
சமீபத்திய ஆராய்ச்சியின் அச்சுறுத்தும் தகவல் - சூயிங்கம் சுவைப்பதால் சுமார் நூரிலிருந்து ஆயிரம் வரை மைக்ரோ ப்ளாஸ்டிக்குகள் நம் உடலில் சேருகிறதாம். சின்தெடிக் மற்றும் இயற்கையான கம் இரண்டு வகைகளிலும் இந்த ஆபத்து உண்டு.
உடலிற்கு இதனால் கேடு ஏற்படக்கூடும். அமெரிக்க கெமிகல் சொசைட்டியின் ஆராய்ச்சியின் படி ஒரு கிராம் கம் மூலம் சுமார் 100 மைக்ரோ ப்ளாஸ்டிக் துகள்கள் நம் எச்சிலில் சேருகிறதாம். தினமும் இந்த சூயிங்கம் உட்கொண்டால், ப்ளாஸ்டிக் உடலில் சேர வாய்ப்புண்டு. ஆராய்ச்சியின்படி வருடத்தில் 30,000 முதல் 50,000 மைக்ரோ ப்ளாஸ்டிக்குகள் உடலில் சேருவதாக அறியப்படுகிறது.
மைக்ரோ ப்ளாஸ்டிக் எங்கும் நிறைந்துள்ளன. இது உணவு, பானங்கள் ப்ளாஸ்டிக் பாக்கேஜ் மூலம், ப்ளாஸ்டிக் காய்கறி அறியும் தட்டு மூலமும் மற்றும் ஸ்பான்ஜ்ஜுகள் மூலமும் உடலில் சேருகிறது. ப்ளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள், ப்ளாஸ்டிக் டீ பாகுகள் மூலமும் மைக்ரோ ப்ளாஸ்டிக் உடலுக்குள் செல்லும் வாய்ப்பு ஏற்படுகிறது.
சூயிங்கம் தயாரிக்க ரப்பர் போன்ற ஒரு இனிப்பு பயன்படுத்தப்படுகிறது. இயற்கையான சூயிங்கம்மில் செடி சார்ந்த பாலிமர் சேர்ப்பதால் அதை சுவைக்க முடிகிறது. சின்தெடிக் சூயிங் கம்மில் ப்ளாஸ்டிக் கலந்த பாலிமர் பயன்படுத்தப்படுகிறதாம். ஆராய்ச்சியில் சின்தெடிக் சூயிங்கம் உபயோகப் படுத்தியவர்களுக்கு மைக்ரோ ப்ளாஸ்டிக் எச்சிலில் கலந்தது அறியப்பட்டுள்ளது.
மேலும் சில வகையான சூயிங்கம்மை ஆராய்ந்ததில் அவற்றில் ஒரு கிராமிற்கு 600 மைக்ரோ ப்ளாஸ்டிக் இருப்பதாக தெரிகிறது. ஒரு சூயிங்கம் இரண்டிலிருந்து ஆறு கிராம் வரை எடை உள்ளது.
இந்த மைக்ரோ ப்ளாஸ்டிக்குகள் சுவாசப் பிரச்னை, செரிமானப் பிரச்னை மற்றும் நுரையீரல் புற்று போன்றவற்றை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. ஆகவே, நம் உடலுக்குத் கேடு விளைவிக்கும் சூயிங்கம் மெல்லும் பழக்கத்தைக் கைவிட்டால் தான் நம் உடலில் மைக்ரோ ப்ளாஸ்டிக் சேருவதைத் தடுக்க முடியும். குழந்தைகளுக்கு முக்கியமாக இந்தப் பழக்கம் இருந்தால் அதை உடனே தடுக்கவும்.