
நீண்ட நேர பயணங்கள் சிலருக்கு ஒத்துக் கொள்வதில்லை. பயணத்தின் போது ஏற்படும் இந்த உணர்வுகளை பொதுவாக பயண ஒவ்வாமை என்பார்கள். குறிப்பாக நீண்ட நேரம் பயணம் செய்யும் போது அல்லது கூட்டமாக இருக்கும்போது இந்த பிரச்னை அதிகரிக்கிறது.
பயணம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை அவர்களுக்கு வாந்தி, தலை சுற்றல், குமட்டல், வயிற்று பிரட்டல், சோர்வு போன்றவை ஏற்படுகிறது. இந்த பிரச்னைகளில் இருந்து ஒருவரை மீட்பது எப்படி என்று பார்ப்போம்.
1. பயண ஒவ்வாமை உள்ளவர்கள் எப்போதும் பஸ்ஸில் ஏறினால் முன் பக்க சீட்டுகளில் அமர்ந்தால் வாந்தி வரும் வாய்ப்புகள் குறைவு தான். காரிலும் அவர்கள் முன்பக்கம் அமர்வதே நல்லது. முன்புறத்தில் பெரும்பாலும் வாகனம் தூக்கிப் போடாது. குறிப்பாக பின்புறம், அதுவும் கடைசி இரண்டு சீட்டுகளில் அமர்ந்தால் அவ்வளவு தான்.
எப்போதும் ஜன்னல் ஓர இருக்கைகளை தேர்ந்தெடுங்கள். அது காற்றோட்டம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தான். ஜன்னலில் நீங்கள் வாந்தி எடுத்தால் பஸ் முழுக்க ஜன்னல் ஓரம் அமர்ந்தவர்களின் நிலை பரிதாபம். ஒரு வேளை வாந்தி வந்தால் குனிந்து ஒரு பாலித்தீன் கவருக்குள் எடுக்கவும்.
2. பயணத்தின் போது வெறும் வயிறாக இருக்காதீர்கள். இது வயிற்றுப் பிரட்டலையும், தலைச்சுற்றலையும் அதிகரிக்கும். பயணத்தின் போது பிஸ்கட், பன், எண்ணெய் குறைந்த தின் பண்டங்கள், ஆப்பிள், வாழைப் பழம் போன்றவற்றை சாப்பிடலாம். வயிறு கொஞ்சம் நிரம்பி இருந்தால் வயிற்று பிரட்டல், தலைச்சுற்றல் இருக்காது.
3. கூட்டமாக இருக்கும் வாகனங்களில் குலுக்கல் அல்லது அதிர்வுகள் அதிகரித்தால், தலைச்சுற்றல் அதிகரிக்கும். எனவே, உங்கள் தலையை நேராகவும், நிலையாகவும் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். காரின் ஹெட்ரெஸ்ட்டில் தலையை சாய்த்துக் கொள்ளுங்கள்.
4. ஜன்னல் ஓரமாக அமர்ந்தால் இயற்கை காற்று கிடைத்து உடலுக்குள் ஆக்சிஜன் பற்றாக்குறையை தடுக்கும். இதனால் தலைசுற்றல் குறைய வாய்ப்பு உள்ளது. அல்லது, காரில் ஏசியை உங்கள் பக்கம் திருப்புங்கள். இது சுவாசத்தை எளிதாக்கி குமட்டல் மற்றும் வயிற்றுப் பிரட்டலை குறைக்கும்.
5. அவ்வப்போது தண்ணீர் குடிப்பது வாந்தி வராமல் தடுக்கும். இஞ்சி டீ, சூடான காபி போன்றவை தலைவலி இருந்தால் உடனடி நிவாரணம் தரும், சோர்வையும் நீக்கும். பயணிக்கும் போது புளிப்பு மிட்டாய் வாயில் போட்டு சுவைக்கலாம்.
6. இதை விட இன்னொரு எளிய தீர்வும் உள்ளது. உங்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயணத்தின் போது வரும் வாந்தி, குமட்டல், தலை சுற்றல், வயிற்றுப் பிரட்டலை போக்க மாத்திரைகளை வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள். பயணத்தை மகிழ்ச்சியாக தொடருங்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)