
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் ஒரு உணவுப்பொருள் தயிர். பாலைப் புளிக்க வைப்பதன் மூலம் கிடைக்கும் தயிரில் லேக்டிக் அமிலம் நிறைந்துள்ளது. இதில் ப்ரோபயாடிக் எனப்படும் நல்ல பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் நிறைந்துள்ளன. இவை குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளாக மாற்றுகின்றன. மேலும் தயிரில் விட்டமின் B-2, B-12, மினரல்கள், பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம், பொட்டாஷியம் போன்ற சத்துக்கள் உள்ளன.
மீனில் குறைந்த கொழுப்பும் நிறைந்த புரதமும் உள்ளன. ஒமேகா3 பேட்டி அமிலங்களும் விட்டமின் D, B2 ஆகியவை உள்ளன. மீன் சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் D சத்து கிடைக்கிறது. மேலும், எலும்பு மற்றும் பற்கள் வலுவாக இருக்கும். மீனில் புரோட்டின், வைட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் உள்ளன.
ஆனால், இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடக்கூடாது என்கின்றன ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம். பொதுவாகவே, அசைவ உணவுகளுடன் தயிர் சேர்த்து சாப்பிடும் பழக்கம் நமது முன்னோர் உணவு முறையில் இருந்தது கிடையாது. ஏன் இந்த உணவு முறை தவிர்க்கப்பட்டது? இப்போதும் ஏன் தவிர்க்கப்படுகிறது தெரியுமா?
புரதம் நிறைந்த இரு உணவு வகைகளை ஒரே நேரத்தில் உண்ணக்கூடாது. மீனும், தயிரும் அதிக புரதச்சத்து மிக்கவை. தயிருக்கு பொதுவாகவே செரிமானத்தை மந்தப்படுத்தும் தன்மை உண்டு. சத்து அதிகமான மீனுடன் தயிரை சேர்த்து சாப்பிடும்போது செரிமானம் மேலும் மந்தமடையும். இதனால் உடலுக்கு எந்தவிதமான சத்தும் மீன் உணவு மூலம் கிடைக்காமல் போய்விடும். மேலும், வாயுத்தொல்லை, அசிடிட்டி, சரும நோய்கள் போன்ற உபாதைகள் ஏற்படும். எனவேதான், தயிரையும் மீனையும் சேர்த்து சாப்பிடக் கூடாது என்கிறார்கள்.