மக்கி கி ரோட்டி (Makki ki Roti) என்பது ஓர் உன்னதமான பஞ்சாபி உணவு. இதன் சுவையும் இதிலுள்ள ஆரோக்கியம் நிறைந்த ஊட்டச் சத்துக்களும் உண்பவர் எவரையும் திருப்திகொள்ளச் செய்யும். முக்கியமாக, குளிர் காலத்தில் இந்த ரொட்டியை உண்பதால் உடல் உஷ்ணம் குறையாமல் பாதுகாக்கப்படுகிறது. சம அளவு சோள மாவு மற்றும் கோதுமை மாவு சேர்த்துப் பிசைந்து தயாரிக்கப்படுகிறது இந்த மக்கி கி ரோட்டி. இதில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.
இந்த ரொட்டியில் உள்ள வைட்டமின் C யானது நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது; தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடி நோய் வரும் அபாயத்தைத் தடுக்கிறது.
இதிலுள்ள அதிகளவு நார்ச்சத்தானது ஜீரண மண்டல உறுப்புகளின் செயல்பாட்டை செம்மைப்படுத்தி, சீரான செரிமானத்திற்கு உதவி புரிகிறது. மேலும், கழிவுகள் நல்ல முறையில் வெளியேறவும் உதவுகிறது. நார்ச்சத்துக்கள் வயிற்றினுள் அதிக நேரம் தங்குவதால் பசியுணர்வு ஏற்படுவதில் தாமதம் ஆகிறது. இதனால் உட்கொள்ளும் உணவின் அளவு குறைந்து, உடல் எடை அதிகரிக்காமல் சமநிலையில் பராமரிக்க முடிகிறது.
சாச்சுரேட்டட் (saturated) கொழுப்பு இந்த ரொட்டியில் மிகக் குறைவு. இதன் காரணமாகவும், இதிலுள்ள அதிகளவு நார்ச்சத்துக்களின் காரணமாகவும் உடலில் உள்ள கொழுப்பின் அளவு குறைக்கப்படுகிறது; அதன் மூலம் இதய நோய் வரும் அபாயம் தடுக்கப்படுகிறது.
இந்த ரொட்டியில் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்களின் அளவு அதிகம் உள்ளது. இது உடலுக்குத் தேவையான சக்தியை நாள் முழுவதும் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும்.
இந்த ரொட்டிக்குத் தொட்டுக்கொள்ள வெல்லம் மற்றும் வெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது பருப்புடன் ஏதாவதொரு கீரை சேர்த்துத் தயாரித்த கீரை மசியல் வைத்துக்கொள்ளலாம். அப்போது நமக்குக் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் மேலும் அதிகரிக்கும்.