரம்புகளை அமைதிப்படுத்தும் திறன் இசைக்கு உண்டு. சரிகமபதநிச என்ற ஸ்வரங்கள் நமது உடலில் இருக்கும் சக்கரங்களின் அதிர்வுகளைத் தூண்ட வல்லது. தினசரி இசையைக் கேட்பதால் இதயம், முகம், வயிறு மற்றும் குடல் ஆகிய உறுப்புகள் நலத்துடன் இருக்கும். மேலும், இது சுவாசக் கோளாறுகளையும் சரி செய்கிறது.
மனநோய்க்கு மிகச்சிறந்த மருந்தாக இசை பயன்படுகிறது. நமக்குப் பிடித்த இசையைக் கேட்பதன் மூலம் படபடப்பு, பயம் மற்றும் பதட்டம் போன்ற மனநோய்களை கட்டுப்படுத்தவும், மனபாரத்தை குறைக்கவும் முடியும். மேலும் இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருப்பதால், இரத்த அழுத்தமும் குறையும். இசையைக் கேட்கும் போது நமக்கு இருக்கும் கவலைகளை மறக்கிறோம். எந்தப் பிரச்சினையையும் நினைக்காது இசையுலகில் மிதப்போம் அல்லவா! இதனால் மனம் அமைதி பெற்று, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இருப்பினும் இசையை அதிக சத்தத்துடன் கேட்பதும் தவறான செயலாகும்.
இசையில் இருக்கும் சில குறிப்பிட்ட ராகங்களை நாம் கேட்கும் போது பித்தம், வாதம் மற்றும் கபம் ஆகியவை சமநிலைப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. வீணை, வயலின் மற்றும் சித்தார் போன்ற இசைக் கருவிகளின் இசையைக் கேட்டால், தலைமுடி கூட நீளமாக வளரும் என்று ஒரு ஆராய்ச்சி முடிவு கூறுகிறது.
டியர் காம்ரேட் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா, மனதளவில் பாதிக்கப்பட்ட நடிகை ராஷ்மிகா மந்தனாவை இசை தெரபியைக் கொண்டு குணப்படுத்துவார். இந்த இசைத் தெரபியில் மனதிற்கு இதமான ஒலியைக் தரும் இயற்கையின் இசைகள் தான் நிரம்பியிருக்கும். திரைப்படத்தில் காட்டப்பட்டது காட்சி தான் என்றாலும், இசைத் தெரபி நல்ல பலன் அளிக்கக் கூடியவை என சில ஆராய்ச்சி முடிவுகளும் தெரிவிக்கிறது.
உங்கள் மனதிற்கு பிடித்தமான மெல்லிய இசையை அடிக்கடி கேளுங்கள். மனதையும், உடலையும் ஆரோக்கியமாக மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.