

கடிகார முள்ளோடு சேர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் நம்மில் பல பேருக்கு, காலை உணவைத் தயார் செய்யக் கூட நேரம் இருப்பதில்லை. இந்த மாதிரி அவசர நேரங்களில் நமக்குக் கைகொடுக்கும் ஒரு 'எளிதான நண்பன்' என்றால் அது பிரட் தான்.
இரண்டு துண்டு பிரட், கொஞ்சம் ஜாம் அல்லது வெண்ணெய் தடவினால் போதும், காலை உணவு தயார். ஆனால், சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் ஒரு பயங்கரமான செய்தி பரவி வருகிறது. "பிரட் சாப்பிட்டால் புற்றுநோய் வரும்" என்பதுதான் அந்த செய்தி. இது நம்மில் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. உண்மையிலேயே பிரட் அவ்வளவு ஆபத்தானதா? வாங்க, இதன் பின்னணியில் இருக்கும் உண்மையைப் பார்க்கலாம்.
ஏன் இந்த திடீர் சர்ச்சை?
இந்த சர்ச்சை கிளம்புவதற்கு முக்கிய காரணம், பிரட் தயாரிக்கும் முறையில் இருக்கிறது. பிரட், சப்பாத்தி அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற மாவுச்சத்து நிறைந்த பொருட்களை, அதிக வெப்பநிலையில் நாம் 'டோஸ்ட்' செய்யும்போதோ அல்லது பொரிக்கும்போதோ, 'அக்ரிலாமைட்' என்ற ஒரு ரசாயனம் இயற்கையாக உருவாகிறது.
இந்த ரசாயனத்தை ஆய்வகங்களில் விலங்குகளுக்கு அதிக அளவில் கொடுத்து சோதனை செய்தபோது, அவற்றுக்குப் புற்றுநோய் செல்கள் உருவாவது கண்டறியப்பட்டது. இந்த ஒரு விஷயத்தைப் பிடித்துக்கொண்டுதான், "பிரட் சாப்பிட்டால் மனிதர்களுக்கும் புற்றுநோய் வரும்" என்ற வதந்தி காட்டுத்தீ போல பரவத் தொடங்கியது.
நிபுணர்கள் சொல்வது என்ன?
விலங்குகளுக்குக் கொடுக்கப்பட்ட அக்ரிலாமைடின் அளவு மிக மிக அதிகம். நாம் தினமும் சாப்பிடும் ஓரிரு துண்டு பிரட் டோஸ்ட்டில் இருக்கும் அக்ரிலாமைடின் அளவு மிகவும் குறைவு. இரண்டாவதாக, விலங்குகளின் உடலமைப்பு வேறு, மனிதர்களின் உடலமைப்பு வேறு. விலங்குகளிடம் சோதித்து வெற்றி பெற்ற பல விஷயங்கள் மனிதர்களிடம் தோல்வியடைந்துள்ளது.
அந்த வகையில், பிரட்டில் இருக்கும் குறைந்த அளவு அக்ரிலாமைட், மனிதர்களுக்குப் புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதற்கு இதுவரை எந்த உறுதியான, நேரடியான அறிவியல் ஆதாரமும் இல்லை. அதனால், புற்றுநோய் வரும் என்ற பயத்தில் பிரட்டை முழுவதுமாகத் தவிர்க்கத் தேவையில்லை.
அப்படியானால், பிரட் சாப்பிடுவது நல்லதா?
புற்றுநோய் பயம் ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் நாம் சாப்பிடும் பிரட் ஆரோக்கியமானதா என்பதுதான் உண்மையான கேள்வி. கடைகளில் பளபளப்பான பேக்கெட்டுகளில் கிடைக்கும் பெரும்பாலான 'வெள்ளை பிரட்' (White Bread) சுத்தமான மைதாவால் செய்யப்படுகிறது. மைதா என்பது கோதுமையின் அனைத்து சத்துக்களும் நீக்கப்பட்ட ஒரு சக்கை போன்றது. இதில் நார்ச்சத்து துளிக்கூட கிடையாது.
இந்த மைதா பிரட்டை நாம் தினமும் காலையில் சாப்பிடும்போது, அது மிக வேகமாக ஜீரணமாகி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை 'கிடுகிடு'வென ஏற்றிவிடும். இதனால், கணையத்திற்கு அதிக வேலைப்பளு ஏற்பட்டு, நாளடைவில் நீரிழிவு நோய், உடல் பருமன் மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இளம் வயதிலேயே வருவதற்கு நாமே காரணமாகிவிடுகிறோம்.
சுருக்கமாகச் சொன்னால், பிரட் சாப்பிட்டால் உடனடியாக புற்றுநோய் வந்துவிடும் என்று பயப்படத் தேவையில்லை. ஆனால், அதை ஒரு தினசரி உணவாக, குறிப்பாக மைதாவால் செய்யப்பட்ட வெள்ளை பிரட்டைச் சாப்பிடுவது, உங்கள் ஆரோக்கியத்திற்கு நீங்களே வைத்துக் கொள்ளும் கொள்ளிதான். எப்போதாவது ஒருநாள் அவசரத்திற்குச் சாப்பிடுவதில் தவறில்லை.